சமூகநீதியை எதிர்த்தவர்கள் இப்போது இட ஒதுக்கீடு கேட்கும் நிலை உருவாகிவிட்டது
இட ஒதுக்கீடு பிரச்சினையில் நீதிமன்றங்கள் ஜாதி தொடர்பான தரவுகளைக் கேட்கும் நிலையில், இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் எல்லாம்கூட இப்பொழுது இட ஒதுக்கீட்டைக் கேட்கும் நிலையில், இனியும் தாமதமின்றி ஜாதி வாரிக் கணக்கெடுப்பை உடனே தொடங்கவேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சமூகநீதி அனைவருக்கும் கிட்டும் வகையில், இட ஒதுக்கீட்டின் தேவையை வற்புறுத்தி வரும் கோரிக்கை அனைத்துத் தரப்பினரிடையே பலமாகி வருகிறது; ஏன், பார்ப்பனர்கள்கூட தங்கள் ஜாதிக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று தீர்மானங்களைப் போடுகிறார்கள்!
முதல் சட்ட திருத்தம் எப்படி வந்தது?
இத்தகைய கோரிக்கைகளின் நியாயத்தை முற்றும் உணர்ந்துதான், வகுப்புவாரி உரிமை (Proportional Representation) என்ற அனைவருக்கும் அனைத்தும் தரும் ஆணை சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பே, திராவிடர் ஆட்சி நிறைவேற்றி, சமூகநீதிக்குப் பச்சைக் கொடி காட்டியது!
அதனை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் திற்கு படையெடுத்து ‘அல்லாடியார்'களும், (அவர் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உறுப்பினராக இருந்த நிலைபற்றிக்கூட எண்ணாமல்) மானம் - மதிப்பைவிட தம்மின வாழ்வு முக்கியம் எனத் திட்டமிட்டே சில அரசமைப்புச் சட்டக் கூறுகளைக் காட்டி, கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று தீர்ப்புப் பெற்று, மகிழ்ச்சிக் கொண் டாட்டம் நடத்தினர்.
அதை எதிர்த்துத் தந்தை பெரியார், திராவிட இன உணர்வாளர்களை, எக்கட்சியினராயினும் சமூகநீதியில் நம்பிக்கையாளர்களாக இருந்தவர்களை ஒருங்கிணைத்து - அழைப்பு விடுத்து, பெருந்திரள் மக்கள் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக, இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முறையாகத் திருத்தப்பட்டது. சமூகநீதியின் முக்கிய அங்கமான படிப்பில் இட ஒதுக்கீடு பிரிவு நுழைவுதான் இட ஒதுக்கீட்டிற்குக் கதவு திறக்க வாய்ப்பளித்த பிரிவு ஆகும்!
சமூகநீதி தேவை என்ற கோரிக்கை
வலுபட்டு வருகிறது!
இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் அது கலங்கரை வெளிச்சமாகியது - அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் விழிப்புணர்வைப் பெற்று - மக்கள் ஜனநாயகம், தங்களது கல்வி, உத்தியோகப் பங்களிப்பு உரிய வகையில் பெற்றிட சமூகநீதி பரவலாக்கப்படல் வேண்டும்; அத்துடன் மாநில அரசு, ஒன்றிய அரசு இரண்டு அரசுகளுக்கும் பொருந்தும் வகையில், சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் வழி வகைக் கண்டாக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கிவிட்டது.
மக்கள் குரலை அலட்சியப்படுத்த முடியாது; கட்சி களுக்கு அப்பாற்பட்டு அதன் நியாயங்களை ஏற்பதைத் தவிர, ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு வேறு வழியில்லை.
தாங்களே முன்பு சொன்ன கருத்துகளை மாற்றிக் கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளாகி வருகின்ற காட்சி தென்படுகிறது!
முன்பு 69 சதவிகிதத்திற்கு எதிராக 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்பது அரசமைப்புச் சட்ட விதிகளில் இல்லாத உச்சவரம்பை, நீதிமன்றத்தின் மூலமே ஏற்படுத்திக் கொண்டு, EWS என்ற உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு 10 விழுக்காடு என்ற புது சட்டத்தை உருவாக்கியுள்ளது; 50 சதவிகிதத்தைத் தாண்டுகிறது என்பதற்கு மட்டும் தலையாட்டி, பெரும்பான்மை தீர்ப்புமூலமும் ஏற்கத் தயாராகிவிட்டனர்.
