சென்னை,ஏப்.12- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? எனும் தலைப்பில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் இம்மாதம் 10,11,13 ஆகிய மூன்று நாள்களில் சிறப்புக்கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று (11.4.2023) இரண்டாம் நாள் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
பெரியார் வலைக்காட்சி வாயிலாக உலகின் எந்த மூலையிலிருந்தும் நேரலையைக் காணும் வாய்ப்பு வசதி ஏற்படுத்தப் பட்டிருந்தாலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையைக் கேட்க சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்திலிருந்து பலரும் திரண்டு விட்டனர்.
சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தமிழர் தலைவர் பேருரைக்கான கூட்டத்தின் இரண்டாம் நாள் கூட்டம் நேற்று (11.4.2023) மாலை நடை பெற்றது.
வைக்கம் நூற்றாண்டு விழா-
காட்சிப்பதிவு திரையிடல்
கூட்டத் தொடக்கத்தில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எழுத்தாளர் கி.தளபதிராஜ் இயக்கத்தில் ஆவணப்பதிவாக உருவாக்கப்பட்ட, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டிய நேரடி காட்சிப்பதிவு திரையிடப்பட்டது. அக்காட்சிப்பதிவைக் கண்ணுற்ற பார்வை யாளர்கள் வைக்கத்துக்கே நேரில் சென்று கண்ட உணர்வைப் பெற்றனர்.
அக்காட்சிப்பதிவில் ஆய்வாளர் பழ.அதியமான் வைக்கம் போராட்ட வரலாற்று நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டு, அந்தந்த பகுதிக்கு தொடர்புடைய பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.
வைக்கம் போராட்டத்துக்கு தந்தைபெரியார் சென்ற படகுத்துறை, அவருக்கு அங்கே அரசு சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு, அதனை ஏற்காமல் போராட்டத்துக்கு சென்று கைதான தந்தை பெரியார் அடைக்கப்பட்ட காவல்நிலைய சிறைக்கூடம், வைக்கம் போராட்ட சத்தியாகிரகிகளுக்கு உணவு, உறைவிட வசதிகளை அளித்த நாராயணகுருவின் ஆசிரமம், 1924 முதல் 1925 வரை தொடர்ந்த வைக்கம் போராட்டத்தின் முதல் நிகழ்வாக மூன்று பேர் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்கையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அந்த காட்சிக்குரிய பகுதியில் தடுப்புக்கு முன்பாக மூன்று பேர் உருவம் அமைக்கப்பட்ட காட்சியை விளக்கிக்கூறினார்.
வைக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவகம், தந்தைபெரியார் உருவச்சிலை மற்றும் வைக்கம் தந்தைபெரியார் நினைவகத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல் களை விளக்கமாக எடுத்துரைத்தார் ஆய்வாளர் பழ.அதியமான்.
வைக்கம் போராட்டம் குறித்த சமாதானப் பேச்சு வார்த்தையில் காந்தியார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட இடம், பார்ப்பனர் ஒருவரின் இல்லத்துக்குள் அனுமதிக்கப் படாமல், அவர் பார்ப்பனர் அல்லாதாராகவும், கடல் கடந்து சென்று வந்தவர் என்பதாலும் காந்தியாரை உள்ளே நுழைய விடாமல் வெளியே வைத்து பேசிய சனாதனக் கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வைக்கம் போராட்ட வெற்றிக்குப்பின்னர் அதே இடத்தில் இன்று அனைவரும் செல்லும் வாய்ப்பையும்,கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினருடனான உரையாடல்மூலம் எடுத்துக் காட்டினார்.
பேரா.அ.கருணானந்தன் தொடக்க உரை
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேரா சிரியர் அ.கருணானந்தன் தொடக்க உரையாற்றினார். அவருக்கு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
புத்தக வெளியீடு
முதல் நாள் கூட்டத்தைப்போல், புத்தகங்கள் வெளியீட்டில் பலரும் வரிசையில் நின்று வைக்கம் தொடர்பான புத்த கங்களை தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் கோ.ஒளிவண்ணன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பெ.ஜெகதீசன், தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் பொறியாளர் த.கு.திவாகரன், வழக்குரைஞர் துரை.அருண், மண்டல செயலாளர் தே.செ.கோபால், கவிஞர் கண்மதியன், தாம்பரம் கோ.நாத்திகன், பெரியார் செல்வி காமராஜ் உள்ளிட்ட பலரும் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழர் தலைவர் பேருரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேருரையில், வைக்கம் போராட்டத்தில் தந்தைபெரியார் பங்களிப்பை இருட்டடிப்பு செய்யும் பார்ப்பனர்களின் முகத்திரையை கிழித்து, ஆதாரபூர்வமாக பல்வேறு தகவல்களை எடுத்துக் காட்டினார். வைக்கம் போராட்டத்தில் தந்தைபெரியார் பங் களிப்புகுறித்து கேரளத்தவர் மடடுமல்லாமல், வெள்ளைக்கார பத்திரிகையாளர்கள், வெள்ளைக்கார அதிகாரிகள் பதிவு செய்துள்ள தகவல்களை எடுத்துக்கூறினார் தமிழர் தலைவர்.
வைக்கம் போராட்ட வெற்றிவிழாவில் கேரளாவில் உயர்ஜாதி வகுப்பைச் சேர்ந்தவரான மன்னர்பத்மநாபன் என்பவர் வைங்ககம் போராட்டத்தில் அன்னை நாகம்மை யாரின் பங்களிப்பை மிகவும் நெகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறியதை தமிழர் தலைவர் உரையில் சுட்டிக்காட்டினார்.
தந்தைபெரியார் வைக்கத்திலிருந்து ஈரோட்டுக்கு வந்தபோது, முக்கிய பதவியிலிருந்த பார்ப்பனரான சிபிஆர் எனப்படும் சி.பி.ராமசாமி அய்யர் என்பவரால் சதிவலைப் பின்னப்பட்டு, தந்தைபெரியார் இராஜதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அப்போது அன்னை நாகம்மையார் அறிக்கையில் வைக்கம் போராட்டம் தொடர அனைவரின் ஒத்துழைப்பைக் கோரி அறிக்கை விடுத்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடுத்த தலைமுறை அறிந்திட ஆவணமாக அளித்தார் தமிழர் தலைவர்.
கூட்ட முடிவில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றியுரை.
No comments:
Post a Comment