கி.தளபதிராஜ்
1952 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் நடைபெற்றது. 1925 லிருந்தே காங்கிரசுக்கு எதிராக போராடிவந்த பெரியார் இந்த தேர்தலிலும் காங்கிரசை எதிர்த்துப் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். காங்கிரஸ் தோற்றது. எந்த கட்சிக்கும் தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் வாங்கிய வாக்குகளைப்போல் இரு மடங்கு வாக்குகளைப் பெற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து அமைச்சரவை அமைக்க வாய்ப்புகள் இருந்த போதிலும் ஆளுநர் காங்கிரசையே ஆட்சி அமைக்க அழைத்தார். பெரியார் இந்த ஜனநாயக விரோத போக்கைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மக்களை நேரடியாக சந்திக்காமல், தேர்தலில் போட்டியின்றி இந்திய ஆளுநர் ஜெனரல், மேற்கு வங்க ஆளுநர், ஒன்றிய அமைச்சர், சென்னை மாகாண முதல் அமைச்சர் என பல்வேறு பதவிகளை துய்த்து வந்த இராஜாஜி இப்போதும் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடாமலேயே முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை கொல்லைப்புற வழி என்று கடுமையாக விமர்சித்தார் பெரியார்.
“மனுதர்மம் அருமையான நீதியைக் கொண்டது. மனு சாஸ்திரத்தை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமமானது” எனத் திருவாய் மலர்ந்தவரும், “பிறவியில் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது!” என காங்கிரஸ் தீர்மானம் போட்டபோது காங்கிரசை விட்டே வெளியேற முடிவெடுத்து பதவி விலகல் கடிதம் கொடுத்தவருமான இராஜகோபாலாச்சாரியார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனதும் ஹிந்தித் திணிப்பு, குலக்கல்லித் திட்டம் என அடுக்கடுக்காக தமிழர் விரோதப் போக்கை கையயாண்டார்.
குலக்கல்வித் திட்டம்
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்களிடமே, “அவரவர் குலத்தொழிலை அவரவர்தான் செய்ய வேண்டும்.எல்லோரும் படிக்க ஆரம்பித்தால் இந்த தொழிலை யார் தான் செய்வார்கள்?” என்று பேசிய ஆச்சாரியார், ஆட்சிக்கு வந்ததும் வராததுமாய் ஆறாயிரம் பள்ளிகளை இழுத்து மூடி புதியக் கல்வித் திட்டம் என்ற பெயரில் பகுதி நேரம் படிப்பு; பகுதி நேரம் தொழில் என்றொரு திட்டத்தை கொண்டு வந்தார்.
ஆச்சாரியாரை அணுஅணுவாய் அறிந்தவராயிற்றே! ஆச்சாரியாரின் திட்டம் குலக்கல்வித் திட்டம்: அதை அடியோடு ஒழிப்பதே முதல் பணி எனக் களத்தில் இறங்கினார் பெரியார்! ஆச்சாரியாரின் பிறவித் திமிரை அறிந்த பெரியார் அவரை குல்லூகப்பட்டர் என்று அழைத்தார்.
இந்தத் திட்டம் ஆச்சாரியாரின் மூளையில் திடீரென உதித்ததல்ல. 1938ஆம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பில் இருந்த போதே இதைக் கொண்டுவர முயற்சி செய்தார். ஆனால் அப்போது கல்வித்துறை அதிகாரியாக இருந்த ஸ்டார்த்தம் அதனை ஏற்காததால் நாட்டில் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இந்தத் திட்டம் பற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஆலோசித்தேன் என்று அவரே செங்கல்பட்டில் நடந்த புதியக் கல்வித் திட்ட அறிமுக விழா பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
சென்னை சட்டமன்றத்தில் 20.03.1953 ஆம் தேதி பேசிய கல்வி அமைச்சர் எம்.வி.கிருஷ்ணாராவ் “தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் கால அளவை நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைத்து அந்நேரத்தில் குழந்தைகளின் பெற்றோர் செய்யும் தொழில்களைக் கற்றுக் கொள்ள வசதி செய்து கொடுக்க சர்க்கார் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்றும், பரம்பரைத் தொழில் செய்யாத குலத்தில் பிறந்த குழந்தைகள் வயல்களிலும், தொழிற் சாலைகளிலும் பிறர் செய்யும் தொழில்களைக் கவனிக்கச் செய்து கற்கச் செய்யவும், விவசாயத் தொழில்கள், கொட்டகை போடுதல், செங்கல் அறுப்பு, கிணறு வெட்டுதல் போன்ற பல வேலைகளில் பள்ளிச் சிறுவர் சிறுமியரை பழக்கப் படுத்தவும் யோசிக்கப்படுகிறது.” என்றார். இத்திட்டத்தைக் கண்டித்து விடுதலை ஏடு “சிறுவர் கல்வியைப் பாழாக்கும் புதிய திட்டம்!” என்று தலையங்கம் எழுதியது.
திருச்சியில் 13.6.1953 ஆம் தேதி திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுவை கூட்டிய பெரியார் ஜுலை 14 முதல் சட்டசபை முன்பும் 20 ஆம் தேதிக்குப் பிறகு வெளியூர்களிலும் மறியல் செய்யப்படும் என அறிவித்தார்.
1953 ஜுலை 10,11 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்ற மாநாட்டில் தோழர்களே கிளர்ச்சிக்குத் தயாராகுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் பெரியார்!. ஜுலை 14ஆம் தேதி சட்டமன்றத்தின் முன் நடைபெற்ற மறியலில் ஈடுபட்டு ஏராளமான தோழர்கள் கைதாகினர்.
குலக்கல்வித் திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு
ஆச்சாரியாரின் கல்வித்திட்டத்தை தந்தை பெரியார் எதிர்த்ததைத் தொடர்ந்து பலரும் குரல்கொடுத்தனர். ரெட்டிப்பட்டி பள்ளி திறப்பு விழாவில் பேசிய குன்றக்குடி அடிகளார் , “சென்னை சர்க்காரின் புதிய கல்வித் திட்டம் என்ன என்பதே பலருக்கும் புரியவில்லை. ஆசிரியர்களுக்கும் புரியவில்லை; மாணவர்களுக்கும் புரியவில்லை; பொதுமக்களுக்கும் புரியவில்லை. அதன் அடிப்படையை மாற்றி அமைத்தால்தான் மக்கள் நன்கு வரவேற்பர். கிராம மக்கள் நன்கு எல்லாத் துறைகளிலும் சிறந்து வாழ்வதற்கான வகையில் கல்வித்திட்டத்தை அமைத்து தர வேண்டும். இல்லாவிட்டால் கோரும் பலன் கிடைக்காது.” என்றார். (விடுதலை 15.10.1954)
“உயர்ந்த குலப்பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது; அதிகாரிகளால் பாராட்டப்பட்டது; உயர்தர விளம்பரம் பெற்றது என்று கூறப்படும் ஆச்சாரியாரின் புதிய கல்வித் திட்டம் சென்னை ராஜதானியத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகாறும் நடைபெற்ற அனுபவத்தில் அது ஒரு குருட்டுத் திட்டமாகவும், ஆரம்ப ஆசிரியர்களின் வியர்வை சிந்த வேலை வாங்கும் பயங்கர இயக்கமாகவும் மாறி இருக்கிறது.” என்று பிளிட்ஸ் ஏடு குறிப்பிட்டிருந்த செய்தி விடுதலையில் வந்தது. (விடுதலை 21.2.1954)
“துப்புரவு தொழிலாளியின் பிள்ளைகள் ஆசிரியராகவோ, மருத்துவராகவோ வருவதை ஏன் தடுக்க வேண்டும்?” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏடு கேள்வி எழுப்பியது.
இந்து ஏடோ, “இத்திட்டம் பலனளிக்கக் கூடிய வகையில் பக்குவமான நிலைமையை ஏற்படுத்தாமல் அவசரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது” என்று எழுதியது.
1952 ஆம் ஆண்டு இரயில் நிலையப் பெயர்ப்பலகைகளில் உள்ள ஹிந்தி எழுத்துகளை தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்தபோது, அந்தத் தாரை மண்ணெண்ணெய் ஊற்றி அப்புறப்படுத்துவேன் என இராஜாஜிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ம.பொ,சி யார் குலக்கல்வித்திட்ட விஷயத்திலும் இராஜாஜிக்கு ஆதரவாக இருந்தார். மயிலாடுதுறையில் செப்டம்பரில் நடைபெற்ற கூட்டத்தில் ம,பொ.சிக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பி விரட்டி அடித்தனர்.
தோழர்களே கத்தி வைத்துக் கொள்ளுங்கள்!
அக்டோபர் மாதம் 10, 11 தேதிகளில் ஆத்தூரில் நடைபெற்ற குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாட்டில் தந்தை பெரியார் “கழகத் தோழர்கள் தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்!” என்ற ஒற்றைத் தீர்மானத்தை தொண்டர்களின் மிகுந்த ஆரவாரத்துக்கிடையே நிறைவேற்றினார்.
“பார்ப்பனர் - திராவிடர் கழகத்தை ஒழிக்க வேண்டி, திராவிட மக்களிடையே கலகம் ஊட்டவும், காலித்தனம் செய்யவும் தூண்டிவிட முயல்வதால், கழகத் தோழர்கள் நிராயுதபாணிகளாக இருக்கிறார்கள் என்று கருதி காலித்தனம் பலாத்காரம் செய்யத் தூண்டுமாதலால், திராவிடர் கழகத்தினர் சட்டத்துக்கு உட்பட்ட அளவுக்கு ஒவ்வொருவரும் ஆணும் பெண்ணும் ஒரு கத்தியை தற்காப்புக்காக அவசியம் எப்போதும் மடியில் வைத்திருக்க வேண்டும் என்று இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது” என்றது அத் தீர்மானம்.
ஆத்தூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து, அடுத்த நாள் விடுதலை ஏடு, எம்.எஸ்.சுப்பிரமணி அய்யர் ‘புல் ஏந்திய கையில் வாள் ஏந்த வேண்டும்!’ எனப் பேசியதையும், கல்கி அய்யர், ‘திருப்பித் தாக்குங்கள்!’ என்று தலையங்கம் எழுதியதையும், இந்து பத்திரிகையில், ‘பிராமண தற்காப்பு படை தயாராகட்டும்!’ என்று நாகராஜ சர்மா குறிப்பிட்டதையும், முதலமைச்சர் ஆச்சாரியார், ‘தேவர் அசுரர் போராட்டம் நடக்கப் போகிறது; அவரவர் பிரியப்படி நடந்து கொள்ளுங்கள்; காவல் துறையினர் தலையிட மாட்டார்கள். எறும்பு மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல் திராவிடர்களை நசுக்கிக் கொல்லப் போகிறேன். திராவிடர்களுக்கு கணக்குத் தீர்க்கப் போகிறேன். இவர்கள் தான் எனது முதல் எதிரிகள்!’ என்று கூறியதையும் சுட்டிக்காட்டி இனி என்ன மிச்சம் இருக்கிறது? என்று கேட்டது. (விடுதலை 12.10.1953)
சர்க்காரே காலித்தனத்தை தூண்டுகிறார்கள்!
“தோழர்கள் கத்திச் சண்டை, குத்துச்சண்டை, கம்பு சுழற்றல் என பலவற்றிலும் பயிற்சி பெற்று மாநாடுகளில் தங்கள் சாகசத்தை வெளிப்படுத்தினார்கள். ஈரோடு மாநாட்டில் பேசிய பெரியார், இப்போது குத்துச்சண்டை, கத்திப்பாய்ச்சல் இவைகளை செய்து காட்டுவது எதற்காக என்றால் நம்மை தாக்குகிற காரியத்தை தடுத்துக் கொள்ளவும், தாக்குதலை சமாளிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான். கடவுள் சம்பந்தமான மூட நம்பிக்கை நிலவி அதனால் காலித்தனம் - பலாத்காரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதுவரை எந்தக் கட்சியிலும் பலாத்காரம் இல்லை. பலாத்காரம் - காலித்தனம் என்பதெல்லாம் சொந்தப் பொறுப்பிலேயே வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது காலித்தனத்தை சர்க்கார் வளர்க்கிறார்கள்; தூண்டுகிறார்கள்; சர்க்காரே பலாத்காரத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்?”
“ஒருவன் தப்பு பண்ணினால் ஜெயிலில் தானே போட வேண்டும்? அதுதானே சட்டம். ஜெயிலுக்கு வர மறுத்தால் அடிக்கலாம். ஆனால் இந்த சர்க்கார் கிராம கல்வித் திட்டத்தை எதிர்த்து ஆச்சாரியார் வீட்டு முன் மறியல் செய்தவர்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அதைக் கண்டித்து நான் ஒரு கூட்டத்தில், ‘எவனாவது ஒருவன் தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட தயாராகி விட்டால் உன் கதி என்ன ஆகிறது?’ என்றேன். உடனே டெலிபோன் போட்டு, ஆச்சாரியார் அடிக்க வேண்டாம் என உத்தரவு போட்டுவிட்டார்.” என்றார். விடுதலை (29.10.1953)
ஈரோட்டில் மாநாடு
பெரியார் விடுத்த அறிக்கையில், “ஆச்சாரியார் கல்வித் திட்டம் திராவிட மக்களுக்கு கேடானது என்பதுடன் மறைமுகமாக வர்ணாசிரமத்தை சமுதாயத்தில் புகுத்தும் மார்க்கமும் ஆகும் என்பது நம்முடைய முடிவானதும் உறுதியானதுமான கருத்து. இதைப் பொதுமக்களும் நன்றாக அறிந்து விட்டார்கள். பொதுநல வாழ்வில் பெரும்பாலும் ஏன் நூற்றுக்கு 90 பேருக்கு மேலாக சுயநலக்காரர்களே இருப்பதனால் அதில் ஈடுபட்டவர்கள் துணிச்சலாக சர்க்காருக்கு எதிராக எந்த காரியமும் செய்ய முடியாமல் மக்களை ஏமாற்றும் தன்மையில் வெறும் நடிப்பில் காலந்தள்ள வேண்டியவர்களாகவே ஆகிவிட்டதால் பொதுமக்களின் உணர்ச்சியை, பொது நலத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லப்படுகிற சட்டசபை மெம்பர்களோ, மற்ற எந்தப் பொதுநலக் கட்சிக்காரர்களோ உணர்ந்து அதற்குத் தகுந்தபடி நடப்பார்கள் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லாமல் போய்விட்டது.
எனவே இன்றைய நிலை திராவிட பொதுமக்களுக்காக, சமுதாயத்துறையில் அவர்களுடைய நலத்தையும் முன்னேற்றத்தையும் கருதி ஏதாவது ஒரு சிறு காரியம் செய்ய வேண்டுமானாலும், அவர்களுக்கு ஏற்படுத்தப்படும் ஒரு சிறு கேட்டையும் எதிர்க்க வேண்டுமானாலும், இந்த நாட்டில் திராவிடர் கழகத்தை தவிர வேறு நாதியில்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் திராவிடர் கழகத்தார் திராவிட மக்களுக்காக ஏதாவது ஒரு காரியம் பயனுள்ளதாகும்படி செய்வதென்றால், திராவிடர் கழகத்தாருக்கு பெருத்த சங்கடமும், முட்டுக்கட்டையும் ஏற்படுவதாக ஆகிவிடுகிறது. அதனாலேயே ஆச்சாரியார் கல்வித் திட்டம் இதுவரையிலும் உயிர் பெற்றிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். ஆச்சாரியார் அவர்களும் இந்த விஷயங்களை எல்லாம் நன்றாய் உணர்ந்து தமது கல்வித் திட்டத்திற்கு இந்த நாட்டில் திராவிடர் கழகத்தாரைத் தவிர வேறு எதிரிகள் கிடையாது என்றும், திராவிடர் கழகத்தாரின் இந்த எதிர்ப்பை தன்னுடைய சொந்த எதிரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்களே ஒழிய அவர்களுக்கு உண்மையில் கல்வித்திட்டத்தில் அதிருப்தி இல்லை என்றும் சொல்லி வருகிறார். ஆகவே ஆச்சாரியார் கல்வித் திட்டம் திராவிட மக்களுக்கு கேடானது என்று திராவிட மக்கள் யாவரும் உணர்ந்து இருக்கிறார்கள் என்பதையும், திராவிட மக்கள் அதை எதிர்க்கிறார்கள் என்பதையும் ஆச்சாரியார் மறுப்பதற்கு இல்லாமல் ஒப்புக்கொள்ளும்படி செய்ய வேண்டியது இப்போது நமது இன்றியமையாத கடமையாகி விட்டது. அதற்கு முதல் படியாக நான் ஏற்கெனவே தெரிவித்திருந்திருந்தபடி ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட வேண்டியதும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்புப் படைகள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும்படி செய்ய வேண்டியதும் அவசியம் என்று கருதி அதற்கு வேண்டிய ஏற்பாடு செய்ய கருதி இருக்கிறேன். இந்த மாதக் கடைசியில் 23, 24 தேதிகளில் ஈரோட்டில் மேற்கண்ட மாநாடு நடத்துவதாகவும் அதிலிருந்து படைகள் புறப்பட ஏற்பாடு செய்வதாகவும் கருதி இருக்கிறேன்.” (விடுதலை 8.1.1954)
2500 தோழர்கள் கைது
புதியக் கல்வித்திட்ட எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டு இதுவரை சுமார் 2500 திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டதை விடுதலை செய்தியாக வெளியிட்டது. அரசோ கிராமப்புறங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுவந்த இத்திட்டம் நகரத்திலும் விரிவுபடுத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.
அரசு அறிவிப்பைத் தொடர்ந்து விடுதலை முதல் பக்கத்தில், “வர்ணாசிரமக் கல்வித் திட்டம் விஸ்வரூபம் எடுக்கிறது. நகரங்களிலும் புகுத்த திட்டம் தயாராகிவிட்டதாம்! ஏட்டிக்குப் போட்டி! சட்டசபையில் பெரும்பான்மையோரின் எதிர்ப்புக்கும், ஏன் காங்கிரஸ் கட்சி மெம்பர்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகி இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கும் உதவாக்கரை கல்வித் திட்டத்தை, பல பேரறிஞர்கள் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கும் ஒரு திட்டத்தை, ஆச்சாரியார் சர்க்கார் பிடிவாதமாக அமல் படுத்த முனைந்து விட்டனர். இவ்வாண்டில் கிராமங்களில் புகுத்தப்பட்டது போதாது என்று வருகிற கல்வியாண்டில் நகரங்களில் சென்னை நகரம் உட்பட எல்லா நகரங்களிலும் இவ்வருணாசிரம முறை கல்வித் திட்டத்தை, கலாசாலை படிப்புக்கு போகவிடாமல், பச்சிளம் குழந்தைகளை பூ பிஞ்சு பருவத்திலேயே தொழில் கல்வியில் ஈடுபடுத்தி குட்டிச்சுவராக்கும் கல்வித் திட்டத்தை புகுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கான வேலை முறைகள் வகுத்து வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.” என தலைப்புச் செய்தி போட்டு எச்சரிக்கை மணி அடித்தது. (3.2.1954)
No comments:
Post a Comment