சமூக நீதிக்கான தேசிய மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

சமூக நீதிக்கான தேசிய மாநாடு

தெற்கிலிருந்து ஏவப்பட்ட அணுகுண்டு

சரவணா ராஜேந்திரன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைய வழியாகவும் தலைநகர் டில்லியிலும் நடந்து முடிந்த சமூக நீதிக்கான தேசிய மாநாடு  கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் அனைவரையுமே ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தது.

இது இந்திய வரலாற்றில் விடுதலைக்குப் பிறகான ஒரு மாபெரும் நிகழ்வு ஆகும். இணையதளம் வழியாக நடைபெறுவதால் முக்கிய தலைவர்கள் பங்குகொண்டனர். இது மட்டும் திறந்தவெளி மாநாடாக அமைந்திருந்தால் மிகப் பெரிய விழாவாக நடைபெறும் மூடநம்பிக்கைக்காக கூடும் கும்பமேளாவை விட சமுகநீதிக்காக கூடிய சாமாஜிக் மேளாவாக (சமுகநீதித் திருவிழா)வாக அமைந்திருக்கும்  மராட்டிய மாநிலம் சதாராவில் 01.05.2008 அன்று தொழிலாளர் நாள் விழா கொண்டாடத்தை பாம்சேப் அமைப்பினர் நடத்தினர் - அதில் நான் கலந்துகொண்டேன். குறைந்த பட்சம் 300 லாரிகளில் அந்த அமைப்பினர் மாநிலம் முழுவதிலிருந்து கலந்துகொண்டனர். அனைவருமே நடுத்தர உழைக்கும் மக்கள். 

முதலமைச்சர் நடத்திய சமூக நீதிக்கான தேசிய மாநாடு,  மகாராட்டிரா, வடக்கு மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் அல்லது ஜார்கண்ட் மாநிலத்தில் ஏதாவது ஒரு நகரில் நடந்திருந்தால் இந்திய வரலாற்றில் பதிக்கப்படவேண்டிய பெரும் திரள் மக்கள் கூட்டம் கலந்துகொண்டு இருக்கும், பாம்சேப் அமைப்பினரே லட்சக்கணக்கில் கலந்துகொள்வார்கள். அவர்களோடு ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா தொண்டர்கள், பீகாரின் ராஷ்டிரிய ஜனதாதளத் தொண்டர்கள், உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட  சமூக இயக்கங்களின் உறுப்பினர்கள் தொண்டர்கள் என அதிக பட்சம் 10 லட்சம் வரையில் மக்கள் கூடி இருப்பார்கள். 

இதற்கு ஒப்புதல் கொடுப்பது போல் பாட்னாவில் இருந்து இணையதளம் வாயிலாக கலந்துகொண்ட பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கூறும் போது அடுத்த கூட்டம் பாட்னாவில் நடத்த அழைப்பு விடுக்கிறேன் என்று கூறியிருந்ததை குறிப்பிட வேண்டும்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் கூடிய அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் வரவேற்புரையை அடுத்து பேசிய பாம்சேப் தலைவரும் எனது நண்பருமான வாமன் மேஷராம் சமுகநீதியோடு சமூக உரிமைகள் பெறவேண்டும் என்றார்.

தந்தை பெரியார் மூட்டிய சமூக உரிமைக்கான நெருப்பை மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் அறிஞர் அண்ணா முன்னெடுத்தார், அவருக்குப் பிறகு அந்த நெருப்பை மாநிலமெங்கும் பரவச்செய்த பெருமை முத்தமிழறிஞர் கலைஞரைச் சேரும். இன்று அந்த நெருப்பை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் பெருமை மிகுந்த பணியை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்துவருகிறார். 

இந்தியாவின் 4 முக்கிய தூண்களாக அரசியல், நீதித்துறை, ஆட்சி அதிகாரம் மற்றும் ஊடகத்துறை இவற்றில் அடித்தட்டு மக்களுக்கான இடம் இன்றும் கிடைக்காமல் இருக்கிறது, தமிழ்நாடு மிகவும் பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி இந்தியாவிற்கு கூறுகிறது, இங்கே அனைத்தும் அனைவருக்கும் என்ற இலக்கை நோக்கி வேகமாக சென்றுகொண்டு இருக்கிறது. மற்ற மாநிலங்கள் மிகவும் தொலைவில் உள்ளன. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்றார். இதைத்தான் ‘சாமாஜிக் சேஞ்ச்‘ -  சமுக மாற்றம் வேண்டும் என்று கூறினார்.

கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா அவர்கள் 4 தூண்களோடு சேர்த்து தனியார் துறையிலும் அடிமட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமை வேண்டும் என்று கூறினார்.  

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வியாதவ் தனது உரையில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கர்பூரி தாக்கூர் உள்ளிட்டோர் சமூகநீதிக் களத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்றது குறித்து பேசினார்,  அவரது பேச்சில் நாடு முழுவதும் சமூகநீதிக்கான களத்தை தயார்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துச்சென்ற விதம் எங்களுக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது, அடுத்த கூட்டம் பாட்னாவில் நடத்த அனுமதிவேண்டும் என்றார். 

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பேசும் போது தற்போது ராமநவமி கொண்டாட்டம் என்ற பெயரில் மதவெறிக்கூட்டம் வன்முறையில் இறங்குவதும், அதுவும் ஒரே மாதிரி வட மாநிலங்களில் நடைபெறுவதும் இது திட்டமிட்ட ஒன்றாக இருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார்.

 ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெகலாட் தனது உரையில்  பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு நாடு எங்கும் சமூக நீதியின் குரல் நசுக்கப்பட்டு வருகிறது. மீண்டும் பின்னோக்கி கொண்டுசெல்லும் சக்திகளின் பிடியில் நாடு உள்ளது, இதனை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது, அதற்கான தூண்டுகோலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளார் என்ற பொருள் படப் பேசினார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தலைவர்களின் பேச்சும் நாடு முழுவதும் சமுகநீதிக்கான குரல் உரத்து ஒலிக்கவேண்டும் அதற்கான சங்கநாதத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் முழங்கி விட்டார் என்று கூறினார்கள்.

உண்மைதான். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போதையை சூழலை உணர்ந்து ஒன்றுபட்டு நிற்கத் துவங்கிவிட்டன. முன்பு, தமிழ்நாட்டின் தலைமகனே வா தலைமையேற்க வா என்ற தமிழர்கள் அழைத்தனர். இன்று இந்தியா முழுவதும் அதே குரல் எதிரொலிக்கிறது.

அமெரிக்காவில் நிறவெறியை ஒழிக்க அமெரிக்காவின் தென் மாகாணங்களான அலபாமா, அரகன்சாஸ் ஜார்ஜியா புளோரிடா தெற்கு மற்றும் வடக்கு கரோலினா பகுதியிலிருந்து கிளம்பியது புரட்சியின் தீப்பொறி. அதே போல் இப்போதும் பாசிச ஹிந்த்துத்துவ சக்திகளை அழித்தொழிக்க தெற்கிலிருந்து சமூகநீதி என்னும் அணுகுண்டு வீசப்பட்டுள்ளது, இதன் வீச்சை மக்களிடையே கொண்டுசேர்க்கவேண்டியது வட இந்திய ஜனநாயக, சமுகநீதிக்கு ஆதரவான அனைத்து பெருந்தலைவர்களின் கடமை ஆகும்.

No comments:

Post a Comment