குஜராத் கலவரங்களில் நரோடா பாட்டியா படுகொலை அவ்வளவு எளிதில் மறக்கப்படக் கூடியதல்ல!
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது நரோடா பாட்டியாவில் 11 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகரும் குஜராத் மேனாள் அமைச்சருமான மாயா கோட்னானி உள்ளிட்ட 68 பேரை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து இருக்கிறது
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது 97 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கில் இருந்து பாஜக மேனாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்தள் பிரமுகர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 68 பேர் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றனர். கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற இவர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்தபோது அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ரா பகுதியில் தீயில் எரிந்த சம்பவத்தை தொடர்ந்து, குஜராத் மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
உலகை உலுக்கிய இந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். குழந்தைகள் தீ வைத்து எரிக்கப்பட்டனர். இதில் அகமதாபாத்தின் நரோடா பாட்டியா பகுதியில் நிகழ்ந்த கொடூரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
கலவரம் செய்யும் நோக்கத்தோடு அப்பகுதிக்குள் நுழைந்த கும்பல் கண்ணில் படுபவர்களை எல்லாம் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொடூரமாக தாக்கிக் கொன்றது. இதில் 97 பேர் அப்பகுதியில் கொல்லப்பட்டார்கள். குறிப்பாக அங்கிருந்த வீடுகளுக்குத் தீ வைத்து எரிக்கப்பட்டதில் வீட்டினுள்ளே இருந்த 11 முஸ்லிம்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கொலை, கொலை முயற்சி, சட்ட விரோதமாகக் கூடுதல், கலவரம் செய்தல், கொடூர ஆயுதங்களை கொண்டு கலவரம் செய்தல், கொலைச் சதி, கலவரத்துக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வரை விதிக்க முடியும்.
கீழ் நீதிமன்றத்தில் இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த கலவரத்துக்கு மூளையாக செயல்பட்ட குஜராத் பாஜக மேனாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பஜ்ரங்தள் அமைப்பு பிரமுகர் பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், குஜராத் உயர்நீதிமன்றத்தால் மாயா கோட்னானி பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வு அமைப்புக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 187 சாட்சிகளிடம் புலனாய்வு அமைப்பு தரப்பாலும், 57 சாட்சிகளிடம் எதிர்மனுதாரர் தரப்பாலும் விசாரணை நடத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கிய இந்த வழக்கு விசாரணை 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
6 நீதிபதிகளின் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதற்கு இடைப்பட்ட விசாரணைக் காலத்திலேயே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 86 பேரில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் நரோடா பாட்டியா படுகொலை சம்பவம் நடந்தபோது - தான் அப்பகுதியிலேயே இல்லை என்றும், அப்போது குஜராத் சட்டமன்றத்தில் தான் இருந்ததாகவும், அதன் பிறகு சோலா அரசு மருத்துவமனைக்குச் சென்றதாகவும் - மாயா கோட்னானி தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்த அப்போது குஜராத் மாநில அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு தாக்கீது அனுப்பி உறுதிப்படுத்துமாறு அவர் கோரினார். அதைத் தொடர்ந்து அமித்ஷாவிற்கு சிறப்பு நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாயா கோட்னானிக்கு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி அமித்ஷா வாக்குமூலம் அளித்தார்.
இதில் மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கிக்கு எதிரான வலுவான ஆதாரமாக ஆஷிஷ் கேட்டான் என்ற பத்திரிகையாளர் நடத்திய "ஸ்டிங் ஆபரேசன் வீடியோ" இருந்தது. அதில் இருவரும் கலவரம் நடந்த நேரத்தில், அந்த இடத்தில் இருந்தது உறுதியானது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தபோது நீதிபதி எஸ்.எச்.வோரா குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
அடுத்தடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் யாக்னிக், கேகே பட், பிபி தேசாய் ஆகியோர் ஓய்வு பெற்றனர். அடுத்து வந்த நீதிபதி எம்கே தவேயும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கு நீதிபதி பக்சி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 68 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்கள்.
குஜராத்தில் நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான திட்ட மிட்டக் கலவரம் சொல்லுந்தரமன்று - ஓர் அமைச்சர் நிலையி லிருந்த ஒருவர் முன்னின்று கலவரத்தை நடத்தியது மன்னிக்கத் தக்கது தானா?
கலவரம் நடந்த இடத்தில் மாயாகோட்னானி இருந்தார் என்பதற்கு வீடியோ சாட்சியம் இருந்தும், அதற்கு மாறாக அப்போது தான் சட்டப் பேரவையில் இருந்ததாகக் கூறவும், வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல குஜராத் அமைச்சரவையில் இருந்தவர் 'ஆமாம் சாமி' போட்டதெல்லாம் சீரணிக்கக் கூடியவை தானா?
கொலைக்குக் காரணமாக இருந்தவர்கள் கொத்துக் கொத்தாக விடுதலை செய்யப்படுவதும் - இது நாடா? சுடுகாடா என்ற எண்ணத்தைத்தானே ஏற்படுத்துகிறது! - அன்றைய குஜராத் முதல் அமைச்சர்தான் இன்றைய பிரதமர்!
No comments:
Post a Comment