புரட்சிக்கவிஞர் நினைவு நாளில் தமிழர் தலைவர் சூளுரை
புரட்சிக் கவிஞரின் நினைவு நாளான இன்று (21.4.2023) அவர் விரும்பிய வகையில் சனாதனத்தைச் சாய்த்து, சமதர்மம் படைப்போம் என்ற சூளுரையை ஏற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தந்தை பெரியார் என்ற தலைசிறந்த சுயமரியாதை இயக்க நிறுவனத் தலைவருக்குப் பற்பல களங்களில், பலவகை தளபதிகள் உண்டு!
அப்போர்ப் படையில் இணைத்துக்கொண்டு, தமது பங்களிப்பைத் தளராது தந்து, மறைந்தும் மறையாமல், திராவிடர் இன எழுச்சியின் வரலாற்றை உருவாக்கி, என்றும் மக்கள் நெஞ்சில் நிறைந்தவர்களாகி விட்டவர் களில் முதன்மையானவர் தமிழ் இலக்கியத் துறையில் இணையற்ற சாதனை புரிந்து புகழ்நாடா, கொள்கைக் கவிஞர் நம் புரட்சிக்கவிஞர்!
அவரது நினைவு நாள் இன்று (21.4.1964)!
அந்த அரிமாவின் கவிதைகள் சனாதன மலை களையே தகர்க்கும் தனித்த ‘புல்டோசர்' போன்றவை!
என்றென்றும் நம்மிடையே வாழ்கிறார்!
வீழ்ச்சியுறு தமிழ்நாட்டில் எழுச்சியை ஏற்படுத்தவே அவர் ஏடெடுத்தார்; எழுதினார்; சுயமரியாதை உலகு தனை உருவாக்கப் பெரும் பங்காற்றி என்றென்றும் நம்மிடையே வாழ்கிறார்!
நெஞ்சிற்பட்ட கருத்தை வெளியிடுவதிலும், அந்த ‘வெடிகுண்டு' கவிஞர் எவருக்கும் அஞ்சி ஒதுங்கியதோ, பதுங்கியதோ கிடையாது!
‘வருவாய்' - ‘புகழ்' - அவருக்குத் துச்சம்!
தன்மானமும், இனமானமும், பகுத்தறிவும் என்றும்
அவரது எச்சம்!!
‘‘மனுவின் மொழி அறமானதொரு நாள் - அதை
மாற்றியமைக்கும் நாளே தமிழர் திருநாள்!''
என்று முழங்கி, இலக்கை நமக்கு நினைவூட்டிய புரட்சிக்கவிஞரின் நினைவு நாளில், அதே சூளுரையைப் புதுப்பித்து, சனாதனத்தைச் சாய்த்து, சமதர்மத்தை அரியணை ஏற்றுவோம்!
வாழ்க புரட்சிக்கவிஞர்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.4.2023
No comments:
Post a Comment