தண்ணீரிலும் கண்ணீரிலும் தான் வாழ்க்கையா? வாரீர்! வாரீர்!! - ஜெகதாம்பட்டினத்திற்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 11, 2023

தண்ணீரிலும் கண்ணீரிலும் தான் வாழ்க்கையா? வாரீர்! வாரீர்!! - ஜெகதாம்பட்டினத்திற்கு

* மின்சாரம்

வரும் 14ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்தில் கடலில் பாதி நாளும், கரையில் மீதி நாளும்  வாழ்க்கையே அலையில் சிக்கி அவதியுறும் நமது மீனவ சமுதாய மக்களின் உரிமைக் குரலாக மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் கேள்விக் குறியாக எழுந்து நிற்கிறது அவர்களின் வாழ்க்கைப் படகு!

இவர்களின் பிரச்சினை கரை சேர்வது எப்படி? எப்பொழுது?

பல்வேறு சிக்கல்களின் வலைகளில் சிக்கி அவதியுறும் அவர்களின் கண்ணீருக்கு வடிகால் எது?

கச்சத்தீவை பறி கொடுத்த நிலையில் கண்ணீர் காவியமாகி விட்டது தமிழ்நாடு மீனவர்களின் அன்றாட வாழ்க்கை! பட்டுப்புடவையை இரவல் கொடுத்து, பின்னாலே ஜமக்காளத்தைத் தூக்கிக் கொண்டு அலையும் பெண்ணாக அல்லவோ ஆகி விட்டது நம் நாட்டின் நிலை!

இலங்கை கடற்படை என்னும் வெறி பிடித்த விலாங்கு தமிழ்நாடு மீனவர்களை அதிரடியாகத் தாக்குகிறது - சிறை பிடிக்கிறது - சித்திரவதை செய்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்கள் வாழ்வில் தென்றல் வீசும் என்று 56 அங்குல மார்பளவு உள்ள மோடிஜி நீட்டி முழங்கினாரே!

இப்பொழுது என்ன நிலை? குறிப்பிட்ட காலம் கழித்து இலங்கைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றாலும் அவர்களின் படகுகள் விடுதலை செய்யப்படுவதில்லை.

தொழிலுக்கு ஆதாரமான படகுகளைப் பறி கொடுத்த மீனவக் குடும்பங்கள் கரையில் தூக்கி எறியப்பட்ட மீன்களைப் போல் அல்லவோ துடி துடிக்கின்றனர்.

இதற்கெல்லாம் விடிவு காலம் தான் என்ன? பாதிப்புகளுக்குப் பரிகாரங்களே கிடையாதா?

வாருங்கள் தோழர்களே ஜெகதாம்பட்டினத்துக்கு!   புயலின் போது வானத்தைத் தொட்டுப் பிடிக்கும் பேரலையாக எழுவோம்!

உரிமைக் குரலை உலகம் கேட்கும் அளவுக்கு எழுப்புவோம். 

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மாநாட்டுக்குத் தலைமை ஏற்கிறார்.

தமிழர்கள் எந்த மூலையில் பாதிக்கப்பட்டாலும்   -- உடலில் எந்தப் பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் கண்களில் நீர் வடிவது போல -  நம்மினத்து மீனவர்களின் துயரங்களைத் துடைக்க திராவிடர் கழகம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. 

மீனவர் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு அனிதா ராதாகிருஷ்ணன், சட்ட அமைச்சர் மாண்புமிகு எஸ். இரகுபதி, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் 

சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரும் பங்கு ஏற்கிறார்கள்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம்  ஹலீம் பங்கேற்கிறார்.

மீனவர் நலனில் இப்பொழுதும் சிப்பாயாக இருந்து மீசை முறுக்கும் உரிமை முரசொலித்து முன்னணியினரும் முழங்க இருக்கிறார்கள்.

மாநாட்டுப் பணிகள் வாயு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளன. மீனவ சமுதாயத் தோழர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இம்மாநாட்டை நோக்குகின்றனர்.

எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் ஜோராய் கை தட்டி வரவேற்கின்றன.

கிழக்குக் கடற்கரைச் சாலை, கட்டுமாவடி, கிருஷ்ண ராஜிபட்டினம், புதுக்குடி, மணமேல்குடி, அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாம் பட்டினம், மீமிசல், ஆவுடையார் கோயில், எஸ்.பி. பட்டினம், தொண்டி முதலிய பகுதிகளில் மாநாட் டுக்குப் பராக்குக் கூறும் விளம்பரங்கள் வெகு மக் களைப் பேச வைத்துள்ளன. வியக்கத்தக்க வகையில் பார்த்து மகிழ்கின்றனர்.

மேற்கண்ட ஊர்களில் எல்லாம் கடந்த ஏப்ரல் 5 முதல் கழக இளைஞரணி தோழர்கள் தேனீக்களைப் போல பறந்துபறந்து கடை வீதி வசூலில் இறங்கி யுள்ளனர்.

இது வெறும் நிதி வசூல் அல்ல; விலை மதிக்க முடியாத மாநாட்டின் விளம்பர யுக்தி!

வணிகப் பெருமக்கள் வரவேற்று நன்கொடை களை அள்ளித் தருகின்றனர்.

இது ஏதோ மீனவர்களை மட்டுமே பொருத்த மாநாடாக மக்கள் கருதவில்லை.

நாட்டு மக்களின் மிக முக்கிய அங்கமான பிரச்சினைக்கான மாநாடாகக் கருதுகிறார்கள்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மீனவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் திரள்வதாக தினந்தோறும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

இது ஒரு கட்சி சம்பந்தப்பட்ட மாநாடாக மக்கள் கருதவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு, எதையும் விரிந்த பார்வையில், வெளிச்சமாக சிந்திக்கும் சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் நடத்துவதால் இதனை  ஒரு பொது மாநாடாகவே நோக்குகிறார்கள்.

வாருங்கள் தோழர்களே! வங்கக் கடலாக அலை யடித்து வாருங்கள்! எந்த மன்றமும் சாதிக்காததை வீதி மன்றமே சாதிக்கும் - வெற்றி நமதே, விரைவீர்! விரைவீர்!!


No comments:

Post a Comment