கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற திருநங்கைக்கு உரிமை உண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 3, 2023

கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற திருநங்கைக்கு உரிமை உண்டு

- மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை, ஏப். 3- பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய திருநங்கைக்கு கணவரிடம் இருந்து வாழ்வூதியத் தொகை பெற உரிமை உண்டு என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 

மும்பையை சேர்ந்த திருநங்கை ஒருவர் கடந்த 2016ஆம் ஆண்டு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். இதைதொடர்ந்து அதே ஆண்டு ஒருவரை திருமணமும் செய்துகொண்டார். திருமணம் முடிந்து 2 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் தனக்கு கணவர் வாழ்வூதியத் தொகை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட திருநங்கைக்கு அவரது கணவர் மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.12 ஆயிரம் தர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கணவர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அங்கு அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "குடும்ப உறவில் பெண்களுக்கு மட்டுமே குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வாழ்வூதியத் தொகை பெற உரிமை உள்ளது. திருநங்கையாக இருந்து பெண்ணாக மாறியவர் என்பதால் எனது மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணின் வரையறைக்குள் வரவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி அமித் போர்க்கர் விசாரித்து வந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருநங்கையின் கணவரின் மனுவை தள்ளுபடி செய்த துடன், வாழ்வூதியத் தொகை வழங்க கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்தார். மேலும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:- ஒரு திருநங்கை அல்லது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த ஆண் அல்லது பெண் என யார் வேண்டுமானாலும் தங்கள் விருப்பப்பட்ட பாலினத்தை தேர்வு செய்துகொள்ளும் உரிமை உள்ளது. 'பெண்' என்ற வார்த்தை பெண்களுக்கு மட்டுமானது இல்லை. தங்கள் பாலின குணாதிசயங்களுக்கு ஏற்ப பாலினத்தை மாற்றிய திருநங்கைகளையும் அந்த வார்த்தை உள்ளடக்கியது. குடும்ப வன்முறை சட்ட விதிகளின் நோக்கம் குடும்பத்திற்குள் நிகழும் எந்த ஒரு வன்முறையிலும் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமையை பாதுகாத்து, அவர்களுக்கு பயனுள்ள பாதுகாப்பை வழங்குவது ஆகும். பாலினத்தை மாற்றிக்கொள்ள அறுவைச் சிகிச்சை செய்த திருநங்கையும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட நபர் என்று உறுதியாக கூறமுடியும். எனவே பாதிக்கப்பட்டவருக்கு வாழ்வூதியத் தொகை வழங்க கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்கிறேன். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்

சண்டிகார், ஏப். 3- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். பஞ்சாப்பில் சாலைப்பணிகளுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு, பருவம் தவறிய மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம், விவசாய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி சார்பில் குர்தாஸ்பூரில் உள்ள படாலா ரயில் நிலையத்தில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமான விவசாயிகள் ரயில் நிலையத்தில் கூடாரம் அமைத்து தங்கியதுடன், தண்டவாளத்தில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சர்வான் சிங் பாந்தர், தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் அந்த பகுதி வழியாக ரயில் சேவை தடைபட்டது.

67 கோடி பேரின் தகவல்கள் திருட்டு விளக்கம் அளிக்க வேண்டும்

ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி, ஏப். 3- 67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  24 மாநிலங்கள் மற்றும் 8 பெருநகரங்களை சேர்ந்த மொத்தம் 67 கோடி தனிநபர்கள் மற்றும் அமைப்பு களின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றதாக வினய் பரத்வாஜ் என்பவரை ஆந்திர மாநிலம் சைபராபாத் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர் ஜி.எஸ்.டி., பல்வேறு மாநிலங்களின் சாலை போக்குவரத்து நிறுவனங்கள், ஆன்லைன் வணிக தளங்கள், சமூக வலைத்தளங்கள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் வாடிக்கையாளர்களது தகவல்களை திருடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீட் மாணவர்கள், கல்வி நிறுவன மாணவர்கள், பாதுகாப் புத்துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பான் கார்டு வைத்திருப்பவர்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வாடிக்கையாளர்கள் ஆகியோரின் தனிப்பட்ட தகவல் களை திருடி விற்றிருப்பது தெரிய வந்தது. 

இந்நிலையில், இந்த பத்திரிகை செய்தியை சுட்டிக் காட்டி, காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியது. 

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது 67 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதற்காக திருடப்பட்டது? எப்படி திருடப்பட்டது? ராணுவத்தின் தகவல்களை திருடியது யார்? எப்படி திருடினார்கள்? இது, தனியுரிமை மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு மீதான தாக்குதல். இதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment