தமிழ்நாடு முதலமைச்சருக்கு டில்லி முதலமைச்சர் கடிதம்
சென்னை, ஏப்.16 தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியதைபோல் டில்லி சட்டப்பேரவையிலும் துணை நிலை ஆளுநருக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்வதை கண்டித்தும், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி கடந்த 10-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தைபோல், மற்ற மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
ஆளுநர் விவகாரம் தொடர்பாக டில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் செயல்படுகின்றனர். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அரசு மசோதாக்களை ஆளுநர்கள் காலவரையன்றி கிடப்பில் போடுகின்றனர்.
அதிகபட்சமாக டில்லி துணை நிலை ஆளுநர், மாநில அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கைக்குக்கூட ஒப்புதல் தராமல் தடுத்து நிறுத்தினார். கல்வி, சுகாதாரம், குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் எங்கள் அரசை செயல்பட விடாமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். இதுபோன்ற பனிப்போரை ஆளுநர்கள் மூலம் ஒன்றிய அரசு மாநில அரசு மீது தொடுக்கிறது.
இதற்கு எதிராக ஒற்றைக் குரலில் இருக்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். நானும் விரைவில் டில்லி சட்டப்பேரவையில் இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்ற இருக்கிறேன். உங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment