பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 4, 2023

பிற இதழிலிருந்து...

அரசியல் சாசனத்தை சக்தியற்றதாக மாற்றும் அதிகாரம்? 

அஞ்சனா பிரகாஷ்

பாட்னா உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி

அரசு நிர்வாகத்துறையும் நீதித்துறையும் தனித்தனியாக இயங்குகிற சமூகத்தில், ஒரு நீதிபதி என்பவர் அரசு நிர்வாகத்தின் நீட்சியாக  செயல்படக்கூடாது என்பது சட்டம். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒருவரை நீதிமன்றக் காவலில் வைக்கவேண்டும் என்று கோரப்படும் போது அதனை  மறுக்கும் அதிகாரம் மட்டுமல்ல, அந்த மறுப்பை சட்டப்படியாக நியாயப்படுத்தும் பொறுப்பும் ஒரு நீதிபதிக்கு உள்ளது. பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2023 மார்ச் 21 அன்று நடிகர் சேத்தன் குமாரை (சேத்தன் அகிம்சா)  14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தர விட்டது. முதல் தகவல் அறிக்கை (எஃப்அய்ஆர்) இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 295A மற்றும் 505  (2) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சட்டப்பிரிவுகள் இரண்டும் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண் டும் சேர்த்து விதிக்கப்படத்தக்கவை.

என்ன குற்றச்சாட்டு?

‘எந்தவொரு சமூகப் பிரிவினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் அவர் களின் மத உணர்வுகளை  சீண்டும்  நோக்கத்துடன் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கத்தோடு செய்யப்படும் செயல்கள் மற்றும் ‘ சமூகப் பிரிவினர் களுக்கு இடையே பகை, வெறுப்பு அல்லது தீய  எண்ணத்தை உருவாக்கும் அல்லது ஊக்குவிக்கும் அறிக்கைகளை வெளியிடுதல் ‘ எனும்  குற்றச்சாட்டு கள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் ‘ட்விட்டர்’ ஊடகத்தில் பதிவு செய்த ஒரு பதிவை அடிப் படையாக வைத்து இந்தக் குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேத்தன் குமார் மார்ச் 20, 2023 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இந்துத் துவா பொய்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது’ என்று எழுதி,  பின்னர் குறிப்பிட்ட எடுத்துக் காட்டுகளைக் கொடுத்தார்.  ‘‘இந்துத்துவா என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டது.

சாவர்க்கர் - ‘‘இந்திய ‘தேசம்’ என்பது ராமன்  ராவணனை தோற்கடித்து அயோத்திக்கு திரும்பியவுடன் துவங்கியது“ - பொய்  1992 - பாபர் மசூதி ‘ராமரின் பிறந்த இடம்’ - பொய் 2023 - திப்புவைக் ‘கொன்றவர்கள்’ யுரிகவுடா - நஞ்சேகவுடா - பொய் இந்துத்துவா உண்மையால் தோற்கடிக்கப்படலாம் - உண்மை என்பது சமத் துவம்’’. - சேத்தன் குமார் அகிம்சா (@Chetankumar Ahimsa) மார்ச் 20, 2023  அவர் வெளியிட்ட மேற்கண்ட பதிவின் உள்ளடக்கங்களுக் குச் செல்லாமலே நம்மால் சொல்ல முடியும் - அரசியல் சாசனத்தால்  பாதுகாக்கப்பட்டுள்ள கருத்து ரிமையின் வரம்புகளுக்குள் இது முற்றி லும் அடங்கும்.  ஆனால், நீதித்துறை மாஜிஸ்திரேட் சரியாகச் செயல்பட்டாரா என்பது தான் கேள்வி.

சட்டம் சொல்லியிருப்பது என்ன?

பீகார் அரசு (எதிர்) அர்னேஷ் குமார் (2014) வழக்கில்  காவல்துறையின் கைது செய்யும் அதிகாரம்,  காவலில் வைக்கும் அதிகாரம் பற்றி விரிவாக உச்ச  நீதிமன்றம் விளக்கியிருக்கிறது. - அதாவது குற்ற வியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 41-அய் பற்றி விரிவாக விளக்கி யிருக்கிறது.  அதிகபட்சமாக ஏழு ஆண்டு களுக்குக் கீழ் சிறைத்  தண்டனை விதிக்கப்படும் ஒரு குற்றம் தொடர்பான புகார் மீது  உண்மையில் கைது அவசியம் என்று  கைது செய்யும் அதிகாரி முழுமையாக திருப்தியடைய வேண்டும் என் பதை இந்தச் சட்டப் பிரிவு கட்டாய மாக்குகிறது. கைது செய்வதற்கான நியாயங்கள் என ஒரு பட்டியலையே நீதிமன்றம் வெளியிட்டது. அவை வருமாறு:

1. குற்றம்சாட்டப்பட்ட நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்க;

2. நடைபெற்ற குற்றத்தை சரியாக விசாரணை செய்யவேண்டிய தேவைக்காக;

3. நடைபெற்ற குற்றச் செயலுக்கான ஆதாரங் களை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் அழித்து விடாமல் தடுப்பது;

4. குற்றச் செயல் நடைபெற்றதற்கான ஆதாரங் களை குற்றம் சாட்டப்பட்டவர் மாற்றுவதைத் தடுப்பதற்காக; நீதிமன்றத்திற்கோ, காவல்துறை அதிகாரிக்கோ உண்மைகளை வெளிப்படுத்து வதைத் தடுக்கும் வகையில், சாட்சிகளைத் தூண் டுவது, மிரட்டு வது அல்லது பொய்யான வாக் குறுதி வழங்குவதைத் தடுப்பதற்காக;  

5. அல்லது குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்படாவிட்டால், தேவைப்படும் போதெல் லாம் நீதி மன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப் படுவதை உறுதி செய்ய முடியாது என்றால்;

காவல்துறை அதிகாரி யாராக இருந்தாலும், ஒரு வரை கைது செய்வதற்கான காரணத்தை பதிவுசெய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும், சந்தேகத்திற்கு இடமின்றி மேலே குறிப்பிட்டுள்ள அய்ந்து காரணங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படையில் முடிவு எடுக்கவேண்டும். அதன் பிறகு அந்த கைதை நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப் படவேண்டும். ஒரு நபரை காவல்துறையின் காவலில் காவல்துறை வைத்திருப்பது நியாய மானது என்று நீதிபதி திருப்தி அடைந்தால், அவர் திருப்தி அடைந்ததற்கான காரணங்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 167(3)-இன் கீழ் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும்.

எனவே, ஒருவரை காவல்துறையின் காவலி லிருந்து  நீதிமன்றக் காவலுக்கு மாற்றுவது வழக்க மான விடயம் அல்ல என்பது தெளிவாகிறது. நீதித்துறை  என்றும் அரசு நிர்வாகத் துறை என்றும் இயங்கும் சமூகத்தில் ஒரு நீதிபதி அரசு நிர்வாகத்துறையின் நீட்சியாக செயல்படக்கூடாது என்பது  சட்டத்தின் ஆணை ஆகும். இந்தக் காரணத்தினால்தான் ஒருவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று கோரும்போது அதனை மறுக்கும் அதிகாரம் மட்டு மல்ல, அதை சட்டப்படியாக நியாயப்படுத்தும் பொறுப்பும் எந்தவொரு நீதிபதிக்கும் உள்ளது. “சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறை தவிர்த்த மற்ற சமயங்களில் ஒருவரின் வாழ்வுரிமையும் தனிநபர் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்கிறது   நமது அரசியல் சாசனத்தின் பிரிவு 21. இதில் உள்ள அதிமுக்கிய வாசகமான  ‘சட்டத்தால் நிறு வப்பட்ட நடைமுறை’ என்பதற்கு  அரசு நிர்வாகத்துறை பொறுப்பேற்க வேண்டியதில்லை  என்பதாக, சட்டம் இயற்றும் அமைப்பு அனுமதிக் கிறது; கைது செய்வதை சட்டப்படியாக நியாயப் படுத்துவதில் ஒரு  அரசு நிர்வாகி பொறுப் பேற்காமல் இருப்பதற்கு சட்டம் இயற்றும் அமைப்பு அனுமதிக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. 

சட்டத்திற்கு பொறுப்பானவர்கள்

பீகார் அரசு (எதிர்) அர்னேஷ் குமார் வழக்கிற்கு மீண்டும் வருவோம். குற்றம் சாட்டப் பட்ட ஒருவரை ஆதாரம் இல்லாமல் கைது பண்ணச் செய்யவும்,  இயந்திரத்தனமாக யாரையும் நீதிமன்றக்  காவலில் வைப்பதற்கும் நீதிபதிகளுக்கு  அனுமதி இல்லை  என்பதை உறுதிப்படுத்துகிறது  உச்சநீதி மன்றம். கைது ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான  காரணங்கள் கொண்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41-இன் குறிப்பிட்ட துணை உட்பிரிவுகளைக் கொண்ட சரிபார்ப்புப் பட்டியலை, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வழங்குமாறு மாநில அரசுகளுக்கு   உத்தரவிட்டது.  காவல் துறை அதிகாரிகள் அந்தப் பட்டியலை பூர்த்தி செய்து நீதிபதிகள் முன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு காரணங்களை பதிவு செய்யாமல் நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதிக்கும் நீதித் துறை நீதிபதிகள் அந்தந்த உயர்நீதிமன்றங்களால் துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது என்பது முக்கியமானது. எனவே, நீதித்துறை நீதிபதிகள் அனுபவித்த - அதிகாரம் - அவர்  ‘நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்படத் தேவை யில்லை’ என்கிற தவறான உத்தரவை பிறப்பித்தா லும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற அதிகாரம் - பறிக்கப்பட்டது. அவர்கள் நாட்டின் சட்டத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் அல்லது விளைவு களை சந்திக்க நேரிடும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.

சட்டப்படி நிறைவேற்றவேண்டியதைச் செய் யாமல் கைது செய்தால் உடனடியாக ‘நீதிமன்றக் காவல்தான்’ என்பதாக செயல்படுவது, அரசியல் சாசனத்தின் பிரிவு 21 வழங்கியுள்ள தனிநபர் சுதந்திரத்தையும் வாழ்வுரிமையையும் தடுக்கிறது  அல்லது குறைக்கிறது என்று சட்டமும் நீதிமன்ற தீர்ப்புகளும் சொன்னபோதிலும் நீதிபதிகள் தொடர்ந்து, மனதைச் செலுத்திச் சிந்திக்காமல்  வழக்கமாக இத்தகைய உத்தரவுகளை வெளியிடுகிறார்கள் என்பதால்தான் இத்தகைய  கடு மையான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

உயர்நீதிமன்றங்களுக்கு வழிகாட்டுதல்கள்

உச்சநீதிமன்றம் இன்னும் கண்காணிக்கிறது, ஆனால் உயர்நீதிமன்றம்  என்ன செய்யும்? சதேந்தர் குமார் என்பவரது வழக்கில்,  குற்றங் களை அவற்றுக்கான தண்டனைகளின் அடிப் படையில் வகைப்படுத்தி, அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசு மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு வழிகாட் டுதல்களை வழங்கி யுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் தொடர்பான ‘இதரவகை மனு’ ஒன்றை மார்ச் 21, 2023 அன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பிணை குறித்த அதன் வழிகாட்டுதல்களுக்கு மாவட்ட நீதித்துறை இணங்காதது குறித்து அதிருப்தி தெரிவித்தது. சட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கும் நீதிபதிகள் தங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்காக நீதித்துறை அகாடமிகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது. மேலும், கீழமை நீதி மன்றங்கள், அது எங்கு இருக்கிறதோ அந்தப் பகுதியின் சட்டத்தை பின்பற்றுகிறது என்பதை யும், சட்டத்துக்கு மாறான உத்தரவுகளை பிறப் பிக்கும் மாஜிஸ்திரேட்களிடமிருந்து நீதித்துறை பணி திரும்பப் பெறப்படுவதையும் உயர் நீதிமன்றங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும்  குறிப்பிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவ தானால், மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் மாவட்ட நீதித்துறையினர் சட்டத்தை கடைப்பிடிப்பதையும் செயல்படுத்துவதையும் உறுதி செய்ய உச்சநீதி மன்றம் முயற்சிக்கிறது.

மிஸ்டர் ஜட்ஜ்.

உச்சநீதிமன்றம் நீதி விசாரணையை கண் காணித்து வரும் நிலையில், கருநாடக உயர்நீதி மன்றம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். வழக்குரைஞர் கே.ஜி.கண்ணபிரான் என்பார், புத்திசாலித்தனமான மனிதர், கிளர்ச்சி யாளர்,  நீதித்துறையையும் அரசியல் சாசனத் தையும்  தொலைநோக்குப் பார்வையில் விமர் சிப்பவர் என்று வர்ணிக்கப்படுபவர். இன்றைய ஆட்சியாளர்களின் மொழியில், ‘உண்மையான தேசவிரோதி’ என்று கருதப்படுபவர் கண்ண பிரான். அவர், ஒருமுறை தடா நீதிமன்றத்தின் முன் நின்று ‘‘மிஸ்டர் ஜட்ஜ்! உங்கள்  நீதிபதி பதவியிலிருந்து விலக நீங்கள் தயாரா?’’ என்று அதிரடியாக கேள்வி எழுப்பினார். பரபரப்பான செயல்பாடுகளைக் கொண்ட தடா நீதி மன்றம் திகைத்துப் போனது, சட்டென்று அமைதி யானது. அங்கு பதற்றம் தெரிந்தது. ‘‘மிஸ்டர் கண்ண பிரான், நீங்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளா கும் அபாயம் உள்ளது’’ என்று நீதிபதி இடிபோல் முழங்கினார். 

‘‘நீதிமன்ற அவமதிப்பு என்பது உங்கள் தனி உரிமை.  நீதிமன்றங்கள் தங்களுக்கு சவால் விடுப வர்களைமவுனமாக்கும் கொடுங்கோன்மை அது.  ஆனால், நான் சுட்டிக் காட்டுகிறேன் அய்யா, இந்திய அரசியல் சாசனத்தை மீறிய குற்றவாளி நீங்கள்; நீங்கள் அரசியல் சாசனத்தை  நடை முறைப்படுத்த உறுதிமொழி எடுத்ததை மறந்து விடாதீர்கள். இன்று, அரசியல் சாசனம் கட்டாய மாக கடைப்பிடித்தாக வேண்டியவையாக விதித் திருப்பவை  உயர் நீதி மன்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நீங்கள்  கூறினால், அரசியல் சாசனத்தை  புறக்கணித்ததற்காக நீங்கள் பதவி விலக வேண்டும். சட்டத்துக்கு உள்பட்டுத் தான் இதை நாங்கள் சொல்கிறோம்’’. இது கெட்ட வாய்ப்பாக, நம் நாட்டிற்கு வழக்கமாகி விட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசியல் சாசனத்தை சக்தியற்றதாக ஆக்குகிறார்கள்.

'தி வயர்' இணையதளத்தில் வெளியான கட்டுரை.

தமிழில்: கா.கிருஷ்ணவேணி, மாநிலச் செயலாளர்,  

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.

நன்றி:  'தீக்கதிர்' 3.4.2023

No comments:

Post a Comment