ஆவின் தயிர் உறையில் ஹிந்தி வார்த்தை எதிர்ப்பால் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

ஆவின் தயிர் உறையில் ஹிந்தி வார்த்தை எதிர்ப்பால் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது

 புதுடில்லி, ஏப். 1- ஆவின் தயிர் உறையில் ஹிந்தி வார்த்தையைப் பயன்படுத்தக்கூறிய சர்ச்சைக்குரிய உத்தரவு, எதிர்ப்பு எழுந்ததால் திரும்பப்பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆவின், கருநாடகத்தின் நந்தினி, கேரளத்தின் மில்மா என பல்வேறு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளுக்கு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருகிற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.அய்.) ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில், தயிர் உறையில் தயிரைக் குறிக்கிற ஆங்கில வார்த்தைக்கு (கேர்டு) பதிலாக 'தஹி' என்ற ஹிந்தி வார்த்தையை குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஹிந்தியைத் திணிக்கும் இந்த முயற்சி, தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலமைச்சர் எதிர்ப்பு இதுகுறித்து டுவிட்டரில் தனது எதிர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார்.

ஆவின் நிறுவனமும் தமிழ்நாட்டில் ஆவின் என்ற பெயரில் பால், தயர், நெய் என பால் பொருட்களை சந்தையிடுகிற தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பும், இந்தியில் 'தஹி' என்ற வார்த்தையைத் தயிர் உறையில் பயன்படுத்த மாட்டோம் என்று அறிவித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இப்படி கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து தனது உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திரும்பப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக 30.3.2023 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உணவு வணிக செயல்பாட்டு நிறுவனங்கள் இப்போது லேபிளில் அடைப்புக்குறிக்குள் உள்ள பிற பிராந்திய பொதுவான பெயருடன் 'தயிர்' என்ற வார்த்தையைக் குறிக்கும் 'கேர்டு' (curd) என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

மருத்துவ நிதி உதவி பயனாளிகளை   சென்றடைய ஆலோசனை திட்டம்

சென்னை, ஏப். 1- மருத்துவ நிதி உதவி அளிப்போர் ஏமாறாமல் இருக்கவும், அவர்களின் நிதி உதவி பயனாளி களை  சென்றடைவதை உறுதிப்படுத்தவும், இந்தியாவின் முன்னணி மருத்துவ நிதியளிப்புத் தளம் (இம்பாக்ட் குரு) அய்ந்து அம்சஆலோசனைகளை வழங்கியுள்ளது.

நிதி திரட்டும்   தளங்களின் தொழில் நுட்பத்தின் ஒருங்கிணைப்பு நிதி திரட்டும் செயல் முறையை எளிதாக்கி யிருந்தாலும், நன்கொடையாளர்களையும்  பயனாளி களையும் தவறான நபர்கள் ஏமாற்றும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். எனவே, ஒரு ஆலோசனைதேவை. 

அங்கீகரிக்கப்படாத நபர்களிடமிருந்து எந்த பணத்தையும் திரும்பப்பெறும் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டாம் நோயாளியின் தகவல் மாற்றப்பட்ட சந்தர்ப் பங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு தவறான நபர் மற்ற எல்லா விவரங்களையும் தக்கவைத்துக் கொண்டு மருத்துவ ஆவணங்களில்இருந்து நோயாளியின் பெயரை மாற்றலாம். பின்னர் போலியான நிதி திரட்டலை உருவாக்க முயற்சிப்பார்கள். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலை களைத் தவிர்க்க,  நிதி திரட்டும் தளங்கள் வலுவான விடா முயற்சி செயல்முறையைக் கொண்டுள்ளன. மருத்துவ ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சில தளங்கள் களசரிபார்ப்பு அலுவலர்கள் மூலம் உடல் பரிசோதனைகளையும்மேற்கொள்கின்றன.

சமுதாயத்திற்கு திருப்பிக் கொடுப்பது ஒரு உன்னதமான செயல். ஆனால் உங்களின் நன்கொடை சரியான பயனாளி களை சென்றடைவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். எனவே, தவறான நபர்களிடம்  இருந்துவிழிப்புடன் இருங்கள்.

விலைவாசி உயரும் ஆபத்து

தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: ஒன்றிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சென்னை, ஏப். 1- தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் நேற்று (31.3.2023) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.10இல் இருந்து, அதிகபட்சமாக ரூ.60 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரிதும் கவலைக்கு உள்ளாகி உள்ளனர். நடப்பு நிதி யாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்ட ணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்றுதேசிய நெடுஞ்சாலைகள் திட்டஆணையம் பரிந் துரை செய்துள்ளது. இதன்படி, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், கார்களுக்கு ரூ.60இல் இருந்து ரூ.70-ஆகவும், இலகுரக வாகனங்களுக்கு ரூ.105இல் இருந்து ரூ.115, லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205இல் இருந்து ரூ.240, மூன்று அச்சு (ஆக்சில்) வாகனங்களுக்கு ரூ.225இல் இருந்து ரூ.260, நான்கு முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு ரூ.325இல் இருந்து ரூ.375, ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ரூ.395இல் இருந்து ரூ.455-ஆக சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பழைய சுங்கக் கட்டணத்தில் இருந்து குறைந்தபட்சமாக ரூ.10முதல், அதிக பட்சமாக ரூ.60 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, கார் மற்றும் கனரக வாகனங்களில் பயணம் மேற்கொள்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், லாரி வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.மேலும், தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயரும் என்று பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது. இதேபோல, தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்னை உத்தண்டி சுங்கச்சாவடி மற்றும் கோவளம் சுங்கச்சாவடியிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. 

கண்டன ஆர்ப்பாட்டம்:

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் நேற்று (31.3.2023) ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரவாயல் சுங்கச்சாவடி முன் தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஅய்டியு) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாநகர மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் பா.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியம் உள்ளிட்டோர் பங்கேற்று, சுங்கக் கட்டண உயர் வைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதேபோல, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், பட்டறை பெரும்புதூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று (ஏப்.1) லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment