மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருநாள்- பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவார்ந்த கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 2, 2023

மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருநாள்- பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவார்ந்த கேள்வி!

 மனிதநேயம் என்பதுதான் 

சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிப்படைத் தத்துவம்!

மகளிர் நலம் பயக்கும் மனிதநேயமிக்க திராவிட மாடல் ஆட்சிபோன்று இந்தியாவில் தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியுமா?

சென்னை, ஏப்.2  மனிதநேயம் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிப்படைத் தத்துவம்! சம வாய்ப்பு - சம உரிமை - சமத்துவம் இருக்கவேண்டும் என்று சொல்வதுதான் தலையாய மனிதநேயம்!  மகளிர் நலம் பயக்கும் மனிதநேய மிக்க திராவிட மாடல் ஆட் சியை நீங்கள் இந்தியாவில் தேடிப் பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியுமா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘மார்ச் 1: மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் திராவிட மாடல் 66; நிலத்தின் ஒளிச்சுடர்! நெஞ்சுக்கு நீதி தொடர்’’

கடந்த 25.3.2023  அன்று மாலை பெரவள்ளூர், ஜெயின் பள்ளி வளாகத்தில் ''மார்ச் 1: மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் திராவிட மாடல் 66; நிலத்தின் ஒளிச்சுடர்! நெஞ்சுக்கு நீதி தொடர்'' எனும் தலைப்பில் நடைபெற்ற  நீதியரங்கம்  நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது நிறைவுரை வருமாறு:

இந்தியாவின் முதலமைச்சர்களில் 

முதல் முதலமைச்சர்!

எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெறக்கூடிய இந்தியாவின் முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சர் என்ற சிறப்பை 25 மாதங்கள் ஆட்சியிலேயே மற்றவர் களால், நமக்கு அப்பாற்பட்டவர்களாலும் கணிக்கப்பட்ட நம்முடைய மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை - இன்றைக்கு 66 ஆவது நிகழ்ச்சியாக நடத்தி, அதற்குப் பிறகு இன்னும் 24 நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்று கூறிய நம்முடைய அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தலைப்பு கொடுத்திருக்கிறார்கள்.

இன்றைய தலைப்பு மனிதநேயத் திருநாள் என்று தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

மனிதநேயம் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிப்படைத் தத்துவம்!

எத்தனையோ அம்சங்கள் அவருக்கு உண்டு; முதலமைச்சர் அவர்களுடைய பொதுவாழ்க்கை யில் எவ்வளவோ உண்டு என்றாலும், மனிதநேயம் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிப்படைத் தத்துவம். 

அந்த அடிப்படைத் தத்துவத்தைத்தான் தன்னுடைய வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு, ஆட்சியை அதை நோக்கித்தான் செலுத்திக் கொண்டிருக்கின்றார்.

ஆகவே, இதைவிட மிகப் பொருத்தமான ஒரு சொல், அவருடைய பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்கு வேறு இருக்க முடியாது. முதற்கண் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்த நம்முடைய மாண்புமிகு மானமிகு அமைச்சர் அவர்களுக்கு அனைவர் சார்பாக நம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாராட்டவும் - கண்டிக்கவும் எனக்கு உரிமை உண்டு!

அவர் சொன்னதுபோன்று, அவரைப் பாராட்டவும் எனக்கு உரிமை உண்டு; அவரைக் கண்டிக்கவும் எனக்கு உரிமை உண்டு. நாங்கள் அடிக்கடி சண்டை போடக்கூடிய நண்பர்கள்; அவர் வேகமாக கடவுளை யெல்லாம் காப்பாற்றுகின்ற நேரத்திலும் சரி, அதே நேரத்தில், கடவுளை காப்பாற்றுவது அவருக்கு மிகச் சுலபம். வெளிநாட்டிற்குப் போன கடவுள்கள் எல்லாம் இப்பொழுது மகிழ்ச்சியாக நம் நாட்டிற்கு வந்து கொண் டிருக்கிறார்கள்; விசா தொந்தரவு இல்லாமல், திரும்பி அழைத்துக் கொண்டுவருகிறார்; கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக்கொண்டு வருகிறார்.

அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார்!

ஆனால், கடவுள் சிலை பக்கத்தில் நிற்கிறான் பாருங் கள், அவனிடமிருந்து காப்பாற்றுவதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது; இன்னமும் போராடிக் கொண் டிருக்கின்ற விஷயம்தான். அவர் போராடுவதற்கு சரி யான ஒருவர்தான்; அந்தப் போராட்டத்தில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார்.

அந்த வகையில், எங்களுக்கு முதல் பகுதியில் மாறுபட்ட கருத்து இருந்தாலும், இரண்டாவது பகுதியில், அவருக்கு எந்தத் தொந்தரவு இருந்தாலும், நாங்கள்தான் முதல் ஆளாகப் பாதுகாப்பாக இருப்போம். காரணம் என்னவென்றால், தந்தை பெரியார் அவர்கள் மனித நேயத்தோடு சொன்ன ஒரு வார்த்தை என்னவென்றால், இந்த மனிதநேயத் திருநாளில் மிக முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘‘கடவுளை மற'' என்று சொன்னார். ஆனால், நம்முடைய அமைச்சர் ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறார்; அதில் எங்களுக்கு மாறு பட்ட கருத்து உண்டு. 

‘‘கடவுளை மற’’ - ‘‘மனிதனை நினை!’’ 

ஆனால், அடுத்த வரியாக தந்தை பெரியார் அவர்கள், ‘‘மனிதனை நினை'' என்று சொன்னார் பாருங் கள் அதுதான் மிக முக்கியம்.

கோவில் கட்டுவதற்குப் பாடுபட்டவன், சிலை வடித்த வன் எல்லாம் வெளியே நிற்கிறார்கள்; ‘‘சம்பந்தமில்லாத ஒருவன் உள்ளே சென்று நீண்ட காலமாக இருக்கிறாயே, நீ வெளியே வா! அவர்கள் உள்ளே போகட்டும்'' என்ப தற்காகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் களே, அந்தப் போராட்டத்தில் மிக முக்கியமாக இருக்கக்கூடிய அந்த வாய்ப்புப் பெற்ற அமைச்சர் அவர்களே,

இந்நிகழ்விற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய வழக்குரைஞர் சந்துரு அவர்களே,

மாண்புமிகு நீதியரசர்கள் அன்பிற்குரிய ஏ.கே.இராஜன் அவர்களே, சந்துரு அவர்களே, அக்பர் அலி அவர்களே,

சிறப்பாக உரையாற்றிய நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான என்.ஆர்.இளங்கோ அவர்களே,

அருமைத் தோழர் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ரங்கநாதன் அவர்களே, 

ஏராளமான பட்டியல் உள்ளது - அத்தனை பேரையும் அழைத்ததாக நேரத்தின் நெருக்கடியினால் நீங்கள் கொள்வீர்கள் என்று சொல்லி, அனைவருக்கும் வணக் கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெளிவான நீதிபதிகள், முதுகெலும்பு உள்ள மூத்த நீதிபதிகள்!

நிறைய செய்திகள் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு அம்சத்தைப்பற்றி எழுதினார்கள். மூன்று நீதிபதிகளும் தெளிவான நீதிபதிகள், முதுகெலும்பு உள்ள மூத்த நீதிபதிகள்.

நம்முடைய நாட்டில் இப்பொழுது மிகத் தேவை என்னவென்றால், மனிதர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது இருக்கிறது- முதுகெலும்பு இருக்கிறது என்று.

சுயமரியாதை இயக்கம் செய்த மிகப்பெரிய பணியே, ‘‘மனிதா உனக்கு முதுகெலும்பு இருக்கிறது. ஆகவே, நீ நிமிர்ந்து நில்! யாருக்கும் தலைவணங்காதே, யார் காலிலும் விழாதே! நிமிர்ந்து நில்!'' என்று சொன்ன இயக்கம்தான், மனிதநேயத்தினுடைய உச்ச இயக்கமாக இருக்கின்ற, பெரியார் கண்ட, அதைப் பின்பற்றிய அண்ணா கண்ட, அதைப் பின்பற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் கண்ட, அதை இன்றைக்குப் பின்பற்றக்கூடிய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்ட இயக்கம் - அதை இன்றைக்குச் செய்துகொண்டிருக்கிறது.

இஸ்மாயில் ஆணைய அறிக்கைபற்றியும், நாங்கள் எல்லாம் சிறைச்சாலையில் அடிபட்டதுபற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள்.  நீதியரசர் சந்துரு அவர்கள் மிகச் சிறப்பாக வாதாடினார் அன்றைக்கு. அவருக்கு மிகப்பெரிய பாராட்டை, இஸ்மாயில் அவர்களே எழுதியிருக்கிறார். அந்த இஸ்மாயில் ஆணைய  அறிக்கையே இப்பொழுது பல இடங்களில் காணாமல் போயிருக்கிறது. 

ஓராண்டிற்கு மேல் சிறைச்சாலையில் இருந்ததையே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள் என்று சொன்னால், முழுப் பூசணிக்காயை அல்ல; பெரிய மலையையே மறைக்கக்கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

வெறும் 420 இல்லை; மலை 420 என்று 

அங்கே இருந்தவர்களே சொல்கிறார்கள்

அதனால் மலை 420 என்று சொல்லக்கூடிய அளவிற்குப்  பல பேருக்குப் பட்டம் வருகிறது. வெறும் 420 இல்லை; மலை 420 என்று அங்கே இருந்தவர்களே, இருப்பவர்களே சொல்கிறார்கள்.

மூன்று நீதிபதிகளும் மேல்முறையீடு செய்ய முடியாத, செய்தாலும் மாற்றப்பட முடியாத தீர்ப்புபோல இங்கே உரையாற்றி இருக்கிறார்கள். மிக முக்கியமான அருமையான கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் தனித்தன்மை!

நம்முடைய முதலமைச்சரைப்பற்றி, மனித நேயத்தைப்பற்றி எத்தனையோ கருத்துகளைச் சொல்லலாம். எதைச் செய்தாலும், நம்முடைய அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தனித் தன்மையோடு செய்வார்.

இந்த அரங்கத்தைப் பார்க்கும்பொழுது, இது ஒரு மிக வித்தியாசமான பொதுக்கூட்டம். நம் முடைய நீதிபதிகள் அதிகமாக பொதுக்கூட்டங் களுக்கு வரமாட்டார்கள்; அரங்கக் கூட்டத்திற்குத் தான் வருவார்கள். இங்கே அவர்களையும் அமர வைத்து, இவ்வளவு பெரிய பொதுக்கூட்டத்தில் அவர்களைப் பேச வைத்ததும் மனிதநேயம்தான்.

மனிதநேயத்தின் வெற்றியே, இதுவரையில் அறைக்குள் இருந்தவர்களையெல்லாம், அரங் கத்திற்குள் இருந்தவர்களையெல்லாம் திறந்த வெளிக்கு அழைத்துக் கொண்டு வருவதுதான் இந்த இயக்கத்தினுடைய வேலை.  அதை மிகச் சிறப்பாக, மிக அழகாக, மிக அருமையாக செய்திருக்கிறார் நம்முடைய அமைச்சர் அவர்கள்.

அதைவிட மிகச் சிறப்பு என்னவென்றால், நாம் வழக்கமாக பொதுக்கூட்டத்தில், பெரியோர்களே, தாய்மார்களே, சகோதரிகளே என்று பேசுவோம். ஆனால், அங்கே தாய்மார்களோ, சகோதரிகளோ இருக்கமாட்டார்கள். அது வழக்கமான ஒரு சடங்குச் சொல் போன்று இருக்கும்.

தாய்மார்களுக்கு, சகோதரிகளுக்கு, மகளிருக்கு என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுகள்!

