வைக்கம் போராட்டத்தில் பெரியாருக்குப் பங்கு இல்லை என்று பார்ப்பனர்கள் ஏன் கூப்பாடு போடுகிறார்கள் என்றால்,
தந்தை பெரியாருக்குப் பெருமை
வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்!
சென்னை, ஏப்.19 வைக்கம் போராட்டத்தில் பெரியாருக்குப் பங்கு இல்லை என்று பார்ப்பனர்கள் ஏன் கூப்பாடு போடுகிறார்கள் என்றால், பெரியாருக்குப் பெருமை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
ஏன்? எதற்காக?
கடந்த 10.4.2023 ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?’’ என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவில் முதல் நாள் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நீங்கள் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென் றால், தந்தை பெரியாரின் சிலையை மூடி கட்டி வைத் திருந்தார்கள். நீண்ட நாள்களாக இந்த சிலையை மூடியே இருக்கிறதே, பெரியார் சிலையைத் திறக்கவேண்டாமா? தமிழ்நாடு முதலமைச்சர் என்ன செய்கிறார்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா
அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள், நாவலரையும், என்னையும் அழைத்தார். “நீங்கள் இரண்டு பேரும் வைக்கத்திற்குச் சென்று அந்த சிலைத் திறப்பு விழாவினை நடத்துங்கள். உங்கள் தலைமையில், நாவலர் அவர்கள் சிலையைத் திறந்து வைக்கவேண்டும்'' என்று சொன்னார்.
என்னுடைய தலைமையில்தான் வைக்கத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு நாம் அந்த இடத்திற்குப் பலமுறை சென்றிருக்கின்றோம். இன்றைய முதலமைச்சர் அவர்கள், அந்தத் திட்டங்களை விரி வாக்கி, பல திட்டங்களை வகுத்திருக்கிறார். இங்கே பழ.அதியமான் அவர்கள் சொல்லியதுபோன்று நமது முதலமைச்சர் எதையும் தெளிவாகச் செய்யக்கூடியவர்.
பார்ப்பனர்களால்
சகித்துக் கொள்ள முடியவில்லை
சிலை திறந்து, அய்யாவிற்கு மிகப்பெரிய அளவிற்கு மரியாதை வருகின்றது என்றவுடன், பார்ப்பனர்களால், குறிப்பாக சோ போன்றவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. உடனே ஒரு பிரச்சாரத்தை ‘துக்ளக்'மூலம் ஆரம்பித்தார்கள்.
ஜெபமணி என்கிற ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார். அவரை விட்டு, ‘‘பெரியாருக்கும், வைக்கம் போராட்டத் திற்கும் சம்பந்தமேயில்லை. பெயருக்கு முன்னால் வைக்கம் வீரர் என்று இவர்களே போட்டுக் கொள் கிறார்கள்'' என்றெல்லாம் அவர் சொன்னார்.
‘‘குருதேவ தர்மம்'' என்கிற ஒரு பத்திரிகை - பெரி யாருக்கும், வைக்கம் போராட்டத்திற்கும் சம்பந்த மில்லை'' என்று செய்தி வெளியிட்டது.
பேராசிரியர் கு.வெ.கி.ஆசான்
அந்தப் பத்திரிகையின் வாதம் எவ்வளவு தவறானது என்பதை நம்முடைய பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள், அருமையான ஒரு விளக்கத்தை ‘‘வைக்கம் போராட்டம் ஒரு விளக்கம்'' என்கிற நூலில் வரிக்கு வரி ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறார்.
அன்றைய காலகட்டத்தில் பழ.அதியமான் அவர் களின் ஆய்வு நூல் வெளிவரவில்லை.
‘‘வைக்கம் போராட்டம் வரலாறு'' என்கிற தலைப் பிலும் நானும் ஒரு புத்தகத்தை ஏற்கெனவே எழுதி யிருக்கிறேன்.
‘‘காந்தி அன்ட் வைக்கம் சத்யாகிரகா’’
அதைவிட மிக முக்கியமான ஒரு நூல் - கேரளத்தைச் சேர்ந்த மலையாளப் பேராசிரியர் எழுதிய ‘‘காந்தி அன்ட் வைக்கம் சத்யாகிரகா'' புத்தகம். அவரே இந்தப் புத்தகத் தின் தலைப்புகளை மாற்றியிருக்கிறார்.
டாக்டர் டி.கே.ரவீந்திரன் என்கிற அந்த வரலாற்றுப் பேராசிரியர் அவர்கள், வைக்கம் போராட்டம்பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார். பெரியாருக்கும், காந்தி யாருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து உள்பட எல்லா தகவல்களையும் எடுத்துப் பதிவு செய்திருக்கிறார்.
ஆக, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், வைக்கம் போராட்டத்தில், பெரியாருக்குப் பங்களிப்பே இல்லை என்று ‘துக்ளக்' சோ சொன்னார்.
அதற்குப் பிறகு, அதே வழியில் கேரளத்தில் இருந்து வெளிவரக்கூடிய ‘‘குருதேவ தர்மம்'' என்ற புத்தகத்தில் இதுபோன்ற செய்தியை வெளியிட்டார்கள்.
பெரியாருக்குப் பெருமை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்!
ஏனென்றால், அந்தப் பெருமை பெரியாருக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக இதையெல்லாம் செய் தார்கள். முதலில் ஜெபமணியை பிடித்து சொல்லச் சொன்னார்கள்.
அதை மறுத்து, ‘விடுதலை'யில் நம்முடைய கவிஞர் அவர்கள் பதில் எழுதினார். அந்தப் பதிலுக்கு, அவர்கள் சரியான பதிலை எழுதவில்லை. மீண்டும் நான் சோவிற்கே பதில் எழுதினேன்.
இன்றைக்கு குருமூர்த்திகள், கூறுகெட்டவர்கள், வைக்கம் போராட்டத்தில் பெரியாருக்கு என்ன பங் களிப்பு இருக்கிறது? என்று கேட்கிறார்கள்.
பெரியாருக்கு இருக்கின்ற பங்களிப்பு என்ன என் பதைப்பற்றி இன்றைக்கு நாடே பேசுகிறது. இதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இப்பொழுதும் இருட்டடிப்பு வேலைகளில் ஈடுபடு கிறார்கள். ஜெயமோகன் என்கிற ஒருவர், பிறப்பால் பார்ப்பனர் அல்ல. உணர்வால் முழுக்க முழுக்க ஒன்ற ரைப் பார்ப்பனர். அவர் கன்னியாகுமரியில் பிறந்தவர். இலக்கியவாதி என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்.
‘‘வைக்கம் வீரர் யார்?
ஜெயமோகனுக்கு மறுப்பு’’
ஜெயமோகன் புரட்டைப்பற்றி நம்முடைய மஞ்சை வசந்தன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரை நன்செய் பதிப்பக வெளியீடாக சிறு நூலாக வெளிவந்துள்ளது. ‘‘வைக்கம் வீரர் யார்? ஜெய மோகனுக்கு மறுப்பு'' என்ற தலைப்பில். அருமையான ஒரு சிறப்பான நூல் அது.
‘முரசொலி’யில் வந்த செய்தி
சில நாள்களுக்கு முன்பு ‘முரசொலி'யில் வந்த செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.
‘‘வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை மக்களிடம் கொண்டு செல்ல, தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங்களும் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில், வைக்கம் போராட் டத்தில் பெரியாரின் பங்கு குறித்து எழுத்தாளர் ஜெய மோகன், உண்மைக்குப் புறம்பான தகவல்களை முன் வைக்க, அவருக்குப் பலரும் எதிர்வினை ஆற்றி வந்தனர்.
வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு என்பது, திராவிட இயக்கத்தவரின் மிகைக்கூற்று என ஜெய மோகன் முன்வைத்த கருத்துக்கு, பத்திரிகையாளர் சுகுணா திவாகர் உள்ளிட்டோர் ஆதாரப்பூர்வமான மறுப்புகளை முன்வைத்து எழுதினர்.
அந்த மறுப்புகளுக்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல், மவுனமாக இருந்தார் ஜெயமோகன்.
வைக்கம் போராட்டத்தின் வரலாற்று நினைவலை களை இரு மாநில அரசுகளும், புதிய நோக்கத்தில் முன் னெடுத்ததும், ஜெயமோகனின் புரட்டுக் கருத்துகளும் வேகமெடுத்தன.
சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ‘வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங் கெடுத்தார் என்பதை மறுப்பதற்கு இல்லை' என்ற புதிய விளக்கத்தை, பழைய புரட்டுகளுடன் சேர்த்துக் கொடுத்துள்ளார்.
வரலாற்றுப் புரட்டுகளைக் கேள்வி கேட்கும் தலை முறையிடம் வரலாற்றை மாற்ற நினைப்பவர்கள் தோற்கத்தான் வேண்டும். ஜெயமோகன் அதற்குத் தமிழ் நாட்டு உதாரணம்'' என்று ‘முரசொலி'யில் தெளிவாக எழுதினார்கள்.
ஆகவே, நண்பர்களே! இதை எதற்காகச் சொல்கி றோம் என்றால், வைக்கம் போராட்டம், எத்தனைப் போராட்டத்திற்கு அடித்தளமாகவும், பண்ணையாகவும் இருந்திருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொண் டீர்கள்.
முழுப் பூசணிக்காயை அல்ல - முழு ஆலமரத்தையே மறைக்கக்கூடிய அளவிற்கு...
வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு இல்லை என்றால், முழுப் பூசணிக்காயை அல்ல - முழு ஆல மரத்தையே மறைக்கக்கூடிய அளவிற்கு வந்திருக் கின்றார்கள்.
நாளைய தினம் நடைபெறும் சொற்பொழிவில், மேலும் பல சுவையான தகவல்களையும், நீங்கள் அறிய வேண்டிய செய்திகளைப் பார்ப்போம்.
நாளை சந்திப்போம்!
வாழ்க பெரியார்!
வளர்க வைக்கம் நூற்றாண்டு விழா வெற்றிகள்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
No comments:
Post a Comment