"ராமன் பாலம் என்ற ஒன்று இல்லை" என்று ஒன்றிய அமைச்சரே ஒப்புக் கொண்டதற்குப் பிறகு சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த தாமதம் ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

"ராமன் பாலம் என்ற ஒன்று இல்லை" என்று ஒன்றிய அமைச்சரே ஒப்புக் கொண்டதற்குப் பிறகு சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த தாமதம் ஏன்?

காரைக்காலில் தமிழர் தலைவர் பேட்டி

காரைக்கால், ஏப். 1 "ராமன் பாலம் என்பதற்கு ஆதாரம் இல்லை" என்று ஒன்றிய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டு சொன்ன பிறகு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த தாமதிப்பது ஏன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்   திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

29.3.2023 அன்று காரைக்காலில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரையின்போது, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். 

அவரது பேட்டி வருமாறு:

ராமன் பாலம் என எதுவும் இல்லை என்று 

ஒன்றிய அமைச்சரே ஒப்புக் கொண்டு விட்டாரே!

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளைப் பெருக்கு வதற்கும், இந்திய நாட்டினுடைய பாதுகாப்பினை உறுதி செய்யவும், இந்தியப் பொருளாதாரமும், தென்னிந்தியப் பொருளாதாரமும் மிகச் சிறப்பாக செழித்தோங்கவும், வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல், இந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் செலவழிக்கப்பட்டு, இன்னும் 23 கிலோ மீட்டரில் மட்டுமே பணி மீதமிருந்தது. அத்திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஏற்கெனவே சொல்லப்பட்ட ராமன் பாலத்திற்கு ஆதாரமில்லை என்று ஒன்றிய அமைச்சரே சொல்லிவிட்ட பிறகு, இனிமேலும் தாமதிக்காமல், அந்தத் திட்டத்தை விரைவில் ஒன்றிய அரசு தொடங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் முன்வரவேண்டும்.

ஏற்கெனவே, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது அதுபோன்றே, புதுச்சேரிக்கும் பயன்படக்கூடிய திட்டம்தான் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பதினால், புதுச்சேரி அரசும் ஒத்துழைப்பு தரும் விதமாக, தீர்மானம் நிறைவேற்றுவது இந்த அரசுக்கு ஒரு நல்ல சமிக்ஞையாக இருக்கும்; மக்களுடைய கருத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

தஹி - நஹி!

செய்தியாளர்: பால்வளத் துறையால் உற்பத்தி செய்யப்படும் தயிர் பாக்கெட்டில் ஹிந்தி பெயர் போடவேண்டும் என்ற ஓர் உத்தரவை ஒன்றிய அரசு போட்டிருக்கிறதாமே?

தமிழர் தலைவர்:  எந்த அளவிற்கு ஹிந்தியைத் திணிக்கிறார்கள் என்பதற்கு அடையாளம்தான் இது.

ஹிந்தியைத் திணிக்கமாட்டோம், ஹிந்தியைத் திணிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு, இதுபோன்ற வேலைகளைச் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பால்வளத்துறை இருக்கிறது. இங்கே தயிர் என்றால்தான் தெரியுமே தவிர, ‘தஹி' என்றால் தெரியாது. ‘தஹி' என்றால், ‘நஹி' என்றுதான் சொல்வார்கள்.

இங்கே ஒருபோதும் தஹி என்று வராது; தயிர் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் புரியும்.

இதை இப்பொழுது அனுமதித்தால், 'தூத்' கொண்டுவாருங்கள் என்பார்கள்.

இன்றைக்கு ஹிந்தி என்பது ஆமை நுழைவதுபோன்று, பிறகு ஒட்டகம் நுழைந்ததுபோன்று நிலைநாட்டுவதற்கு முயற்சி எடுப்பார்கள்.

ஆகவே, இங்கே ஹிந்திக்கு இடமில்லை; இங்கே மட்டுமல்ல, புதுச்சேரியிலும் இடமில்லை; கருநாடகாவில் இடமில்லை என்று சொல்கிறார்கள்; வங்காளத்தில் இடமில்லை என்று சொல்கிறார்கள்; பஞ்சாபில் இடமில்லை என்று சொல்கிறார்கள். கிழக்கு இந்தியாவிலே ஹிந்திக்கு இடமில்லை என்று சொல்கின்ற அளவிற்கு இருக்கிறது.

எனவேதான், எவ்வளவு வேகமாக ஹிந்தியை அவர்கள் திணிக்கிறார்களோ, அவ்வளவு வேகமாக அவர்களுடைய ஆட்சிக்கு அவர்களே குழிதோண்டிக் கொள்கிறார்கள் என்று அர்த்தம்.

கோயிலில் கொள்ளை அடிக்கவா?

செய்தியாளர்: இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையே தேவையில்லை என்று பா.ஜ.க. சொல்கிறதே?

தமிழர் தலைவர்:  காரணம், அவர்களுடைய கொள்கை அது, பார்ப்பனர்கள் நிரந்தரமாகக் கொள் ளையடிக்க வேண்டும் என்பதற்கான திட்டம் அது.

அந்தக் கொள்ளையைத் தடுக்கவேண்டும் என்பதற் காகத்தான் பனகல் அரசர், இந்து அறநிலையப் பாதுகாப்பு துறையைக் கொண்டு வந்தார்.

கணக்குப் பார்க்கக்கூடாது என்று யார் சொல்லுவார்கள்?

யார் கொள்ளையடிப்பவர்களோ, அவர்கள்தான் கணக்குப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.

கொள்ளைக் கூட்டம், மீண்டும் அந்த ஆதிக் கத்தைக் கையில் எடுக்கவேண்டும் என்று நினைக் கிறது; அந்தக் கொள்ளைக் கூட்டத்திற்கு அரசு ஒரு போதும் இசையாது. இசையக் கூடாது.

மக்களே அதற்குப் பதில் சொல்வார்கள்!.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment