ஆகமம் வேறு-வேதம் வேறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

ஆகமம் வேறு-வேதம் வேறு

பேராசிரியர் சங்கையா

ஆகமங்களின் காலங்களை சரியாகக்  கணிக்க முடியவில்லை என்றா லும் தோராயமாக பொ.ஆ.3-4 நூற்றாண் டாக இருக்கலாம் என்றே ஆய்வா ளர்கள் கருதுகின்றனர். ஆகமங்கள் என்பது  கோயில் அமைப்பதற்கான இடம், கட்டு மான முறை,சிலை அமைப்பு, முறை, வழிபாட்டு முறை, தேர் செய்யும் முறை திருவிழாக்கள் நடத்தும் முறை, குட முழுக்கு நடத்தும் முறை,கோயில் சார்ந்த நாட்டியம், இசை, சிற்பம், மற்றும் அர்ச்சகர்களின் ஒழுக்கம்  ஆகியவை களை பற்றிய விதிகள் அடங்கிய  இலக்கண தொகுப்பாக வந்தது. சுருக்கமாகக் கூற வேண்டு மென்றால் ஆகமம் என்பதற்கு பல பொருள் கள் உள்ளன. ஆகமம் என்ற சொல்லுக்குத்  தொன்று தொட்டு  ஊறி வரும் அறிவு அல்லது பழைமையானது, அல்லது வழிமுறை என்றே பல  பொருள் கொள்ளப்படுகிறது. ஆகமம்  என்பது தூய தமிழ்ச் சொல் என்றும், தமிழில்  தமிழர்களுக்காக ஆகமம் எழுதப்பட்டது என்றும் “எந்த ஒன்று உயிர்களுக்கு நிறை வான நிலைத்த இன்பத்தை கொடுக் கின்றதோ அதுவே ஆகம  அறிவு என்கிறார்  முதுமுனைவர் மு.பெ.சத்திய வேல் முருகனார். “மன்னு  மாமலை மகேந்திரம் அதனில்  சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்” என மாணிக்க வாசகரும்.

செந்தமிழ் சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே", நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே  என்று திருமூலர் பாடுவதும் அதைத்  தெய்வத்தமிழில் தான் அருளினேன் என்பதற்கு "என்னை நன் றாக  இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!" என்று கூத்தாடுவதும் தமிழர்களின் சைவத் துக்கும் ஆகமத் துக்கும் உள்ள நெருக்க மான உறவை உறுதிப் படுத்தும் சான்று களாகும்.

எல்லாக் கோயில்களும் ஆகம கட்டு மான முறைக் குள்ளும், வழிபாட்டு முறைக்குள்ளும் வந்து விடவில்லை. பவுத்தம், சமணம் உள்பட எல்லா சமயங் களுக்கும் ஆகமம் இருந்திருக்கிறது என்றாலும்  சிவன், விஷ்ணு, சக்தி ஆகி யோரை வழிபடும் தந்திர நூல்களையே பொதுவாக  ‘‘ஆகமம்’’  என்று குறிக்கிறது. சைவ ஆகம நெறி மகேஸ்வரம், பாசுபதம் எனப்பட்டன. வைணவ ஆகமங்கள் பாகவதம் (பகவானைப் பற்றியவை), சாத்தவாதம் (சாத்தவாத அரச பரம் பரையினர் பற்றியது.), பாஞ்சராத்திர என அழைக்கப்பட்டன. (பாஞ்ச ராத்திர என்றால் விஷ்ணு வழிபாட்டின் சிறப்புச் சடங்கு என்றும் பொருள் உண்டு. சாக்தம் ஆகம நூல்கள் தந்திரம் என்றும்   அழைக்கப்படுகின்றன. சைவத் தில் 28 ஆகமங்களும், வைணவத்தில் 108, (தற்போது இரண்டு.) சக்தி பற்றி 27 ஆகமங்களும் இருந்தன என்கிறார் ஆய் வாளர் மு.அருணாச்சலம். அவைகளில் பல கறையான் களுக்கு இரையாகிப் போயின. எஞ்சியவைகளை வைதீகம் களவாடிச் சென்றது.பவுத்தம் சமணம் சமயங்களுக்கும் மிருகேந்திர ஆகமங்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் முக்கியமானது என்னவென்றால் இந்த ஆகமங்கள் அனைத்தும் வேதங்களை அடிப்படையாகக் கொள்ளா தவை மட்டுமல்ல .அவை வேத ஆகமத்துக்கு எதிரானவை களாக இருந்தன என்கிறார் ஆய்வாளர், பேராசிரியர் பி.டி.சீனிவாச அய்யங்கார்.  மகாராஜன் குழு அறிக்கை “வேதங்களில் யாகம் சொல்லப்பட்டதே தவிர, ஆலய வழிபாடு சொல்லப்பட வில்லை. ஆகமங்கள் கோயில் களையும், வழிபாடு முறைகளையும் விரித்துச் சொல்கின்ற மூல நூலாகும்” என்கிறது.  

தமிழர்கள் கட்டிய சில கோயில்களில் மட்டுமே ஆகமங் களை இன்றைக்கும் பெருமளவில்  காண முடிகிறது.எனினும் பெரும்பான்மையான தமிழ்ச் சமூகம் ஆகம எல்லைகளுக்கு அப்பால் நின்று தங்களது பழைமையான வழிபாட்டு  முறை களில்  வழிபட்டு வந்தனர்.

அவர்களது சடங்குகள், வாழ்நெறிகள், வழிபாட்டு முறை கள் நாட்டார் மரபுகள் என்று அழைக்கப்பட்டன.ஸ்மார்த் தத்தில் உருவ வழிபாடு இல்லை. எனவே கோயில் களும் இல்லை. ஆகவே ஆகமமும் கிடையாது. இருப்பினும் இன்றைக்கு வட மொழியில் இருக்கும் ஆகமங்கள் அனைத்தும் தமிழர்களிடமிருந்து களவா டப்பட்டுச்  சிதைக் கப்பட்டவைகளே. தமிழர்களின் மொழியும், பண்பாடும், மரபுகளும் ஆரியர்களின் வருகைக்குப் பின் சிதைந்ததைப்  போன்றே பிற் காலத்தில் வேத ஆரியர்கள் கோயில்களை கைப்பற்றிய பின்  ஆகமம் தன் அடையாளம்  இழந்தது. ஆரியத்துக்குள் இரண்டறக் கலந்து  கரைந்தது.  வேதத்தின் தலைமையை அவை  ஏற்றுக்   கொண்ட தால் ஜாதி அடுக்கு முறையும் கேட்பாரின்றி நுழைந்தது.ஆரியம் நுழையும்  முன் பொதுவில்  கோயில்கள்  அனைவருக்கும் பொதுவானவைகளாக  இருந்தன. 

அனைத்து ஜாதியினருக்கும் அனைத்துக் கோயில்களின் கதவுகளை யும் ஆகமம்  திறந்தே வைத் திருந்தது. தீட்சை பெற்ற யாரும் அர்ச்சகர் ஆகலாம். ஆகமங்கள் அனைத்து மக்களுக்கும் உரியவையாக இருந்தன. இன்றைய நிலை யில், இவற்றையெல்லாம்  நம்புவதற்குக்  கடினமாக இருந்தாலும்   ஆரியர்கள் ஆலயங்களைக் கைப்பற்றும் முன் சமூக நிலைமைகள் இவ்வாறுதான் இருந்தது என்பதைத் தமிழ் இலக்கியங்களில் இருந்தும் வரலாற்றுச்  செய்திகளிலிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டின் கோயில்களைப் பார்ப் பனர்கள் கைப்பற்றுவதற்கு முன்பாக இருந்த  ஆகம விதிகள்  பற்றி அறிஞர் பி.சிதம்பரம் பிள்ளை தனது ஆலயப் பிரவேச நூலில் (அணிந்துரை -பெரியார்) ஆகமம் பற்றிய ஆய்வை மேற் கொண்ட  வரலாற்று ஆசிரியர் பி.டி.சிறீனிவாச அய் யங்கார் கருத்துக்களிலிருந்து சிலவற்றை சுட்டிக் காட்டியுள்ளார். 

“ஆகமங்களின்  அடிப்படையான  கொள்கை.

ஆகமங்கள்  வேத பிராமணர்களை கோயிலிலிருந்து தவிர்ப்பது மட்டுமின்றி அவர்களை ஆகம சமயத்துக்கு புறம்பான வர்களாகக் கருதுகின்றன.

ஒரு கோயிலில் அர்ச்சகராக அல்லது பூசாரியாக வருவதற்குள்ள ஒரே சோதனை தீட்சை மட்டுமேயன்றி ஜாதியோ வகுப்போ இல்லை.

தீட்சை பெறாத ஒரு பிராமணன் கோயில் சமையற்காரன் போன்ற கீழ்நிலை பணியாளனாக கூட இருக்க முடியாது.ஒரு ஹிந்துக் கோயிலின் கருவறைக்குள் அவன் நுழைய முடியாது. அங்குள்ள கடவுள் சிலையை  அவன் தொடவும் கூடாது.

பிராமணர்கள் போன்றும் இதர வகுப் பினரைப் போன் றும் ஒரு சண்டாளன் கூட தீட்சை பெற்றுக் கொள்ள முடியும்.

ஆகமங்களின் கொள்கைப்படி ,கோயிலில் நுழையவும் வழிபாடு செய்ய வும் ஜாதி முக்கியமில்லை.

ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் சலுகை காட்டவோ, வேறு வகுப் பினரை வெறுத்தொதுக்கவோ ஆகமங் களில் இடமில்லை.

கோயிலில் நுழையவும், தொழவும் ஜாதி முக்கியமில்லை என்ற போதும், தமிழ்நாட்டுக்  கோயில் வழிபாட்டு முறைக் கும், பண்பாட்டுக்கும், தமிழர் சமயத் திற்கும்  புறம் பானவர்களாக இருந்த  ஆரிய பார்ப்பனர்களைக் கோயில் கருவ றைக்குள், அனுமதித்தால் நாட்டுக்கும் அரசனுக்கும் கேடு  விளையும் என்கிற ஒரு விதமான நம்பிக்கை அன்றைய தமிழ் நாட்டில் நிலவி வந்தது. எனவே தான் தமிழ்  ஆகம மரபு, பார்ப்பனர்களை  நீண்ட காலமாக    கோயிலுக்குள் அனுமதிக் கவில்லை. 

"அன்பும் சிவமும் இரெண்டென்பர் அறிவிலார்" என்று பாடிய திருமூலரின் திருமந்திரமும் (519) 

பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் 

போர்கொண்ட வேந்தருக்கு பொல்லா வியாதியாம் 

பேர்கொண்ட நாட்டுக்கு பஞ்சமும்மாம் ன்றே 

சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே-519

அதாவது பார்ப்பனர்கள் அர்ச்சகராக இருக்கக் கூடாது. பார்ப்பனர்கள் கடவுளை அர்ச்சித்தால், போர்க் குணம் படைத்த நாடாளும் மன்னனுக்குக்  கொடிய நோய் உண் டாகும் .அதோடு நாட்டிலும் பெரிய பஞ்சமும் ஏற்படும் என்று கூறுகிறது.

“வேத சடங்குகளில் ஓவ்வொரு ஆகுதி பெய்யும் போதும் ஒரு மந்திரம் ஒலிக்கப்படும். ஆகம சடங்குகளில் வேத மந்திரங்கள் எதுவும் இடம் பெறுவதில்லை.

ஆகம வழிபாட்டில் இறைவனின் எண்ணற்ற பெயர் களைக் கூறி (வைதீகத் துடன் கலந்த பின்) நமஹ என முடிப்பர் (போற்றி/வணக்கம்). வைதீக சடங்கின் முடிவில் சுவாஹா என முடிப்பர்.

வைதீக வழிபாட்டில் அக்கினியில் அவியுணவுகளைப்  போடுவது அடிப் படையாகும். ஆகமத்தில் இறைவனுக்கு படையல் படைத்து வழிபாடு செய்து அதை அனைவரும் உண்பது மரபாகும்.

ஆகமத்தில் கடவுளுக்குப் பதிலியாக ஏதாவது ஒரு அடையாளத்தை வைத்து வழிபடுவர். அது வாளாகவோ, வேலா கவோ, கல்லாகவோ, மரமாகவோ, ஓவிய மாகவோ இருக்கலாம். வேத வழிபாடு என்பது உருவமற்ற வழிபாடு. ஆகம வழிபாடு உருவ வழிபாடு. எனவே இரண் டும் ஒன்றல்ல. என்கிறார் தமிழண்ணல்.”

('திராவிட பொழில்' காலாண்டிதழ், தொகுதி 3, இதழ் 1)


No comments:

Post a Comment