மேற்கு வங்க ஆட்சியை கவிழ்க்க சதி அமித்ஷாமீது மம்தா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

மேற்கு வங்க ஆட்சியை கவிழ்க்க சதி அமித்ஷாமீது மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா,  ஏப்.18 பா.ஜனதா 35 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றினால் மம்தா அரசு நீடிக்காது என்று அமித்ஷா கூறியதன் மூலம், தனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது என்று மம்தா  குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளில் பா. ஜனதா வெற்றி பெற்றால், 2025-ஆம் ஆண்டுக்கு மேல் மம்தா   அரசு நீடிக் காது என்று அவர் கூறினார். மம்தா அரசின் பதவிக்காலம், 2026-ஆம் ஆண்டு மே மாதம்வரை இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதுகுறித்து மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா  நேற்று (17.4.2023) செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:  

கடந்த 14.4.2023 அன்று அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். நல்லது. ஆனால், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை கவிழ்ப்பது பற்றி நாட்டின் உள்துறை அமைச்சர் எப்படி பேசலாம்?

அவரது பேச்சு ஜனநாயக விரோதமானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 35 தொகுதிகளில் வெற்றி பெற்றால், மம்தா அரசு முழு பதவிக்காலமும் நீடிக்காது என்று அவர் ஒருபோதும் பேசக்கூடாது. குண்டர் போல் பேசக்கூடாது. அப்படி பேசியதற்காக அவர் பதவி விலக வேண்டும். எனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது என்பது அமித்ஷா பேச்சு மூலம் நிரூபணமாகிறது.  ஒரு முதல் அமைச்சருக்கு சம்மன் அனுப்பி, விசாரிக்க முடியும் என்று காட்டுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பி உள்ளனர். அப்படியானால், மத்திய உள்துறை அமைச்சரிடம் ஏன் விசாரிக்க முடியாது?

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது. பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment