"அரிஜனங்களுக்கு" ஆலயப் பிரவேசம்! அய்யமார் வயிற்றில் அன்னப் பிரவேசம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

"அரிஜனங்களுக்கு" ஆலயப் பிரவேசம்! அய்யமார் வயிற்றில் அன்னப் பிரவேசம்!

18.01.1947 - குடிஅரசிலிருந்து.... 

திருவாங்கூர் மகாராஜாவுக்குப் பகிரங்கக் கடிதம்:

அரிஜனங்களுக்குப் பத்மநாபர் கோவிலைத் திறந்து விட்டதால் அசோக மகாராஜாவுக்குச் சமமானவர் என்று உலகம் முழுவதும் விளம்பரம் பெற்றுக் கொண்ட திருவாங்கூர் மகாராஜாவே, ஓர் விண்ணப்பம்.

சகல விஷயத்திலும் பரம ஏழைகளாகிய அரிஜனங்களுக்கு வெறும் கோயிலை மாத்திரம் திறந்து விட்டு விட்டு, அதே பத்மநாபர் கோவிலுக்குள் தினந்தோறும் இருமுறை ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு மாத்திரம் வடை பாயாசத்தோடு அன்னதானம் செய்து வருவது பத்மநாபரின் பக்தரென்னும் தங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிறதா?

பிராமணர்கள் அரிஜனங்களை விட ஏழைகளா?  பிராமணர்கள் பட்டினி கிடக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா?

தங்கள் ராஜ்யத்தில் திவான் முதலிய சகல உத்தியோகங்களிலும் பிராமணர்களல்லவா அமர்ந்து ஆளும் ஜாதியினராக இருக்கிறார்கள்! படிப்பில் குறைவா? பணத்தில் குறைவா? செல்வாக்கில் குறைவா? எவ்விதத்திலும் ஒரு குறைவுமில்லாத பிராமணர்களுக்கு இன்னும் இந்த அன்னதானம் ஏன்? 

பசியாயிருப்பவர்களுக்கு அன்ன

மிடுவதா? அல்லது பசி என்பதே இன்னதென்று தெரியாதவர்களுக்கு அன்னமிடுவதா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறக்கப்படாத கோவில்களை மகா தைரியத்துடன் அவர்களுக்குத் திறந்து விட்ட தங்க ளுக்கு அன்னதான விஷயத்திலும் ஒரு மாறுதலைச் செய்வது ஒரு பெரிய காரியமா?

தீண்டாதார்களுக்கு அரிஜனம் என்ற அழகிய பெயரிட்டு விட்டதால் மட்டும் அவர்களுடைய தரித்திரம் நீங்கி விடுமா?

அரிஜனம் என்றால் என்ன அர்த்தம்? கடவுளின் பிள்ளைகள் என்பதல்லவா அர்த்தம்? கடவுளின் பிள்ளைகளுக்கல்லவா பத்மநாபர் முதலிய ஆலயங்களிலும் சர்வ அனுகூலங்களுமிருக்க வேண்டும்?

கடவுளின் பிள்ளைகளுக்கில்லாத அன்னதானம், சைத்தான் (?) பிள்ளை களுக்கு மாத்திரம் ஏன்?

இப்படிக்கு,

யார் எழுதினாலென்ன?


No comments:

Post a Comment