இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள்! இந்திய வரலாற்றில் கவுதமப்புத்தர் தொடங்கி, மகாத்மா ஜோதிரா பூலே, சாரு மகராஜ், நாராயணகுரு, தந்தை பெரியார் என்ற வரிசையை நோக்கும்போது அத்தனைப் பேர்களுமே பார்ப்பனீய வல்லாண்மையை அதன் சனாதன கோட்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள் ஆவார்கள்.
"நான் வேறு சில இடங்களில் கூடச் சொல்லியிருக்கிறேன்"
"For no intellectual class has prostituted its intelligence for the sole purpose of inventing a philosophy to keep his uneducated countrymen in a perpetual state of servility, ignorance and poverty as the Brahmins have done in India in the Name of Hinduism"
என்று கல்வெட்டுப் போல கருத்து மணிகளைப் பொறித்தவர் அண்ணல் அம்பேத்கர்.
மேலும் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்:
"இந்துக்களிடையே எண்ணற்ற ஜாதிகள் இருந்தாலும் அவற்றை நான்கு வகுப்புகளின் கீழ்க் கொண்டு வரலாம். இந்த நான்கு வகுப்பில் முதல் வகுப்பினர் ஆளும் வகுப்பினர்; மற்ற மூன்று மற்றும் நான்காம் வகுப்பினர் இவர்களைச் சார்ந்து இருக்கக் கூடியவர்கள்.
இதில் எந்தப் பிரிவு மக்கள், தீண்டத்தகாத மக்களின் இயல்பான கூட்டாளிகளாக அமைவார்கள் என்று பார்ப்போம். முதல் வகுப்புப் பிரிவினர், இந்து மதத்தின் வாய்ப்பு - வசதி பெற்ற பிரிவினர். இந்த சமூக அமைப்பு இவர்களால்தான் உருவாக்கப் பட்டது. இந்த ஒரு பிரிவு மட்டுமே இதனால் பயன் பெறுகின்றது. எனவே இந்த அமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.
குற்றப் பரம்பரையினர் மற்றும் பழங்குடி மக்களின் நிலை என்ன? இவர்கள் இந்து சமூக அமைப்பைத் தூக்கி எறிய வேண்டிய அளவுக்கு நியாயம் உள்ளது. சூத்திரர்களின் நிலை என்ன? இந்து சமூக அமைப்பின் சட்டங்கள் - இரண்டாம் வகுப்பினருக்கும் நான்காம் வகுப்பினரான சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் எதிராக உள்ளது.
இதை எளிதில் புரிந்து கொள்வதற்கு சூத்திரர்கள் நிலை குறித்து மனுவின் சட்டம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். மனு பார்ப்பன, சத்திரிய, வைசியர்களிடம் பின் வருமாறு கூறுகிறான். "சூத்திரர்கள் ஆட்சி செய்யும் நாட்டில் நீங்கள் குடியிருக்காதீர்கள்" (அண்ணல் அம்பேத்கர் தொகுப்பு 6 பக்கம் 61).
இதே கருத்தின் அடிப்படையில் தென்னகத்தில் தோற்று விக்கப்பட்ட திராவிடர் இயக்கம், சுயமரியாதை இயக்கம் வருண தர்மத்தின் அடிக்கட்டுமானத்தைத் தகர்க்கும் நிலையில் பெரும் பணி ஆற்றியது - ஆற்றியும் வருகிறது.
தந்தை பெரியாரின் ஒப்பற்ற தலைமையால் பார்ப்பனர் அல்லாதார் மத்தியில் மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இதோ தந்தை பெரியார் பேசுகிறார்:
"நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம். என் றாலும் சமுதாயத் துறையில், பார்ப்பனீய வெறுப்புள்ளவன். அதுதான் என்னைப் பகுத்தறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கியது.
இந்தச் சமுதாயச் சீர்திருத்தம் என்பதற்கு முதற்படி பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் பதவி உத்தியோகங்களை விகிதாச்சாரப்படி கைப்பற்ற வேண்டியது என்பதைத்தான் கிஙிசிஞி யாகக் கொண்டேன்.
ஆனதினாலேயேதான் நான் வகுப்புவாதி என்று சொல்லப் பட்டேன் என்பதல்லாமல் நானும் வகுப்புவாத உருவகமாகவே இருந்து வருகிறேன்" என்று மிகவும் வெளிப்படையாக அறிவு நாணயமாக அடித்துக் கூறுகிறார் தந்தை பெரியார் ('விடுதலை' 5.3.1969).
இன்றும் நிலைமை என்ன? கல்வி நிலையிலும் உத்தியோக நிலையிலும் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளவர்கள் பார்ப் பனர்களே!
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு வாய்ப்பின் வாயிலை அடைக்கும் வஞ்சக செயலில் ஈடுபட்டு வருகின்றார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது இத்தகைய நயவஞ்சக ஏற்பாடுதானே!
இந்த நிலை நீடித்தால் என்ன ஆகும்? தொலை நோக்கோடு அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்.
"சமத்துவம் இன்மை மற்றும் பாரபட்ச தொல்லையால் பாதிக்கப்படும் அடித்தட்டு மக்கள் ஒரு கட்டத்தில், நாட்டின் அரசியல், ஜனநாயகக் கட்டமைப்பைத் தகர்த்து விடுவார்கள்" என்று எச்சரிக்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
இத்தகைய இந்துத்துவா அமைப்பின் எதிரியான அண்ணல் அம்பேத்கர் அவர்களை இந்துத்துவா சக்திகள் அணைத்து உட்கொள்ள விரும்புகின்றன.
அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடும் அளவுக்கு அற்பத்தனமான வேலையில் இறங்குகின்றனர்.
வைதீக பார்ப்பனிய ஆணி வேரை சுட்டெரிக்க வந்த கவுதமப் புத்தரையே மகா விஷ்ணுவின் அவதாரம் என்று ஆக்கியவர்கள் ஆயிற்றே!
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள்!
அண்ணலின் பிறந்த நாளில் இதனைக் கவனமாகக் கொள்வோம்!
வாழ்க அண்ணல் அம்பேத்கர்! வாழ்க தந்தை பெரியார்!
No comments:
Post a Comment