தஞ்சை, ஏப்.14 தந்தை பெரியாரும் - அண்ணல் அம் பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துத் தெரிவித்தார்.
தஞ்சையில் இன்று (14.4.2023) டாக்டர் அம்பேத்கரின் 133 ஆம் ஆண்டு பிறந்த நாளில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து தோழர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
பேரன்புமிக்க பெரியோர்களே, அனைத்துக் கட்சி, அனைத்து இயக்கப் பொறுப்பாளர்களே, தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்களே, மண்டலத் தலைவர் அய்யனார் அவர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்பேத்கருடைய பணியைத் தொடருவோம்!
இன்றைக்குப் புரட்சியாளர் மாமேதை தலைசிறந்த மானுடநேயர் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய 133 ஆம் ஆண்டு பிறந்த நாளில், அவருடைய சிலைக்கு மாலை போட்டு, அவருடைய பெருமைகளை எடுத்துச் சொன்னால் மட்டும் போதாது; அவர் எந்த லட்சியத்திற்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தாரோ, அந்தப் பணியை நாம் நிறைவேற்றவேண்டும்.
தந்தை பெரியாரும், பாபாசாகேப் அண்ணல் அம் பேத்கர் அவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஒருவருடைய கருத்து, இன்னொருவருடைய கருத்து என்றில்லை. இரண்டு பேருமே ஜாதி ஒழிப்பை, பெண்ணடிமை ஒழிப்பை, பிறவிப் பேதத்தை ஒழிப்பதற் காகத்தான் அவர்கள் பாடுபட்டார்கள். இன்னமும் ஜாதியும், தீண்டாமைக் கொடுமையும் இருக்கின்றன.
இன்னமும் வேங்கைவயல் நிகழ்வுகள் நடக்கின்ற நிலை. நம்மை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தக் கூடிய அளவிற்கு இருக்கின்றபொழுது, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தால் மட்டும் போதாது நண்பர்களே, அவருடைய கொள்கைகளை நாம் பரப்ப வேண்டும்; அதற்காக நாம் உழைக்கவேண்டும். தியாகம் செய்யக்கூடிய தன்னலமறுப்பை நாம் ஏற்கவேண்டும் என்பதை எடுத்துக்கூறி, அம்பேத்கர் அவர்களுடைய பணியைத் தொடருவோம்!
வாழ்க அம்பேத்கருடைய கொள்கைகள்!
வளர்க அவர் காண வேண்டிய சமுதாய வெற்றிகள்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரை யாற்றினார்.
No comments:
Post a Comment