கோவில் இப்படித்தான்!
ஜெயலலிதா இருந்தபோது ஒருவருக்குப் பிறந்த நாள் என்றால், அவருக்குப் பிடித்தமான கோவிலுக்குப் பணம் செலுத்தி, அன்னதானம் வழங்கலாம். என் பிறந்த நாளுக்காக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு ரூ.70 ஆயிரம் அனுப்பினேன். ஆனால், சாப்பாடு போடவில்லை. அங்கு அன்னதான கூடத்தைப் பூட்டி வைத்துள்ளனர். கேட்டால், பிரசாதமாகக் கொடுக்கிறோம் என்கின்றனர். இந்த விஷயத்திலேயே இப்படி நடக்கிறது என்றால், மற்ற விஷயங்களில் என்னென்ன நடக்கும்?
- சசிகலா பேட்டி,
‘தினமலர்', 16.4.2023)
கோவிலுக்குப் பணம் கொடுத்தவர் எந்தக் காரணத்துக்காகக் கொடுத்தார் என்பதுதானே முக்கியம். கோவிலில் அன்னதானம் செய்யும் பழக்கம் உண்டா, இல்லையா? அதற்கென அன்னதானக் கூடம் இருப்பது எதற்காக? இந்த நிலையில், நாங்கள் அன்னதானம் போடவில்லை; பிரசாதமாகக் கொடுக்கிறோம் என்று முடிவு செய்ய இவர்கள் யார்?
பிரசாதம் என்றால் ‘நாம்கே வாஸ்தி'தானே! அதற்குக் கணக்கும் இல்லை, வழக்கும் இல்லை.
ஆழ்ந்த பக்தரான சசிகலா இந்த விஷயத்திலேயே இப்படி நடக்கிறது என்றால், மற்ற விஷயங்களில் எல்லாம் என்னென்ன நடக்கும் என்று குற்றஞ்சாட்டுகிறார், வேதனைப்படுகிறார் என்பதிலிருந்தே கோவில் என்பது அர்ச்சகப் பார்ப்பனர்களின் சுரண்டல் கூடம் - கொள்ளையடிக்கும் கூடாரம் என்றுதானே சொல்லவேண்டும். இல்லாவிட்டால், தேவநாதன் (காஞ்சிபுரம்), பத்ரிநாத் (சிறீவில்லிபுத்தூர்) இவர்களின் களியாட்ட இருட்டறை என்று எடுத்துக்கொள்ளலாமா?
மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியதுதான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.
1976 மே மாதம்
காஞ்சிபுரத்திலே நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியது என்ன?
பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது என்று சொல்லவில்லையா?
கோவிலில் அறநிலையத் துறையின் கட்டுப்பாடு கூடாது என்று கூக்குரல் போடுகிறார்களே, எதற்குத் தெரியுமா? லைசென்ஸ் இல்லாமலே கொள்ளையடிக்கத்தான் - வாரி சுருட்டத்தான்.
இதை நாம் மட்டும் சொல்லவில்லை. சர்.சி.பி.ராமசாமி அய்யர் தலைமையிலான இந்து சமய அறநிலையக் கமிஷன் (1960-1962) இந்திய அரசுக்குச் சமர்ப்பித்த அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதே!
சிந்தியுங்கள், பக்தர்களே!
- மயிலாடன்
No comments:
Post a Comment