சென்னை, ஏப்.11- சென்னையில் முதல் முறையாக ரோபோ உதவி யுடன் மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. துல்லியமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள நிபுணர்களுக்கு இந்த ரோபோ உதவி செய்யுமே தவிர அதுவே முழுமையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாது என்று பிரசாந்த் மருத்துவ மனையின் இயக்குநர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா கூறினார்.
சென்னையில் ரோபோ உள்ள மிக அரிதான மருத்துவமனைகளில் மாத வரத்தில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையும் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார். 3 டி தொழில்நுட்ப உதவி யுடன் துல்லியமான அறுவைச் சிகிச்சைக்கு ரோபோ பயன்படுவதால் ரத்த இழப்பு மிகவும் குறைவாகும்.மேலும் நோயாளிகள் விரைந்து குணமடைந்து வீடு திரும்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ரோபோ உதவியுடன் 70 வயது முதியவர் ஒரு வருக்கு மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. அதுகுறித்த விவ ரங்களையும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கினார்.
குறிப்பாக மூட்டுவலி மற்றும் முழங்கால் மூட்டு பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு மூட்டு மறு சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுவதாக அவர்
தெரிவித்தார். முன்னதாக இந்த நான்காவது தலைமுறை ரோபோவை பிரசாந்த் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் சி. கீதா அரிப்ரியா, நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.கோபாலசாமி ஆகியோர் முன்னிலையில் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் துவக்கி வைத்தார்.
கலாஷேத்ரா பிரச்சினை விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு
சென்னை, ஏப்.11- சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவ தாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக மேனாள் மாணவி ஒருவர் அடை யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், கலா ஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது தொல்லை தாங்க முடியாமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில், அடையாறு காவல் துறையினர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய் தனர். இதற்கிடையில் கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாதவரத்தில் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்மனை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழில் வெளியானசெய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ளது. மேலும், 6 வாரங்க ளுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையத்தின் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப் பாளருக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.
மனநல மறுவாழ்வு மய்யங்களில்
அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,ஏப்.11- தமிழ்நாட்டில் இயங்கி வரும் மனநல மறுவாழ்வு மய்யங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பாக ஆய்வு நடத்த மனநல மருத்துவ இயக்குநரகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்த சையத் அலி பாத்திமா என்பவரது கணவர் முகமது ரஹீம் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சிட்லபாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மய்யத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் முகமது ரஹீமின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப் பட்டதால், அவரை பார்ப்பதற்காக குடும்பத்தினர் நேரில் சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த தனியார் மய்யத்தின் மருத்துவர் கள், ஊழியர்கள் தாக்கியதால்தான் தன்னுடைய கணவர் இறந்துவிட்டார்; எனவே அவரது இறப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது மனைவி 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன் றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இந்த சம்பவம் தொடர் பாக குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்ட அந்த மறுவாழ்வு மய்யம் எந்த அனுமதியும் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கக் கூடிய வழக்கை நான்கு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். மேலும் சம்பந்தப்பட்ட அந்த தனியார் மறுவாழ்வு மய்யத்தில் ஆய்வு நடத்த சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவ இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் இதுபோல இயங்கி வரக்கூடிய அனைத்து மனநல மறுவாழ்வு மய்யங்களிலும் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.
No comments:
Post a Comment