“சமூகத்தின் குழப்பமிகுந்த சூழ்நிலைகள் வாழ்க்கை வழியை வகுக்கும் அறிஞர்களை வழங்குகிறது” என்பது வரலாற்று அறிஞரின் ஆய்வுரை எனின் குறள் எழக் காரணமாயிருந்த சூழ்நிலை என்ன? குழப்பம் நீக்கி விழுப்பம் விளைய குறள் எழுப்பிய குரல் என்ன?
1. மதப் போராட்டம்:-
தொல்காப்பியம் தமிழுக்கு மட்டுமல்லாது தமிழர் வாழ்க்கைக்கும் இலக்கணமாக, வழிகாட்டியாக நின்று வகுத்துத் தந்த அந்த அறம், பொருள், இன்பத்தினையும், அய்ந்திணை ஒழுக்கத்தினையும் கொண்டு எவ்வித மதப் போரும் சமயப் பூசலுமின்றி மேன்மையுடன் வாழ்ந்தனர் தமிழர்.
1. கி.மு.1000-800இல் எழுந்த ஆரிய மதமும்;
2. ஆரிய மதத்தின் வேள்வி முறையை எதிர்த்த, அன்பைப் போதித்த புத்த மதமும் (கி.மு.528);
3. கொல்லாமையை கொள்கையாகக் கொண்ட மகாவீரரின் கி.மு.(540) சமண மதமும்.
மதக் குழப்பமே இல்லாத தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற முற்பட்டன. போட்டியிட்டன. குழப்பம் முற்றிய கி.பி.200இல், இம் மும்மதத்தினிடையில் மயங்கிய தமிழ் மக்களின் சுய அறிவையும், நடுநிலைமையையும், உண்மையான வாழ்க்கை வழியையும் மீண்டும் மகிழ்க்கச் செய்ய குறள் எழுந்தது.
அறப் போராட்டம்;-
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலே” அறமென்று ஆரிய மதமும், “விற்கும் ஊனை உண்ணுதல் தவறல்ல” என்று புத்த மதமும் கூறியதை எதிர்த்து “செந்தண்மை பூண்டோர் அறவோர்”, “மனத்துக் கண்மாசிலன் ஆதல் அறம்“, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று”, “அறம் எனப் பட்டதே இல்வாழ்க்கை” என்ற அறத்தை உணர்ந்த எழுந்தது குறள்.
3. பொருள் போராட்டம்:-
சமூகத்தில் இரப்போரும், செல்வத்தால் இறுமாந்திருப்போரும், இருத்தலைக் கண்டு “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், தொகுத்த அறத்துள் தலை” என்று பொது உடைமையையும், “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்” என்று ஏழ்மையின் காரணத்தை விதி அல்லது கடவுளிடத்தில் ஒப்படைக்காது சமூகத்திடம் ஒப்படைத்து சிறந்த பொருளாதார பொதுவமைப்பையும் உணர்த்த எழுந்ததே குறள்.
4. ஒழுக்கத்தின் வீழ்ச்சி:-
பல்வேறு மடமை விதிகளாலும், கண்மூடிப் பழக்கங்களாலும், குடும்ப அமைப்பிலும், சமூக அமைப்பிலும் ஏற்பட்ட ஒழுக்கத்தின் வீழ்ச்சியை மாற்ற, “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்“ என்று கூறி மனிதனை நற்குடிமகனாக்க எழுந்தது குறள்.
5. சமத்துவம்:-
“பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”, “மேல்வல்லார் மேலோருமல்லர். கீழல்லார் கீழோருமல்லர்” என்று கூறி வருணாசிரம மடமையை ஒழிக்க எழுந்தது குறள்!
- சேந்தநாடு கோ.கண்ணன் (‘விடுதலை’ - 12..3.1961 )
No comments:
Post a Comment