ஆனால், அதை மாற்றிக் காட்டக்கூடிய ஒரு கூட்டம் இருக்கிறது என்றால், இந்தப் பொதுக்கூட்டம்தான். அதற்காக தாய்மார்களுக்கு, சகோதரிகளுக்கு, மகளிருக்கு என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நாலாபக்கமும் பார்த்தேன்; நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு இன்னும் வரவில்லை. ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், உங்களுக்கெல்லாம் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை, உள்ளாட்சித் துறையில் தானே வழங்கிய மனிதநேயர் ஒருவர் உண்டென்றால், இன்றைய விழா நாயகராக யாரைப் பாராட்டுகிறோமோ, அந்த முதலமைச்சர் அவர்கள்தான்.

ஆண்களைவிட, பெண்களுக்குத்தான் நன்றி உணர்ச்சி அதிகம்!

அந்த நன்றி உணர்ச்சி உங்களுக்கு இருக்கிறது. தாய்மார்களுக்குத்தான் நன்றி உணர்ச்சி அதிகம். ஆண் களைவிட, பெண்களுக்குத்தான் நன்றி உணர்ச்சி அதிகம்.

நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் மிக வேடிக் கையாக ஒன்று சொல்வார்; பிச்சை எடுத்துச் செல்பவர் கூட, ‘‘அம்மா, தாயே!'' என்றுதான் அழைப்பார்.

ஏனென்றால், அம்மாவிற்குத்தான் இரக்கம் இருக் குமே தவிர, அய்யாவிற்கு இரக்கம் இருக்காது, அவ்வளவு சுலபத்தில். அதனால்தான், அம்மா என்று அழைக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு  50 சதவிகித இட ஒதுக்கீடு!

அந்த வகையிலே, இந்தப் பொதுக்கூட்டத்தில், 33 சதவிகிதம் அல்ல; 50 சதவிகிதத்தையும் தாண்டி அதிகமாக இருப்பதுபோன்று இருக்கிறது. ஆண்கள் இங்கே மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; சிறுபான்மையினராக இருக்கிறார்கள். பெண்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இன்றைக்கு ஆட்சி உங்கள் கையில் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, உங் களுக்காக இருக்கக்கூடிய ஆட்சி; உங்களில் ஒருவன் என்று சொல்லக்கூடிய ஆட்சியில், யாருக்காவது வித்தி யாசம் இருக்கிறது என்றால்,  நம்முடைய முதலமைச்சர் சொன்னதில், இதுதான் பொருள் வாய்ந்த ஒன்றாகும்.

முதல் கையெழுத்தை  பெண்களுக்காகத்தான் போட்டார்!

ஏனென்றால், முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற வுடன் முதல் கையெழுத்தை உங்களுக்காகத்தான் போட்டார். பேருந்தில், ஏறி சவாரி செய்தால், இனிமேல் நம்முடைய மகளிர் கட்டணம் கொடுக்கவேண்டிய அவசியமே கிடையாது என்று சொன்னார்.

வேலைக்குச் செல்கின்ற மகளிர், அவர்கள் வாங்குகின்ற சம்பளத்தில் பெரும்பகுதியை பயணக் கட்டமாகக் கொடுத்துவிட்டு, மிச்சம் மீதியைத்தான் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

ஆனால், இப்பொழுது அதுபோன்ற நிலை இல்லை; மகளிர் வாங்குகின்ற சம்பளம் முழுவதும் குடும்பத்திற்கே செலவு செய்கின்ற நிலையை ஏற்படுத்தினார் அல்லவா - இதைவிட பெரிய மனிதநேயம் வேறு என்ன இருக்க முடியும் என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்.

செங்கல்பட்டு முதல் சுயமரியாதை  மாகாண மாநாட்டில் தீர்மானம்!

அதற்கடுத்ததாக, மிக முக்கியமாக மகளிருக்குச் சொத்துரிமை வேண்டும் என்று 1929 ஆம் ஆண்டு தந்தை பெரியார், செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தீர்மானம் போட்டார்.

பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்!

நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலம்; கலைஞர் அவர்கள் அன்றைக்கு 5 வயது பிள்ளை. ஆனால், அதே கலைஞர் பின்னாளில் ஆட்சிக்கு வந்து, திராவிட மாடல் ஆட்சியை நிறுவி, அந்த திராவிட ஆட்சியின் காரணமாக, அவர்தான் இந்தியாவில், பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கினார்.

தந்தை பெரியார்தான் கேட்டார், உடலில் உள்ள இரண்டு கைகளும் இயங்கவேண்டாமா? இரண்டு கால்களும் இயங்கவேண்டாமா? இரண்டு காதுகளும் கேட்கவேண்டாமா?  இரண்டு கண்களும் சரியான பார்வையோடு இருக்கவேண்டாமா?

சம வாய்ப்பு - சம உரிமை - சமத்துவம் இருக்கவேண்டும் என்று சொல்வதுதான் தலையாய மனிதநேயம்!

அப்படியில்லாமல், ஒரு கையோ, ஒரு காலோ, ஒரு கண்ணோ இயங்கினால் போதுமா? அதுபோல, ஆண் - பெண் என்று சொல்லும்பொழுது, இரண்டு பேருக்கும் சம வாய்ப்பு - சம உரிமை - சமத்துவம் இருக்கவேண்டும் என்று சொல்வதுதான் தலையாய மனிதநேயமாகும்.

அந்த மனிதநேயத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கடைப்பிடிக்கிறார்.

‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய தத்துவமே மனிதயம் - சமத்துவம்தான்.

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை, ‘‘சமூகநீதி நாள்'' என்று அறிவித்தார். 

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை ‘‘சமத்துவ நாள்'’ என்று அறிவித்தார்.

சமூகநீதி - சமத்துவம் - இதுதான் மனிதநேயத்தினுடைய அடிப்படை தத்துவமாகும்.

அடிப்படை தத்துவத்தை அவர்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்ததினுடைய விளைவுதான், இன்றைக்கு மிகப்பெரும்பாலான மக்களுக்கு இந்த ஆட்சி பயன்படுகிறது.

யார் விமர்சித்தாலும் அதைப்பற்றி 

அவர் கவலைப்படுவதில்லை!

ஆட்சியைப்பற்றி யார் விமர்சித்தாலும் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை.  நாம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றவேண்டும் என்று சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திராவிட மாடல் ஆட்சி, மகளிருக்காக எவ்வளவு கவலையோடு இருக்கிறது; எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், இங்கே நீதியரசர்கள் இருப்பது மிகப் பொருத்தமான ஒன்றுதான்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 

ஒரு விசித்திர வழக்கு!

சில மாதங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது; சிலராவது அந்தச் செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த வழக்கின் விவரம் என்னவென்றால், வடக்கே, மத்தியப் பிரதேசத்திலிருந்து அங்கே திராவிட மாடல் ஆட்சியல்ல; வேறு மாடல் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது; குஜராத் மாடல் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அந்த மத்தியப் பிரதேசத்திலிருந்து ஒரு பெண், சென்னைக்கு வந்து, கல்லூரி படிப்பில் சேர்ந்திருக்கிறார். அவரை சொந்த ஊருக்கே வாருங்கள் என்று கட்டாயப்படுத்தி, வலுக்கட்டாயமாக அழைக்கிறார்கள்.

அந்தப் பெண் அங்கே செல்ல மறுக்கிறார்.

அவருடைய குடும்பத்தினர் கட்டாயப்படுத்துகின்ற காரணத்தினால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.

‘‘தாய் இல்லை; தம்பி இருக்கிறான். என்னுடைய தாய் உயிரோடு இல்லை. என்னுடைய தந்தை, இரண்டாவது திருமணம் செய்துகொண்டிருக்கிறார். என்னுடைய சித்தி இருக்கிறார்.

என்னுடைய சகோதரனை நரபலி கொடுத்தால், குடும்பம் செழிப்பாக இருக்கும் என்கிற மூடநம்பிக்கையின் காரணமாக, நரபலி கொடுத்துவிட்டார்கள். இதைப் பார்த்து பயந்துதான் நான், தமிழ்நாட்டில் படிக்கப் போகிறேன் என்று சொல்லி இங்கே வந்துவிட்டேன். காரணம் என்னவென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது. பாதுகாப்பான ஆட்சி நடக்கிறது'' என்று அபிடவிட் போட்டிருந்தார்.

மகளிர் நலம் பயக்கும் 

மனிதநேய மிக்க ஓர் ஆட்சி

இப்படி அபிடவிட் போட்டது, தமிழ்நாட்டுப் பெண்மணி அல்ல. மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த பெண்மணி; நரபலியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்; தனக்குப் பாதுகாப்பான ஓரிடம் வேண்டும் என்பதினால், என்னை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பக்கூடாது; நான் தமிழ்நாட்டில்தான் இருக்கவேண்டும் என்று உத்தரவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றால், இதைவிட மகளிர் நலம் பயக்கும் மனிதநேய மிக்க ஓர் ஆட்சியை நீங்கள் இந்தியாவில் தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியுமா? என்பதுதான் நம்முடைய கேள்வி.

ஆகவேதான், மனிதநேயம் என்பது ‘திராவிட மாடல்' ஆட்சியில் நூற்றுக்கு நூறு சரியானது.

‘‘சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம்'' என்று மிகத் தெளிவாக தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, பட்ஜெட் செஷன்ஸ் வரும்பொழுது, நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் மிகப் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் மீதம் இருப்பதையும் நிறைவேற்றுவோம் என்று சொன்னார்.

ஓர் அரசியல் கட்சி, தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறது என்றால், அந்த வாக்குறுதிகளை 5 ஆண்டுகாலத்திற்குள் நிறைவேற்றினார்களா? என்பதுதான் கேள்வி. 

10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபொழுதும், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தவர்களும் உண்டு.

மோடி கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று?

அவ்வளவுதூரம் போகவேண்டாம்; கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி ஜி என்ன சொன்னார்?

கவலைப்படாதீர்கள், உங்களுடைய ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பொத்தென்று விழும்; லட்சுமி வந்து கதவை தட்டுவாள் என்றெல்லாம் சொன்னார். லட்சுமி விலாஸ் வங்கியே காணாமல் போனதுதான் மிச்சம்.

அவர் சொன்னதுபோன்று, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் வந்து சேர்ந்ததா? என்று கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. அவருடைய கட்சியினரும் தயாராக இல்லை.

இளைஞர்களுக்கு ஆசை காட்டி, 

வாக்குகளைப் பெற்று, ஏமாற்றினார்கள்

அதேபோன்று, இளைஞர்களை ஏமாற்றினார்கள். இளைஞர்களே, குஜராத் மாடலைப் பாருங்கள்; வேலை வாய்ப்பைப்பற்றி கவலைப்படாதீர்கள். ஓராண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புத் தருகிறோம் என்று சொன்னார்கள்.

அப்படியென்றால், கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில், 18 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்திருக்கவேண்டும் அல்லவா? 

செய்தார்களா?

சொன்னார்கள்; ஆசை காட்டினார்கள்; வாக்குகளைப் பெற்று, ஏமாற்றினார்கள்.

ஆனால், சொன்னதையும் தாண்டி செய்யக்கூடிய ஓர் ஆட்சி இருக்கிறது என்றால், அது தாய்மார்களுக்கு, மகளிருக்கு, குடும்பத்தினருக்கு ஒரு பெரிய வாய்ப்பாகும்.

மிகச்சிறப்பான பள்ளிக் குழந்தைகளுக்கு 

காலைச் சிற்றுண்டி திட்டம்!

உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறீர்கள்; வசதி வாய்ப்பு  அற்ற குடும்பத்துப் பிள்ளைகள், சுலபத்தில் காலைச் சிற்றுண்டியை சாப்பிடுவதில்லை; காரணம், அவசரம், அவசரமாகப் போய், பள்ளிக்கூடத்தில் மயக்கமாக, மந்தமாக இருப்பார்கள்.

ஆனால், இப்பொழுது, காலைச் சிற்றுண்டியை பிள்ளைகளுக்குத் தருகின்ற ஓர் ஆட்சி - மனிதநேயம் மிக்க ஓர் ஆட்சி - திராவிட மாடல் ஆட்சியை தவிர வேறு ஆட்சி இருக்கிறதா?

குடும்பத் தலைவிக்கு 

மாதந்தோறும் 1000 ரூபாய் திட்டம்!

சொன்னதை செய்வோம் என்பதற்கு அடையாளமாக, ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் - மிக முக்கியமான தகுதியுள்ள அத்துணை பேருக்கும் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் என்று சொன்னதை நீங்கள் அனுபவிக்கப் போகிறீர்கள்.

கலைஞர் ஆட்சியில் அடுப்பூதிய பெண்களுக்கு கேஸ் அடுப்பு.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்கிற சனாதனம்.

படிக்கவேண்டும்; பெண்கள் படிக்கவேண்டும் என்று சொன்னது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், இன்றைய திராவிட மாடல் ஆட்சி.

கல்லூரிப் படிப்பைத் தொடரும் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்!

அந்தத் திராவிட மாடல் ஆட்சியில், இன்றைக்கு மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டியது என்னவென்றால், ‘‘பெண் குழந்தைகளை - 10, 12 ஆம் வகுப்போடு நிறுத்தாதீர்கள்; கல்லூரி படிப்பிற்கு அனுப்புங்கள். ஒரு பெண் படித்தால், நான்கு ஆண்கள் படித்ததற்கு சமம்; ஒரு குடும்பமே படித்ததற்குச் சமம்'' என்ற சுயமரியாதை இயக்க பெரியார் தத்துவத்தை, திராவிட தத்துவத்தை, மனிதநேயத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி, மிக முக்கியமாக பெண்களைக் கல்லூரிப் படிப்பிற்கு வரச் செய்தார். அதனுடைய விளைவாக, கல்லூரிப் படிப்பைத் தொடரும் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்.

‘‘அய்ந்து பெண்களைப் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்'' என்று சொல்வார்கள் புரியாதவர்கள்; ஒரு குடும்பத்தில் உள்ள அய்ந்து பெண்களை நீங்கள் கல்லூரிக்கு அனுப்பினாலும், அந்த அய்ந்து பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது என்று சொன்னால், இதைவிட சிறந்த ஒரு மனிதநேயத்தை - திராவிட மாடல் ஆட்சியை வேறு எங்கே நீங்கள் காணப் போகிறீர்கள்?

அதேநேரத்தில், 2014 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் 800 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது. இங்கே தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள்; கேஸ் சிலிண்டரின் விலை உயர்வைக் கண்டித்து, மகளிர் போராட்டம் நடத்தினார்கள்; அந்தப் போராட்டத்தில், பழைய அடுப்பை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு 'புகை அடுப்பு, பகை அடுப்பு' என்று சொல்லி போராட்டத்தை நடத்தினார்கள்.

எனவே, அந்த பழைய அடுப்பில், புகை இருந்தது அல்லது பூனை இருந்தது. மக்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

மகளிரின் கண்ணீரைத் துடைப்பதற்கு...

ஆனால், இன்றைக்கு அதே பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உங்களுக்கு உண்டு. உங்களுடைய கண்ணீரைத் துடைப்பதற்கு, இதோ முதலமைச்சரின் பேனா உண்டு; முதலமைச்சரின் உத்தரவு உண்டு.

ஆகவே, அப்படிப்பட்ட முதலமைச்சர் வாழ்க! வாழ்க! இந்த ஆட்சி வளர்க! வளர்க என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

வருக, வாழ்க திராவிட மாடல்!

‘‘திராவிடம் வெல்லும் - அதை

வரலாறு என்றைக்கும் சொல்லும், சொல்லும்'' என்று கூறி முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.


No comments:

Post a Comment