எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!

கி.தளபதிராஜ்

குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு உயிர் நிலைப் போராட்டம்!

சென்னையில் 31.1.1954ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார், குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு திராவிட இனத்தின் உயிர் நிலைப் போராட்டம்! போருக்கு பயணம் சொல்லி புறப்படுவீர்! என்று போர் முரசு கொட்டினார்.

“தோழர் ஆச்சாரியார் அவர்களுக்கோ அல்லது அவருடைய இனத்து மக்களுக்கோ இந்த நாட்டைப் பற்றி இந்த நாட்டு மக்களை பற்றி எங்களை விட என்ன அதிகமான கவலை இருக்க முடியும்? அவர்களுடைய கவலை எல்லாம் இந்த பார்ப்பன ஆதிக்கத்துக்கு பாதுகாப்புக்கு என்பது தவிர பொதுவுக்கு என்று என்ன இருக்கிறது? எங்களை விட என்ன இந்த நாட்டுக்கு அதிகமாக பாடுபட்டு விட்டார்கள்? இன்றைக்கு இருக்கிற எவர் தான் ஆகட்டும். ஆச்சாரியாரே என்னை விட அதிகமாக இந்த நாட்டுக்கு என்ன பாடுபட்டு விட்டார்? அல்லது அவருடைய உழைப்புக்கு என்னுடைய பொது உழைப்பு என்பது என்ன குறைந்தது என்று சொல்ல முடியுமா? இவர் மட்டும் அல்ல, இவருக்கு பெரியவர்கள் என்று சொல்லப்படுகிற நேரு, ராஜேந்திர பிரசாத் இவர்கள் கூட என்ன என்னை விட அதிகமாக பாடுபட்டு விட்டார்கள்? என்று கேட்க ஆசைப்படுகிறேன். இந்த ஆச்சாரியாரும், பிரசாத்தும், நேருவும் நான்கு முறை அய்ந்து முறை ஜெயிலுக்குப் போய் இருக்கிறார்கள் என்றால் நான் 13 தடவை ஜெயிலுக்குப் போய் இருக்கிறேன். அந்தஸ்தில் தான் இவர்களில் யாருக்கு நான் குறைந்தவன் என்று சொல்ல முடியும்?

ஆச்சாரியாருக்கு சொல்ல விரும்புகிறேன் அவர் இந்த திட்டத்தை மாற்றவில்லையானால் நிச்சயமாக அவர் பதவியை விட்டுப் போகிறாரோ இல்லையோ, இது அவருடைய இனத்தின் அழிவுக்கே ஒரு காரணமாய் இருக்கப் போகிறது. மக்கள் இன்னும் இந்தக் கொடுமைகளையும் அக்கிரமத்தையும் நிச்சயமாக சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இனியும் அவர்களை அடக்கி வைத்திருப்பதும் தவறான காரியம்; துரோகமான காரியம் என்றே சொல்லலாம். கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். தோழர்களே! இனி அஹிம்சை அமைதி என்று பேசிக்கொண்டு இருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. எந்த முறையால் காரியம் கைக்கூடுமோ அந்த முறையை கையாளுவோம். அதற்கு பலாத்காரம், அராஜகம் என்ற பெயர் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அந்த முறையை கையாளுவோம்.” (விடுதலை 7.2.1954)

ஆச்சாரியார் கல்வித் திட்ட ஒழிப்பும் ஜாதி ஒழிப்பும் ஒன்றே!

அதிகாரப்பட்டியில் பிப்ரவரி 2ஆம் தேதி பேசிய பெரியார் கடவுளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போட்டால் தான் இவைகளை ஒழிக்க முடியும் என்றார். 

“ஜாதி ஒழிப்பு என்பதும் ஆச்சாரியார் கல்வித் திட்ட ஒழிப்பு என்பதும் வேறுவேறு அல்ல. ஆச்சாரியார் கல்வித் திட்டம் ஒழிய வேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? அவர் கல்வித் திட்டமே தன் சுயஜாதி பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது வர்ணாசிரம பாதுகாப்புத் திட்டமாகும். ஆகையால் அதை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஆச்சாரியார் புதுக் கல்வித் திட்டத்தை கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? அந்த கல்வித் திட்டத்தின் அடிப்படை என்ன? என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். சூத்திரர்கள் படிக்கக்கூடாது! இதுதான் ரகசியம். ஆரியரின் ஜாதி முறைப்படி, வர்ணாசிரம முறைப்படி நாம் படிக்கவே கூடாது. கடவுளை உடைத்து ரோடுக்கு ஜல்லி போட்டால் தான் இவைகளை ஒழிக்க முடியும் என்று கூறுகிறோம். தலையில் பிறந்தவன் தொடையில் பிறந்தவன் காலில் பிறந்தவன் என்று இப்படியாக பிறப்பித்த சாமி இருப்பதால் எப்படி நமக்கு சூத்திரப் பட்டம் போகும்? சூத்திரப் பட்டத்தை தோளில் போட்டுக்கொண்டு நம் மந்திரிகளும், மடாதிபதிகளும் மானமற்று கடவுள் மதப் பிரச்சாரம் செய்கிறார்களே? ஆகையால் கடவுள், மதம், சாஸ்திரம் இவைகளை ஒழித்தால் தானே ஜாதியை ஒழிக்க முடியும்?” (விடுதலை 27.2.54)

ஆச்சாரியாரின் கல்வித்திட்ட எதிர்ப்புக் காலத்தில் அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்துக் கொண்டே இருந்தார் பெரியார். இரயில் நிலையங்களில் ஹிந்தி அழிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு என அவரது போராட்டங்கள் தொடர்ந்தது.

குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை

“சூத்திரன் படிப்பதை ஒழித்தால் பழைய வருணாசிரமம் தானாக வந்துவிடும் இதுதான் ஆச்சாரியார் கல்வித் திட்டம். ஆகவே கல்வித் திட்டத்தை பொறுத்த போராட்டத்தில் சட்டத்தை எதிர்பார்த்தால் ஒரு காரியமும் நடக்காது. சட்டசபை மூலம் இதை மாற்றலாம் என்றால் முடியாது. கிளர்ச்சி மூலம் தான் முடியும். அதுவும் சட்டத்தை மீறினால் தான் முடியும். புரட்சி என்றால் என்ன அர்த்தம்? சட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் என்ன காரியம் நடக்கும்? ஆகவே இந்த கல்விச் சட்டத்தை திட்டத்தை எதிர்த்து நடத்தப்பட இருக்கிற புரட்சி, சட்டத்தை மீறியதாக இருக்கும். ஈரோட்டில் ஆச்சாரியாருக்கு இந்த திட்டத்தை திரும்பப் பெறும்படி மூன்று மாத நோட்டீஸ் கொடுத்தோம். ஆனால் ஆச்சாரியார் இந்தத் திட்டம் கிராமத்தில் மட்டுமல்ல, நகரத்திலும் வைத்துக்கொள் என்கிறார். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? கறாராய் இருக்க வேண்டியதுதான். மானமுள்ள மனிதன் என்றால் ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போய் வர வேண்டியதுதான். நம்முடைய பெரியவர்கள் ஒரு சமயம் பின் வாங்கினாலும் இளைஞர்களாக இருப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்குப் பின் சந்ததியினர் மாடு மேய்க்க வேண்டியது தான்!” என காஞ்சியில் (28.2.54) கர்ஜித்தார். (விடுதலை 9.3.54)

அதனைத் தொடர்ந்து திருச்சியில் மார்ச் 3இல் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் குலக்கல்வித்திட்ட எதிர்ப்புப் படை புறப்படும் நாள் நாகை மாநாட்டில் அறிவிக்கப்படும் என அறிவித்தார் பெரியார்!

குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு 2500 பேருக்கு மேல் சிறை சென்றதையும் போராளிகள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டதையும், சிலர் உயிர் நீத்ததையும் அறிவோம். இந்த சூழலில் குலக்கல்வித்திட்ட எதிர்ப்புப்படையில் சேர தோழர்களுக்கு அழைப்பு விடுத்து விடுதலையில் வந்த செய்தி அதிசயிக்க வைக்கிறது!

குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படைக்கு மாவட்டம் தோறும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்களை அனுப்ப வேண்டும் என்றும், அப்படி அனுப்பப்படும் தோழர்களிலிருந்து தலைமைக் கழகம் படைக்குத் தேவையானவர்களை தேர்வு செய்யும் என்றும் அதிலும் தங்கள் சொந்த செலவில் பங்கெடுக்க விரும்புகிறவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்! என்றும் குறிப்பிடுகிறது அந்த செய்தி. அடடா என்ன ஒரு அற்புதமான இயக்கம். பெரியார் இயக்கத்தைத் தவிர உலகத்தில் இப்படி ஒரு இயக்கத்தை எங்கேனும் பார்க்க முடியுமா?

குலக்கல்வித் திட்டத்திற்கான எதிர்ப்பு பல முனைகளிலும் வலுத்துக் கொண்டிருந்தது, இராஜாஜியோ, திராவிடர் கழகம் எதிர்க்கிறது என்பதற்காக இந்தத் திட்டத்தை கைவிட முடியாது என்று சென்னை மேல் சபையில் கொக்கரித்தார். (மே 10)

இறுதிப் போராட்டம்!

இராஜாஜி மேல் சபையில் பேசியதைத் தொடர்ந்து 21ஆம் தேதி திருவண்ணாமலையில் உரையாற்றிய பெரியார், “இந்தக் கல்வித் திட்ட எதிர்ப்பு போராட்டம் இறுதிப் போராட்டமாக இருக்கும் என்றார். 

“ஆச்சாரியார் அவர்களின் புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்து தொடங்க இருக்கும் போராட்டம் இதுவரை நடைபெற்றிடாத அளவுக்கு பெரும் புரட்சிப் போராட்டமாக இருக்கும். நாம் எத்தனையோ காலமாய் எவ்வளவோ சாந்தமாய் அமைதியாய் பொறுமையாய் நம்முடைய கருத்துகளை சொல்லி வந்தும் ஒரு பயனும் ஏற்படவில்லை என்பதற்கு மாறாக மேலும் மேலும் பார்ப்பன ஆதிக்கமும் அடக்கு முறையும் இந்த நாட்டிலே வளர்ந்து உச்ச நிலைக்குப் போய்விட்டது. இனியும் இந்த பார்ப்பனர்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்றாவிட்டால் நாம் என்றென்றைக்கும் தலை எடுக்க முடியாதபடி அடிமைப்படுத்தப்பட்டு பழைய வர்ணாசிரமகால மக்களாக ஆகிவிடுவோம். எனவே தான் இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும் என்று இறுதிப் போராட்டமாக இந்த கல்வித்திட்ட எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவோம்.

1942 ஆகஸ்டிலே வெள்ளையனை வெளியேற்றுவதற்காக காங்கிரஸ்காரர்கள் எந்தெந்த முறைகளை கையாண்டார்களோ அதே முறைகளை நாமும் கையாளுவோம். ஆனால் காங்கிரசைப் போல போஸ்ட் ஆபீசுக்கு தீ வைக்க மாட்டோம்; தந்திக் கம்பியை அறுக்க மாட்டோம்; தண்டவாளத்தை பெயர்க்க மாட்டோம்; காரணம் அவைகள் எல்லாம் நம் சொத்துக்கள். அவைகள் எல்லாம் நாசம் செய்து அழிக்கிற முட்டாள்கள் அல்ல நாங்கள். நம்முடைய கவனமெல்லாம் 2000, 3000 ஆண்டுகளாக சகலத் துறைகளிலும் இந்த நாட்டின் மக்களாகிய நம்மைக் கொடுமைப்படுத்தி, காட்டுமிராண்டி வாழ்க்கை வாழும் படியாக செய்திருக்கின்ற பார்ப்பனர்கள் பக்கமே எங்கள் கவனம் திரும்பும்!

இந்தப் போராட்டத்திலே கலந்து கொள்ள தங்கள் தங்கள் ரத்தக் கையெழுத்துப் போட்டு அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். ஏராளமான ரத்த கையெழுத்துகள் தினம் தினம் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மக்களிடையே இந்த பார்ப்பனர்களின் மீதுள்ள வெறுப்புணர்ச்சி நன்கு புலப்படுகிறது. தோழர்களே ரத்தத்திலே கையெழுத்துப் போட்டு அனுப்புங்கள் என்று ஏன் கேட்டேன் என்றால் நாளைக்கு போராட்டத்தில் ஏராளமான மக்கள் அடக்குமுறைகளுக்கு இலக்காகி ரத்தம் சிந்தவேண்டி வந்தாலும் அதற்கும் தயார் என்று புறப்படுகிற தன்மையில் வாருங்கள் என்பதற்காகத்தான்.

ஆச்சாரியாருக்கு கொடுத்த மூன்று மாத நோட்டீஸ் தவணைக் காலம் முடியப்போகிறது. முடிந்த உடனே ஸ்பெஷல் மாநாடு கூட்டி அந்த மாநாட்டிலே திட்டம் வகுத்துக் கொண்டு நேரடியாக இறங்கி விட வேண்டியதுதான். மாநாட்டிலே காவல் துறையினர் பிடித்தாலும் பிடிக்கலாம். இன்னும் என்னென்னமோ அடக்குமுறைகளை எல்லாம் பிரயோகிக்கலாம். ஒன்றுமில்லை ஒரு தூத்துக்குடியில் புது கிராம சங்கதிக்கு எவ்வளவு பெரிது படுத்தினார்கள்? எத்தனை பேர் உள்ளே வைத்து பூட்டிக்கொண்டு எவ்வளவு பெரிதாக நடத்துகிறார்கள்? அதனால் தான் சொல்லுகிறேன். இவ்வளவு வெளிப்படையாக சொல்லிக்கொண்டு இருக்கிற நம்மை சும்மாவா விட்டு வைப்பார்கள்? நாமும் வந்ததை அனுபவிக்கத் தயாராய் தான் இருக்கிறோம்!” என்றார்.

குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை புறப்பட்டது

மார்ச் 27, 28 தேதிகளில் நாகையில் மாநாடு கூடிற்று. மறுநாள் 29 மதியம் மாநாட்டு பந்தலில் இருந்து ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்புப் படை  நீடாமங்கலம் தோழர் ஆறுமுகம் அவர்கள் தலைமையில் பட்டுக்கோட்டை தோழர் டி.வி.டேவிஸ் அவர்களைத் தளபதியாகக் கொண்டு சென்னை நோக்கிப் புறப்பட்டது.  வழி நெடுக தோழர்கள் உற்சாக வரவேற்பளிக்க கடுமையான பிரச்சாரம் தொடர்ந்தது. இந்தப் படையில் 25 தோழர்கள் கலந்து கொண்டனர்

அக்ரஹாரத்திற்கு தீ!

தோழர்களே! அக்ரஹாரத்திற்கு தீ வைக்க பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். நாள் குறிப்பிடுகிறேன் என எச்சரித்தார் பெரியார்.

நாகையில் புறப்பட்ட குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை சென்னையை அடையும் முன்பே மூட்டையைக் கட்டினார் ராஜாஜி! ராஜாஜி பதவி விலகியதை அடுத்து முதலமைச்சர் பதவியை ஏற்கத் தயங்கிய காமராசருக்கு முழு ஆதரவுக்கரம் நீட்டினார் பெரியார். ஏப்ரல் 14ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார் காமராஜர். நாகையிலிருந்து புறப்பட்ட குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை மே 13ஆம் நாள் முதலமைச்சர் காமராஜரை சந்தித்து, குலக்கல்வித் திட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தது. படையினரை இன்முகத்துடன் வரவேற்ற பச்சைத் தமிழர் காமராஜர் விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்றார். 18ஆம் தேதி கூடிய சென்னை சட்ட மன்றத்தில் குலக்கல்வித் திட்டம் திரும்பப் பெறப்படுவதாக கல்வி அமைச்சர் சி.சுப்ரமணியம் அறிவித்தார்.

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்! என்று

முழங்கு சங்கே!

என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளுக்கு ஒப்ப ஓட்டமெடுத்தது ஆரியம்! ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்று ஆர்ப்பரித்து நின்றது திராவிடம்!

(குலக்கல்வித் திட்டம் ஒழிந்த நாள் ஏப்ரல் 18)


No comments:

Post a Comment