கிரிக்கெட் சூதாட்டம் இளைஞர் தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 16, 2023

கிரிக்கெட் சூதாட்டம் இளைஞர் தற்கொலை

கோவை, ஏப். 16- கோவை ஓட்டல் அறையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் இழந்ததால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் விசாரிக்கின்றனர். 

கோவையை அடுத்த பொள்ளாச்சியில் உள்ள சப்பட்டை கிழவன்புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம் (வயது 35). கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் ஆன்லைன் வழியாக பணத்தை செலுத்தி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்காக தொழிலில் கிடைத்த தொகை மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் கடன் வாங்கியும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. ஆனால், இதில் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. தவிர, கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சபாநாயகம் ஒரு வேலை விடயமாக கோவைக்கு சென்று வருகிறேன் எனக் கூறிவிட்டு, 14.4.2023 அன்று மதியம் கோவைக்கு வந்தார். காந்திபுரம் 7ஆவது வீதி விரிவாக்கப பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். நேற்று (15.4.2023) அதிகாலை அறையை காலி செய்து விடுவதாக சபாநாயகம் ஓட்டல் ஊழியர்களிடம் கூறியிருந்தார். ஆனால், கூறியபடி அவர் அறையை காலி செய்யவில்லை. ஹோட்டல் ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. அலை பேசியும் அணைக்கப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் மாற்றுச் சாவியை பயன்படுத்தி அறைக் கதவை திறந்து உள்ளே சென்றனர். குளியல் அறை அருகே, சபாநாயகம் அசைவற்று கிடந்தார். மருத்துவர்கள் தகவல் தெரிந்து அங்கு வந்து பார்த்த போது, சபாநாயகம் உயிரிழந்தது 5 மணி நேரத்துக்கு மேல் ஆனதும், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு உடற் கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் பங்கேற்று ரூ.90 லட்சம் வரை தொகையை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலாலும், கடன் நெருக்கடியாலும் விரக் தியடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், அறையில் சபாநாயகம் எழுதி வைத்திருந்த கடிதத் தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அதில்,‘ என் முடிவுக்கு நான் தான் காரணம். ரூ.90 லட்சம் தொகையை கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்து விட்டேன். தந்தை, தாயை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். தங்கையும், அவரது கணவரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்’’எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், சிலரது பெயரை எழுதிவிட்டு அடித்துள்ளார். அது தொடர்பாகவும் காவல்துறையினா விசாரித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment