புதுடில்லி, ஏப். 1 காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு தொடர்பாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்திக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு பற்றியும், அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு பற்றியும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். ராகுல்காந்தி மேல்முறையீடு செய்யும் மனநிலையில் இருக்கிறார். இந்த தீர்ப்பு நிற்குமா? பதவி பறிப்புக்கு முகாந்திரம் உள்ளதா? என்று தெரிய வரும். நீதித்துறை சுதந்திரம், அடிப்படை ஜனநாயக கொள்கைகள் ஆகியவை ராகுல்காந்திக்கு எதிரான வழக்கிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இக்கருத்து, பா.ஜனதா_-காங்கிரஸ் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனி கருத்தை வரவேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியதாவது: ராகுல்காந்தியை துன்புறுத்துவதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகம் எப்படி சமரசம் செய்து கொள்ளப்படுகிறது எனபதை கவனத்தில் கொண்டதற்காக ஜெர்மனி வெளியுறவு அமைச்சகத்துக்கு நன்றி என்று அவர் கூறினார். இதற்கு பாஜக அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ வெளிநாடுகள் இந்திய உள்விவகாரத்தில் தலையிடுவதா என்று கூறியிருந்தார். இதற்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் அதன் ஊடகப்பிரிவு தலைவர் பவன்கேரா கூறியதாவது:- முக்கிய பிரச்சினையில் இருந்து கிரண் ரிஜிஜு ஏன் திசைதிருப்புகிறார்? அதானி குறித்து ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமரால் பதில் சொல்ல முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. மக்களை திசைதிருப்புவதற்கு பதிலாக கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment