எலும்புகளில் கால்சியம் குறைவதால் ஏற்படும் 'ஆஸ்ட்டியோ போரோசிஸ்' பெண்களை அதிகமாக பாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்று. எலும்புகளில் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது.
எலும்புகளின் அடர்த்தி இவற்றை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பிட்ட வயதிற்கு பின், எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். குறிப்பாக, பெண்களுக்கு, 'மேனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நின்ற பின், 'ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்' சுரப்பு குறைவதால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து, கரைய ஆரம்பிக்கும்.
இதனால் எலும்புகள் பலவீனமாகி, லேசாக தடுக்கி விழுந்தாலே எலும்புகள் உடைந்து விடும். உடலின் எந்த பகுதியிலும் எலும்பு உடையும் அபாயம் உள்ளது என்றாலும், முதுகு தண்டு, இடுப்பு, மணிக்கட்டு, தோள்பட்டையின் கீழ் என்று நான்கு பகுதிகளில் எலும்பு உடையும் அபாயம் அதிகம். ஆஸ்டியோ போரோசிஸ் என்பது அறிகுறிகள் வெளியில் தெரியாத பிரச்சினை. 50 - 70 சதவீதம் எலும்புகள் வலிமை குறைந்தாலும் எந்த அறிகுறியும் தெரியாது. இதற்கு, 'சைலண்ட் டீசீஸ்' என்று பெயர். 60 வயதில் எதிர்பாராமல் கீழே விழுந்து எலும்பு உடைந்து, சிகிச்சைக்கு வரும் போது தான் பிரச்னை இருப்பதே தெரியும். மேற்கத்திய நாடுகளில் எல்லா பெண்களுக்கும், 45 வயதிலேயே, 'டெக்சா' என்ற 'எக்ஸ்ரே' பரிசோதனை செய்து, எலும்புகளின் வலிமை எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொள்வர். அதற்கு ஏற்றாற்போல கால்சியம், 'விட்டமின் டி' அல்லது ஆஸ்டியோ போரோசிஸ் மருந்துகளோ தேவைக்கு ஏற்ப சாப்பிடுவர்.
60 வயதில் தடுக்கி விழுந்தாலும் எலும்புகள் உடையாது. நம் பெண்களிடம் அந்த விழிப்புணர்வு இல்லாததால், வேறு ஏதாவது பிரச்சினைக்கு மருத்துவரிடம் செல்லும் போது, இந்தப் பிரச்சினை இருப்பது தெரிந்தால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். மற்றபடி எந்த அறிகுறியும் இல்லை என்றாலும், வயதான காலத்தில் எலும்புகள் உடையும் சூழல் வந்தால் தான் தெரிய வருகிறது.
மேனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்றதும், எலும்புகளின் வலிமை எப்படி உள்ளது என்பதை பரிசோதிப்பது நல்லது. எக்ஸ்ரே போன்று எளிமையான பரிசோதனை தான் டெக்சா பரிசோதனை. 50 வயதில் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்தால், இந்த பரிசோதனையும் அதில் வந்து விடும்.
ஆரம்ப நிலையில் கால்சியம், விட்டமின் டி மாத்திரைகள் போதுமானவை. பிரச்சினை சற்று தீவிரமாக இருந்தால், எலும்புகளை வலிமைப்படுத்தும் மருந்துகள் தேவைப்படலாம். மருத்துவர் பரிந்துரைத்த நாட்களுக்கு மட்டும் விட்டமின் டி மாத்திரை சாப்பிட வேண்டும். கால்சியம் அதிக நாட்கள் தேவைப்படும். ஓரிரு ஆண்டுகள் சாப்பிட்ட பின், சில மாதங்கள், 'பிரேக்' எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment