சிறைச்சாலையில் பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

சிறைச்சாலையில் பெரியார்

கேசவமேனன் தான் சிறையில் இருந்தது குறித்து கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார்.

‘சுற்றிலும் தாழ்வரையுள்ள விசாலமானதொரு அறையில் மாதவனுக்கும் எனக்கும் படுத்துறங்கக் கட்டில்கள் போட்டி ருந்தார்கள். குளியலறையும், எழுதுவதற்கும் படிப்பதற்கும் வசதியுள்ள இடமும், நடப்பதற்கு முற்றமும் இருந்தன. அந்தந்த நேரத்திற்கு ஏற்ற விருப்பமான உணவு கிடைத்தது. எங்களுக்கு வேண்டியதை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் கருத்தாக இருந்தனர். செய்திப் பத்திரிகைகளும், புத்தகங்களும் எங்களுக்குக் கொண்டு வந்து தந்தார்கள். உறவினருக்கும் நண்பர்களுக்கும் கடிதங்கள் எழுதவும், அவர்களிடமிருந்து வரும் பதில் கடிதங்களைப் பெறுவதற்கும் அனுமதியளித்தனர். அன்றாடம் குறித்த நேரத்தில் எங்களைக் காண வருபவர்களுடன் பேசுவதற்கும் தடை ஏதுமில்லை. சிறையில் இருந்து வெளியே செல்ல முடியாது என்ற ஒன்றைத் தவிர, மற்ற வாழ்க்கை வசதிகளைப் பொருத்து எங்களுக்குத் தேவைப்பட்ட எல்லாம் எளிதாகவே கிடைத்தன”.

இதே சிறையில் கடுங்காவல் தண்டனை பெற்ற பெரியார் எப்படி நடத்தப் பெற்றார் என்பதைக் கேசவ மேனன் கீழ் கண்டவாறு பதிவு செய்திறார்.

“கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் குல்லாய், முழங் காலுக்குக் கீழே தொங்குகின்ற  ஒரு வேட்டி, கழுத் தில் கைதி எண்  குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை இவற்றோடு ஈ.வெ. ராமசாமி கொலைகாரர்களோடும். கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கிறார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு வேலை ஒரு நாளைக்குச் செய்வானோ, அது போல் இரு மடங்கு வேலை செய்கிறார்.”

“ஜாதி இந்து என்ற சொல்லக் கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காகச் செய்த தியாகம் நமக்கும் புது வாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.

“ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக் கூடிய நாட்டுப் பற்று, உற்சாகம், அனுபவம், பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காக, எவ்வனவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே, அதைப் பார்த்து இந்த மாநில மக்கள் யாருக்குமே வெட்கம் ஏற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவம் மிக்க தலைவர்கள், தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கி எறிந்து விட்டு, தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வரவேண்டாமா?”

No comments:

Post a Comment