வைக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முழக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 2, 2023

வைக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முழக்கம்!

 வைக்கம் மண்ணில் நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறோம்!

கேரளாவும் - தமிழ்நாடும் இணைந்து வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது சிறப்பானது!

74 நாள்கள் சிறை; 67 நாள்கள் போராட்டம் என்ற சிறப்புக்குரியவர் தந்தை பெரியார்!

தமிழ்நாடு, இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத் தலைவர் தந்தை பெரியார்!

சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், மானுடப்பற்று, சமூகநீதி, பெண்ணுரிமை, மதச்சார்பற்ற அரசியல், அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை -

பெரியாரியத்தின் உலகளாவிய கருத்துகளை வென்றெடுக்க நாம் அனைவரும் உழைப்போம், சூளுரைப்போம்!

வைக்கம், ஏப்.2 சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், மானுடப் பற்று, ரத்த பேதம், பால் பேதமற்ற தன்மை சுயமுன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சமூகநீதி, மதச்சார்பற்ற அரசியல், அறிவியல் மனப் பான்மைகளை உள்ளடக்கிய உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கருத்தியல்களை வென்றெடுக்க ஒன்றுபட்டு உழைக்க சூளுரைப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் முழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (1.4.2023) கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியா கிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை வருமாறு.

வைக்கம் சத்யாகிரஹத்தின்டே நூறாம் வார்ஷிகம் கம்பீரமாயி நடத்தான் ஏற்பாடு செய்திட்டுள்ள பஹு மானப்பெட்ட கேரள முக்கிய மந்திரியும், என்டே ப்ரியப் பெட்ட சகாவுமாய திரு.பினராயி விஜயன் அவர்களே,

(வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ள மாண்புமிகு கேரள முதலமைச்சரும், எனது அன்புக்குரிய தோழருமான திரு. பினராயி விஜயன் அவர்களே)

பஹுமானப்பெட்ட மந்திரிமாரே,

(மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே)

பஹுமானப்பெட்ட கேரள ப்ரதிபக்‌ஷ நேதாவு அவர்களே, 

(மாண்புமிகு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே)

பஹுமானப்பெட்ட நியம சபா சாமாஜிகரே

பஹுமானப்பெட்ட பார்லிமென்ட் அங்கங்களே,

(மாண்புமிகு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் களே)

தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு அவர்களே

தமிழ்நாடு சி.பி.எம். செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களே,

எஸ்.என்.டி.பி. பொதுச்செயலாளர், கே.பி.எம்.எஸ். பொதுச்செயலாளர், கேரள நவோதன சமிதி பொதுச் செயலாளர், மற்று, பிராதனப்பெட்ட கேரள பார்ட்டி நேதாக்களே, உள்ளிட்ட கேரள அனைத்துக் கட்சித் தலைவர்களே)

திராவிட பாஷா குடும்பத்தில் பெட்ட, மலையாளம் சம்சாரிக்குன்ன கேரளத்திலே என்டே ப்ரிய சஹோதரி, சஹோதரன்மாரே,

(என் அன்புக்குரிய, திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மலையாள மொழி பேசும் கேரள சகோதரி, சகோதரர்களே)

நிங்கள் எல்லாவர்க்கும் ஆத்யம் ஸ்வாகதம். ஈ பரிபாடி சங்கடிப்பிச்சதினு, தமிழ் மக்களுடே பேரில் என்டே நன்னி அறியிக்குன்னு

(உங்கள் அனைவருக்கும் வணக்கத்தையும், தமிழ் நாடு மக்கள் சார்பில், இந்த விழாவை ஏற்பாடு செய்ததற்காக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.)

நாகர்கோவிலில் தோள்சீலைப் போராட்டம் 

200 ஆம் ஆண்டு விழா

கடந்த மார்ச் 6 ஆம் நாளன்று நாகர்கோயிலில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழாவில் நானும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் கலந்து கொண்டோம்.

அந்தக் கூட்டத்தில் பேசிய நான், ‘‘வைக்கம்  போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அதனைத் தமிழ்நாடு அரசும், கேரள அரசும் இணைந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தேன்.

எனக்குப் பிறகு பேசிய மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்கள், அதனை உறுதிப்படுத்திப் பேசினார்கள்.

“ஞங்கள் நடத்தாம்! தாங்கள் வரணும்..." என்னு, ஆ வேதியில் வெச்சு தன்னே, சகாவு பினராயி விஜயன் என்னெ ஸ்வாகதம் செய்து. உடல் கொண்டு வேறே வேறே என்னாலும், சிந்த கொண்டு நம்மள் ஒன்னாணு என்னு அப்போதன்னே, அத்தேஹம் தெளியிச்சு.

(நாங்கள் நடத்துகிறோம் - நீங்கள் வருகை தாருங்கள் என்று எனக்கு அந்த மேடையில் வைத்தே அழைப்பு விடுத்தார்கள். உடலால் நாம் வேறு வேறு என்றாலும் உணர்வால் ஒருவர் என்பதை அந்த மேடையிலேயே பினராய் விஜயன் அவர்கள் நிரூபித்தார்கள்.)

சில நாட்களில் கேரள அமைச்சர் திரு. சாஜி செரியன் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்து என்னைச் சந்திக்க வைத்தார்கள்.

வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மாண்புமிகு சகோதரர் பினராயி விஜயன் அவர்கள் அழைத்து நான் இதுவரை வராமல் இருந்தது இல்லை.

ஞான் இவிடே எத்தியிரிக்குன்னு...

தமிழ்நாட்டில் இப்போ நியமசபா நடக்குன்னு. என் னாலும், வைக்கம் சத்யாகிரஹத்தின்டே நூறாம் வார் ஷிகத்தில் நிச்சயம் பங்கெடுக்கணம் என்னுள்ளதினால் ஞான் இவிடே எத்தியிரிக்குன்னு.

(தமிழ்நாட்டில் இப்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. என்றாலும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவுக்கு நிச்சயம் சென்றாக வேண்டும் என்று நான் இங்கே வந்துள்ளேன்!)

கேரளாவே இங்கு திரண்டு வந்திருக்கிறது என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பிரமாண்டமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைக்கம் - என்பது இப்போது கேரள மாநிலத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு எழுச்சியை - உணர்ச்சியை ஏற்படுத்திய ஊர்!

1924 ஆம் ஆண்டு வைக்கத்தில் நடந்த போராட்டம் என்பது, கேரளத்தின் சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல - தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம்! இன்னும் சொன்னால் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்!

அம்பேத்கர் பார்வையில் வைக்கம் போராட்டம்!

"வைக்கம் போராட்டம்தான் மகர் போராட்டத்தை நடத்துவதற்கு எனக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தது" என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிற்காலத்தில் எழுதினார்கள்.

வைக்கம் போராட்டத்தின் தூண்டுதலால்தான் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் அண்ணல் காந்தியடிகள் அவர்கள் அதிகம் கவனம் செலுத்தினார்கள்.

தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோட்டிலும், சுசீந்திரத்திலும், திருவண்ணாமலையிலும், மதுரையிலும், திருச்சியிலும், மயிலாடுதுறையிலும் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம்தான். எனவே சுயமரியாதை - சமூகநீதிப் போராட்டத்தின் தொடக்கமான வைக்கம் மண்ணில் - நிற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். வெற்றிப் பெருமிதத்துடன் நான் இங்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். 

சூத்திரர்கள் என்றும், பஞ்சமர் என்றும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத் தலைநிமிர வைக்க கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் சீர்திருத்த இயக்கமானது பல்லாண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது. இதனைச் சீர்திருத்த இயக்கமாக மட்டுமே சுருக்கிச் சொல்லி விட முடியாது. இவைதான் புரட்சி இயக்கங்கள்!

கேரளாவில் புரட்சி இயக்கம் என்பது -

* நாராயணகுரு

* டாக்டர் பல்ப்பு பத்மநாபன்

* குமாரன் ஆசான்

* அய்யன்காளி

* டி.கே.மாதவன் - ஆகிய தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது!

தமிழ்நாட்டு புரட்சி இயக்கமானது -

* இராமலிங்க வள்ளலார் 

* அய்யா வைகுண்டர்

* அத்திப்பாக்கம் வெங்கடாசலனார்

* பண்டித அயோத்திதாசர்

* டி.எம்.நாயர்

* தந்தை பெரியார் - ஆகிய தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது!

இதில் கேரளாவைச் சேர்ந்த டி.கே.மாதவன் அவர்களும் - தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை பெரியாரும் இணைந்து நடத்திய வெற்றிப் போராட்டம்தான் வைக்கம் போராட்டம்!

ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்கள் வைக்கம் கோயில் தெருவில் நடந்து செல்லத் தடை விதிக்கப்பட்டதை உடைக்க தீண்டாமை ஒழிப்புக் குழு அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர்களால் அமைக்கப்பட்டது.

வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்ட வரலாறு

1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் அன்று, தடையை மீறி அந்த தெருவுக்குள் நுழையக்கூடிய சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். முக்கியமான 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தப் போராட்டமே இனி நடக்காது என்ற நிலைமை உருவானபோதுதான் - அந்த நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியாருக்குக் கேரளத் தலைவர்கள் கடிதம் எழுதி வரவழைக்கிறார்கள். ‘நீங்கள் வந்து இந்த போராட்டத்திற்கு உயிரூட்ட வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் இருந்தது. உடனடியாக பெரியார் அவர்கள் இங்கு வந்துவிட்டார்கள்.

எந்த மன்னருக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்துவதற்காக தந்தை பெரியார் அவர்கள் இங்கு வந்தார்களோ, அந்த மன்னர் ஆட்சியே அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தது. ஏனென்றால் அந்த மன்னர் குடும்பத்துக்கு தந்தை பெரியாரை நன்கு தெரியும். ஈரோடு வந்தால் மன்னர் குடும்பத்தினர் பெரியாரின் வீட்டில்தான் தங்குவார்கள். அந்தளவுக்கு நட்பாக இருந்துள்ளார்கள்.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மன்னருக்கு எதிராகவே போராடினார் தந்தை பெரியார் அவர்கள். கேரளா முழுவதும் பரப்புரை செய்தார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனாலேயே தந்தை பெரியார் அவர்களையும், கோவை அய்யாமுத்து அவர்களையும் கூட்டத்தில் பேசுவதற்கு தடை விதித்தார்கள். தடையை மீறிப் பேசியதற்காகக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

தந்தை பெரியாரின் தியாகம்!

விடுதலை செய்யப்பட்ட பிறகும், நேராக ஊருக்குத் திரும்பாமல் வைக்கம் சென்று மீண்டும் போராடினார் தந்தை பெரியார். மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தந்தை பெரியார் அவர்களுக்கு என்ன சிறப்பு என்றால், இந்தப் போராட்டத்தில் கைதான மற்ற தலைவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டார்கள். ஆனால் தந்தை பெரியாரை மிக மோசமாக நடத்தினார்கள். கையிலும் காலிலும் விலங்கு போட்டு - கழுத்தில் மரப்பலகையை மாட்டி - அடைத்து வைத்திருந்தார்கள். இந்தப் போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் அவர்கள் 'பந்தனத்தில் நின்னு' என்ற தலைப்பில் மலையாளத்தில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

அதன் சில வரிகளை மட்டும் நான் படிக்கிறேன்...

‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் - ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் சேர்மனாக இருந்தவரும் - ஒரு பெரும் பணக்காரரும் - உத்தம தேசாபிமானியுமான - ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு காலில் சங்கிலி மாட்டப்பட்டு இருந்தது. கைதிகளது தொப்பி மாட்டப்பட்டு இருந்தது. முழங்கால் வரையில் வேட்டி அணிந்திருந்தார். கழுத்தில் மரக்கட்டையை மாட்டி கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் வைக்கப்பட்டுள்ளார். கேரளாவின் தீண்டாமைச் ஜாதிக்காரர்களது சுதந்திரத்திற்காக தமிழ்நாட்டின் மேல்குலத்தைச் சேர்ந்த இந்து ஒருவர் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தது எங்களுக்கெல்லாம் புத்துயிர் தந்தது'' - என்று கே.பி. கேசவமேனன் எழுதி இருக்கிறார்கள்.

பெரியார் 74 நாள்கள் சிறை; 

67 நாள்கள் போராட்டம்!

தந்தை பெரியார் மட்டுமல்ல - தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தியாகிகள் இங்கு வந்து போராடினார்கள். பெரியாரின் மனைவி நாகம்மையார் அவர்களும், அவருடைய சகோதரி கண்ணம்மாள் அவர்களும் இங்கேயே வந்து தங்கி போராடினார்கள். பெரியார் அவர்கள் 74 நாள்கள் இங்கே சிறையில் இருந்தார்கள். 67 நாள்கள் கேரளாவில் தங்கிப் போராடினார்கள். மொத்தம் 141 நாட்கள் வைக்கம் போராட்டத்திற்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டார் தந்தை பெரியார். காங்கிரஸ் தலைவர் என்கிற அடிப்படையில் அண்ணல் காந்தியடிகளை ராணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

இந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் என்ற அடிப்படையில் பெரியாருடன் பேசி முடிவெடுத்துவிட்டுத்தான் காந்தி அவர்களும் ராணியுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றார்.

‘கோயிலுக்குள் நுழைவோம் - என்று ஈ.வெ.ராமசாமி சொல்வதை நிறுத்தச் சொல்லுங்கள். தெருவைத் திறந்து விடுகிறோம்' என்று ராணி சொல்ல - அதனைப் பெரியாரிடம் வந்து காந்தியடிகள் சொல்ல - 'நமது இறுதி இலக்கு கோயில் நுழைவுதான் என்றாலும்  - இப்போதைக்கு முதல் கட்ட வெற்றியை பெறுவோம்' என்று பெரியார் அவர்கள் சொன்னார்கள். 

அதனடிப்படையில் வைக்கம் கோயில் சாலைகள் அனைவருக்கும் திறந்து விடப்பட்டது. இதன் வெற்றி விழா வைக்கத்தில் நடந்தபோதும் மறக்காமல் பெரியாரை அழைத்துப் பாராட்டினார்கள் கேரளத்து தலைவர்கள்.


கேரளா - தமிழ்நாடு தலைவர்கள் இணைந்து நடத்திய வைக்கம் போராட்டம்!

அந்த வகையில் 100 ஆண்டுகள் கழித்தும் தமிழ்நாட்டை மறக்காமல் எங்களை அழைத்துள்ளார் கேரள மாநிலத்தினுடைய முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்கள். வைக்கம் பொன்விழாவானது 1975 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தலைமையில் நடந்தது. திராவிடர் கழகத்தினுடைய தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களும் - திராவிடர் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் வந்து அந்த நிகழ்ச்சியிலே பங்கேற்றார்கள். 1985 ஆம் ஆண்டு பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச் சின்னம் அமைக்க அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. 3.11.1985 அன்று நடந்த விழாவில், அன்றைக்கு தமிழ்நாட்டினுடைய நிதி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் - கேரள வருவாய்த் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

தந்தை பெரியாரின் புரட்சி மொழிகள் அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருப்பது மிகமிக பொருத்தமானது. தமிழ்நாடு - கேரள தலைவர்கள் சேர்ந்து போராடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 

தந்தை பெரியார், டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், கேளப்பன், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, மன்னத்து பத்மநாபன், கோவை அய்யாமுத்து, எம்பெருமாள் நாயுடு, காந்திராமன், தாணுமாலையப் பெருமாள் போன்ற தியாகிகளை இந்த நாட்டு மக்களுக்கு மீண்டும் நாம் அறிமுகம் செய்தாக வேண்டும். அவர்களது உணர்வை நம் மாநிலத்து மக்கள் பெற்றாக வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிப்புகள்!

நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் விதி எண் 110-இன் கீழ் அறிக்கை ஒன்றை நான் அளித்தேன்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசின் சார்பில் செய்ய இருப்பதாக நான் சொல்லி இருக்கிறேன்.

வைக்கம் சத்யாகிரஹம் நூறாம் வார்ஷிகத்திண்டே ஆத்ய படிகளில் ஒன்னாயி, பழ.அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ புஸ்தகத்திண்டே மலையாள விவர்த்தனம் இன்னு பிரகாஷனம் செய்யுன்னு.

(வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் முதல் படிகளில் ஒன்றாக, பழ. அதியமான் அவர்கள் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ நூலின் மலையாள மொழிபெயர்ப்பு இன்று வெளியிடப்படுகிறது.)

தமிழ்நாடு சர்க்காரிண்டெ கூடே ஈ சம்ரம்பத்தில் ப்ரவர்த்திச்ச கேரளத்திலே மிகச்ச றிuதீறீவீsலீவீஸீரீ பிஷீusமீ ஆய ஞி.சி.ஙிஷீஷீளீs-னு எண்டெ நன்னி அறியிக்குன்னு.

(இந்த முன்னெடுப்பில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றியுள்ள கேரளத்தின் முன்னணி பதிப்பாளர்களான ஞி.சி.ஙிஷீஷீளீs நிறுவனத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)

பெரியார் நினைவகம் சீரமைக்க 8 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது. பெரியார் சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து சிறை வளாகத்தில் புதிய நினைவகம் அமைக்கவும் தமிழ்நாடு அரசு நினைக்கிறது. உரிய முறையான அனுமதிக் கடிதத்தை கேரள அரசுக்கு நாங்கள் விரைவில் அனுப்பி வைப்போம்.

உலகத் தலைவர் பெரியார்

தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால் தந்தை பெரியார் அவர்கள் தமிழர்களுக்கு மட்டுமான தலைவர் அல்ல. இந்தியாவுக்கு மட்டுமான தலைவர் அல்ல. உலகம் முழுமைக்குமான தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள். அவர் முன்மொழிந்த கொள்கைகள் அனைத்தும் அனைத்து நாட்டுக்கும் - அனைத்து மக்களுக்கும் பொதுவான சிந்தனைகள்!

உலகம் முழுமைக்குமான கருத்தியல்கள்

எனக்கு எந்தப் பற்றும் இல்லை, மனிதப் பற்று மட்டுமே உண்டு என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.

1. சுயமரியாதை - Self-Respect

2. பகுத்தறிவு - Rationality

3. சமதர்மம் - Socialism

4. சமத்துவம் -  Equality

5. மானுடப்பற்று - Humanism 

6. ரத்த பேதமில்லை - Non-discrimination based on blood. 

7. பால் பேதமில்லை - Non-discrimination based on Gender. 

8. சுய முன்னேற்றம்  - Self development 

9. பெண்கள் முன்னேற்றம் -  Women Empowerment 

10. சமூகநீதி - Social justice

11. மதசார்பற்ற அரசியல் - Secular Politics

12. அறிவியல் மனப்பான்மை - Scientific Temper

இவைதான் பெரியாரியத்தின் அடிப்படை. இவை உலகம் முழுமைக்குமான கருத்தியல்கள்தான். இந்த கருத்தியல்களை வென்றெடுக்க நாம் அனைவரும் உழைத்தாக வேண்டும்.

வைக்கம் சமரநாயகர் வாழட்டே!

எத்தகைய சனாதனக் காலத்தை பல்வேறு போராட்டங்களின் மூலமாக நாம் கடந்து வந்துள்ளோம் என்பதை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் பணியை இரு மாநில அரசுகளும் செய்தாக வேண்டும். மீண்டும் சனாதன - வர்ணாசிரம - ஜாதியவாத - மதவாத சக்திகள் கோலோச்ச நினைக்கும் காலத்தில் நமக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. இதற்குப் பெரியார் என்ற பெருவிளக்கு நமக்குப் பயன்படும். வைக்கம் போராட்டம் கலங்கரை விளக்காக அமையும்.

100 ஆண்டுகளுக்கு முன்னால் எத்தகைய ஒற்றுமையுடன் போராடி வென்றோமோ அதேபோன்ற ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

வைக்கம் சமரநாயகர் வாழட்டே!

Social Justice போராட்டங்கள் ஜெயிக்கட்டே!

நன்றி, வணக்கம்.

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment