லஞ்ச வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட கருநாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாதல் விருபாக்ஷப்பா, மேனாள் முதலமைச்சரும், லிங்காயத் பிரமுகருமான பி.எஸ் எடியூரப்பாவின் நெருங்கிய உதவியாளர் ஆவார். தாவங்கரே மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவர்.அவர் மீதும் அவரது மகன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், சில வாரங்களுக்குப் பிறகு பா.ஜ.க. எம்.எல்.ஏ கைது செய்யப் பட்டுள்ளார். விருபாக்ஷப்பா கருநாடக உயர் நீதிமன்றத்தில் முன் பிணை பெற்றார். பிறகு நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்ததையடுத்து, மக்கள் நீதிமன்ற காவல் துறையினர் அவரை தாவணகெரேவில் உள்ள அவரது தொகுதியான சன்னகிரியில் கைது செய்தனர்.
'கருநாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட் லிமிடெட் (KSDL) ' நிறுவனத்திடம் இருந்து மார்ச் 2 ஆம் தேதி மாலை 'டெண்டர்' பெறுவதற்காக லஞ்சம் வாங்கிய விருபாக்ஷப்பாவின் மகன் வி.பிரசாந்த் மடலை 'லோக் ஆயுக்தா' பிடித்ததாகக் கூறப்படுகிறது. பிரகாஷ் பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (BWSSB) தலைமைக் கணக்காளராக பணிபுரிந்தார், அதே நேரத்தில், விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ. மாநில பொதுத்துறை பிரிவின் தலைவராக உள்ளார். விருபாக்ஷப்பா கே.எஸ்.டி.எல்-லில் இருந்து பதவி விலகி வெளியேறினார்.
எம்.எல்.ஏ. விருபாக்ஷப்பா சில நாட்களுக்குப் பிறகு சன்னகரிக்கு மீண்டும் வந்தார். அவருக்கு முன் பிணை கிடைத்ததும், அவரது ஆதரவாளர்கள் தொகுதியில் பேரணி நடத்தினர். மேலும், சிலர் தாவணகெரேவில் உள்ள ஒரு கிராம கோவிலில் அவரது ஒளிப்படத்திற்கு பால் ஊற்றினர். பா.ஜ.க தலைமையிலான அரசுக்கு இந்த நிகழ்வுகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்தக் கைது நடவடிக்கை, தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சியை தாக்குவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் காரணங்களை வழங்க வாய்ப்புள்ளது.
72 வயதான விருபாக்ஷப்பா, சன்னகிரியில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மேலும், இவர் இந்த மாவட்டத்தில் மிகவும் பிரபலமான முகங்களில் ஒருவராம். இவர் லிங்காயத் சமூகத்தின் துணைப்பிரிவான சதர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் பா.ஜ.க-வில் சேர்ந்தார், 2008-இல் தனது முதல் தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
2012-இல் எடியூரப்பா பா.ஜ.க-வுடனான உறவைத் துண்டித்து, கருநாடக ஜனதா பக்ஷவை (கேஜேபி) தொடங்கிய போது, விருபாக்ஷப்பா அவரைப் பின் தொடர்ந்து வெளியேறி அவருக்கு தனது விசுவாசத்தை உறுதிப்படுத்தினார். அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வட்னல் ராஜண்ணாவிடம் தோல்வியடைந்தார்.
2014-இல் எடியூரப்பா பா.ஜ.க-வுக்குத் திரும்பிய பிறகு, விருபாக்ஷப்பாவும் பா.ஜ.க-வுக்கு வந்தார். 2018-இல், விரு பாக்ஷப்பா சன்னகிரி தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால், அவருக்கு அமைச்சரவையில் பதவி வழங்கப்படவில்லை.
பா.ஜ.க-வுக்கு உள்ளே இருப்பவர்களின் கருத்துப்படி, விருபாக்ஷப்பாவின் மற்றொரு மகன் மல்லிகார்ஜுன் மடலுக்கு அரசியல் ஆசை இருக்கிறது. அவர் பா.ஜ.க.வில் சட்டமன்றத்தில் இடம் வாங்க முயற்சிக்கிறார் என்கிறார்கள்.
லஞ்சம் கேட்டதாக மூத்த மகன் பிரசாந்த் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் கருத்துப்படி, பெங்களூரு கிரசென்ட் சாலையில் உள்ள தனது தந்தையின் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் போதுதான் பிரசாந்த் பிடிபட்டார். அங்கிருந்து ரூ.2.02 கோடி பணத்தை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து,பிரசாந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.6.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக "லோக் ஆயுக்தா" அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் தகவல் அறிக்கையில், விருபாக்ஷப்பாவை முக்கிய குற்றவாளியாகவும், பிரசாந்தை 2-ஆவது குற்றவாளியாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சுரேந்திரா, பிரசாந்தின் அலுவலகக் கணக்காளர்; பிரசாந்தின் உறவினர் சித்தேஷ்; மற்றும் கருநாடக அரோமாஸ் நிறுவனத்தின் களப் பணியாளர்களான ஆல்பர்ட் நிக்கோலா மற்றும் கங்காதர் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா கருநாடகம் வந்த போது, உதிர்த்த வாக்குதான் நகைச்சுவை விருந்தாகும்.
"தேச பக்தர்களின் கட்சியால் மட்டுமே ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்" என்று கூறி பிஜேபியை ஆதரிக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தது தான் அவர்களின் வாடிக்கையான வேடிக்கையாகும்.
No comments:
Post a Comment