ஒரு பெண்ணாக என்னுடைய ஆதங்கத்தை கொட்டி விடுகிறேன்.
இரு பாலர் பயிலும் பள்ளி அது. என் வகுப்பில் இருபது பேரும் பெண்கள். அப்பாடா! தப்பித்தேன்!! என்று பெருமூச்சு விட்டேன். அடுத்ததாக என்னை வதைக்க வரும் வலி அறியாமல்...
இரட்டையர்களில் ஒரு பெண். வளைகிறாள், நெளிகிறாள், என்னையும் பார்க்கிறாள், கூடவே தன் சகோதரியையும்.
நாம் தான் எந்நேரமும் கண்டிப்பான ஆசிரியை ஆயிற்றே. திரும்பாதே என்ற கண்டிப்பான குரலில், தான் சொல்ல வந்ததை மென்று முழுங்க முயற்சிக்கிறாள் அத்துடன் தன் வலியையும் சேர்த்து.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம். உண்மைதான் போல.. பொறுத்துக் கொள்ள முடியாமல் அவள் சகோதரி சொன்னாள், "மிஸ், அவளுக்கு பீரியட்ஸ் ரொம்ப ஆகுது, உடனே ரெஸ்ட் ரூம் போகனும்".
கன்னத்தில் பளீரென அறை வாங்கினாற் போல் உறைந்தேன். என் மகள் வயது நிரம்பிய குழந்தையின் வலி எனக்கு புரியவில்லையே?
அவள் எழுந்து சென்ற இடத்தில் இரத்தக்கறை. என் இதயத்திலும்..
அவள் சகோதரியிடம் கேட்டேன் " பேடு மாத்த வேற அவ கிட்ட இல்லையே? (நாம் தான் கர்ச்சீப் முதற்கொண்டு சோதனை செய்கிறோமே ) என்ன பண்ணுவா?" என.
"மிஸ், அவ ஒரு பேடு மேல இன்னொன்னு வச்சிருக்கா. ரெஸ்ட் ரூம்ல போயிட்டு மேல உள்ளத எடுத்துப் போட்டுடுவா" உடனடியாக பதில் வந்தது.
அவள் வந்தாள், தன் அந்தரங்கம்
எல்லோரும் அறிந்து கொண்டார்கள்
என்ற எண்ணமோ என்னவோ அவள்
இயல்பாக இல்லை அதன் பின்னால்.
முதன்மை கண்காணிப்பாளரிடம் விடைத்தாள்களை ஒப்படைத்த பின் உதவியாளரிடம் வினவினேன். "பிள்ளைகளுக்கு இப்படி ஒரு பிரச்சினை, இங்க எமர்ஜென்ஸிக்கு ஏதாவது குடுக்கிறீங்களா", என.
"இங்க இல்ல, ஆபீஸ்ல இருக்கு". உண்மை உரைத்தார் உதவியாளர்.
எப்படி நான் இதை எடுத்துக் கொள்ள?
ஊரக பகுதியில் உள்ள வளர்இளம் பெண்களுக்கு என free days என்ற பெயரில் 2011 முதல் குறிப்பிட்ட 17 மாநிலங்களில் 107 குறிப்பிட்ட மாவட்டங்களில் 6 ரூபாய்க்கு 6 நாப்கின்கள் வழங்கப்பட்டு பின் அது அனைத்து ஊரகப் பெண்களுக்கும் இலவசமாக்கப்பட்டது. ( நன்றி: Menstrual Hygiene Scheme (MHS), National Health Mission)
கடந்த பத்து ஆண்டுகளாக ஊரகப்பகுதிகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இத்திட்டம் சென்னை மேயர் ஆர்.பிரியா அவர்களால் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும்
அறிமுகப்படுத்தப்பட்டது. ( நன்றி : 14.12.2022 The Indian Express)
பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்துவதெல்லாம் சரிதான். ஆனால் வேண்டிய நேரத்தில் எல்லோருக்கும் கிடைக்கிறதா?
எல்லா அரசு பள்ளிகளிலும் நாப்கின் இயந்திரங்கள் உள்ளன. மின் எரியூட்டிகள் உள்ளன. ஆனால் பொதுத்தேர்வு நேரங்களில் மாணவிகளால் நாப்கின் இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை. எனக்குத் தெரிந்துசில பள்ளிகளில் அவை கழிப்பறைக்குள் இல்லை.
சிலரிடம் இது குறித்து நான் விவாதித்த போது எதிர்கொண்ட கேள்விக்கணைகளில் சில 1. எக்ஸாம் டைம்ல கூட நல்ல பேடு வாங்கிப்பயன்படுத்த முடியாதா? 2.எக்ஸ்ட்ரா பேடு கொண்டு வந்தா யார் என்ன சொல்லப் போறாங்க? 3. காரணம் சொல்லி ஆபீஸ்ல இருந்து வாங்கிக் கொடுத்திருக்கலாமே?
எவ்வளவுதான் விலை உயர்ந்த நாப்கின் ஆனாலும் சில நேரங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை அவை தாங்குவதில்லை. குறிப்பாக பொதுத்தேர்வு எனும் பயத்தில் மாணவியர் இருக்கும் போது.
மாணவ மாணவியர்கள் கைகளில் எழுது பொருட்கள் தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது. கர்ச்சீஃப் கதையை முன்னரே கூறிவிட்டேன்.
பெண்ணான என்னிடமே சொல்லத் தயங்கும்போது அந்த அறைக்கு ஓர் ஆண் ஆசிரியர் வந்திருந்தால்?
நான் மாதவிடாய் காலத்தில் இருக்கிறேன், எனக்கு நாப்கின் தேவை என துணிவுடன் உரைக்கும் நிலைக்கு இன்னும் நம் பெண்கள் வரவில்லை.
அப்படியே கேட்டாலும் அவர் அங்கு வரும் பறக்கும் படையிடமோ, நிலையான படையிடமோ சொல்லி, அவர்கள் அலுவலகம் சென்று வாங்கி வந்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்து, அவள் சென்று மாற்றிவந்து பின் எழுதுவதை தொடர்வதற்குள் பொதுத்தேர்வின் பொன்னான நிமிடங்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும்.
எல்லா வழிகளிலும் நம் இளைய தலைமுறையின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் நம் அரசை வேண்டிக் கொள்கிறேன். தேர்வு மய்யங்களில் நாப்கின்கள் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.
ஒரு சில பள்ளிகளில் தான் இந்த நிலையென்றாலும் அவர்களும் நம் பிள்ளைகள் அல்லவா?
அரசுக்கு இதனால் எந்த ஒரு அதிகப் படியான சுமையுமில்லை. ஏற்கெனவே நாம் அரசுப்பள்ளிகளுக்கு வழங்கும் நாப்கின்களையே நாம்பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றாலும் நம் பிள்ளைகளுக்கு நம் அரசு கண்டிப்பாக செய்யலாம்.
5 நாட்கள் மட்டுமே தேர்வு. தேர்வு எழுதும் எல்லா மாணவிகளும் பயன்படுத்தப் போவதில்லை. குறைந்தபட்சமாக ஒவ்வொரு தேர்வு மய்யத்திலும் 5 முதல் 10 பாக்கெட்களாவது எளிதில் கிடைக்கும் நிலையில் உள்ளதா என்பதை அரசு உறுதிப்படுத்தலாமே?
ஆதங்கத்துடன்,
சி.ப.செல்வி
No comments:
Post a Comment