எனவே, 50 விழுக்காடு உச்சவரம்பு உடைபட்டு, சுக்கல் நூறாகிவிட்டது! இதனால் மற்ற மாநிலத்தில் உள்ள உண்மையில் ஏழைகளான ஒடுக்கப்பட்டோரும், ஆதி திராவிடரும், பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்டோரும் 77 சதவிகிதம்வரை இட ஒதுக்கீடு கேட்கின்றனர்!
இது சம்பந்தப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திற்கு வரும்போது, நீதிபதிகள் இட ஒதுக்கீட்டினை நிர்ணயம் செய்யும் உரிமை மாநில (State) அரசுக்குத் தான் உண்டு (நீதிமன்றங்களுக்கு அல்ல என்பதையொட்டி) என்ற வாதங்கள் எழுகின்றன.
இட ஒதுக்கீடு வழக்குகளில் நீதிமன்றங்கள் கேட்கும் கேள்வி என்ன?
அப்போது அதற்குரிய Quantifiable Data தொகுக் கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உண்டா என்று கேட்கிறபோது, இப்படி ஒரு கணக்கெடுப்பை நடத்தி, பத்து ஆண்டு சென்சஸ்களாக்கிக் காட்டினால், பல வகையில் அது பலன் அளிக்கும் - பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், ஜாதியை ஏற்பதாகிவிடும் என்ற ஒரு போலிச் சாக்குப் போக்குவாதத்தை சிலர் முன்வைக்கின்றனர்.
ஜாதி ஒழிந்துவிட்டதா, நடைமுறையில்? தேர்தலில் அந்தக் கணக்கு ‘‘பேயாட்டம்'' ஆடவில்லையா?
ஆணவக் கொலைகள்மூலம் தலைவிரி கோலமாய் ஜாதி அதன் அகோர உருவத்தைக் காட்டவில்லையா?
அதற்கெல்லாம் வாய் திறவாத மேதைகள், சமூகநீதிக்கு மட்டும் அய்யோ, ஜாதி அடிப்படையிலா என்று நீலிக் கண்ணீர் வடிப்பதா?
ஜாதி ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கிள்ளிப் போட மனமில்லாத, இந்தப் பகல் வேஷ ஜாதிக் காப்பாளர்கள் இப்படி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்த ஆயுதம்தான் இனி நமக்கு இருக்கும் என்று கருதித்தானே இப்படி ஒரு ‘புது அவதாரம்' எடுக்கின்றனர்?
‘இந்து' ஏடே ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்துகிறதே!
இன்று (20.4.2023) இந்து ஆங்கில நாளேடு - இதுவரை ஜாதி வாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து வந்த ஏடு, தங்கள் நிலைப்பாட்டை மாற்றி, அது தார்மீக அடிப்படையில் சங்கடமானதுதான் என்றாலும், இட ஒதுக்கீட்டுக்கும் மற்ற பல தேவைகளுக்கும் ஜாதி வாரி கணக்கெடுப்புத் தேவையே என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டது - இது வரவேற்கத்தக்கது. காலம் பல பாடங்களைப் பலருக்கும் கற்றுத் தருகிறது! மூடிய கண்கள் திறக்கப்படுகின்றன!
நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட பல வழக்குகள். உதாரணம் - மும்பை மராத்தியர்கள் இட ஒதுக்கீடு; தமிழ்நாட்டில் வன்னியர் உள்பட சில ஜாதிகளுக்கு உட்பிரிவு இட ஒதுக்கீடு வழக்குகளில் இதுதானே நீதிமன்றங்களின் ‘ரெடிமேட்' கேள்வியாகிறது?
எனவே, ஒன்றிய அரசு மேலும் காலதாமதம் செய் யாமல், ஜாதி வாரி கணக்கெடுக்கும் பணியை முன்பு செய்ததுபோல, ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி அலுவலகம் (சென்சஸ் கமிஷனர்) அமைத்து தொடங் குவது அவசர, அவசியமாகும்!
ஆளுங்கட்சி பீகாரில் (ஜனதா தள்), எதிர்க்கட்சி (காங்கிரஸ், இடதுசாரிகள்) உள்பட அனைவரும் அந்த அடிப்படைக் கணக்கெடுப்பை வற்புறுத்தும் நிலையில், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்றவைதான் ஏற்கெனவே இதற்கு வழிகாட்டிகளாக இருந்து வந்துள்ளன.
எனவே, உதவாதினி தாமதம், உடனே செயல்படுக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.4.2023
No comments:
Post a Comment