தமிழர் தலைவர் ஆசிரியரின் வேண்டுகோள் அறிக்கை
மக்கள் நலப் பணியாளர்களிடம் தமிழ்நாடு அரசு கருணை காட்டவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
மக்கள் நலப் பணியாளர்களை தி.மு.க. ஆட்சி - அன்றைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நியமித்தார் என்பதாலேயே சுமார் 13 ஆயிரம் பேரை வேலை இழக்கச் செய்து வீட்டிற்கு அனுப்பினார் (2001 ஆம் ஆண்டு - அ.தி.மு.க. ஆட்சி) முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா அவர்கள்.
உயர்நீதிமன்றம் மக்கள் நலப் பணியாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு தந்தும்கூட, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மக்கள் நலப் பணியாளர்களின் ‘வயிற்றில் அடிக்கும்' வண்ணம் மேல்முறையீடு செய்தனர். அவ்வழக்குப் பல கட்டங்களைத் தாண்டி, இன்று (11.4.2023) அவர்களது நெஞ்சில் ‘‘பால் வார்க்கும்'' ஒரு தீர்ப்பினை உச்சநீதிமன்றம் தந்துள்ளது!
இது சிறந்த மனிதநேய தீர்ப்பு!
மக்கள் நலப் பணியாளர்களில் சிலர் மறைந்தும் விட்டனர் என்பது வருந்தத்தக்க செய்தி; வாழுபவர் களுக்கு வயது ஏறி இருந்தாலும், சட்டவிலக்கினை ஏற்படுத்தி, தேவைப்பட்டால் அவர்களுக்குக் கருணை காட்டி, இன்றைய ‘திராவிட மாடல்' அரசு மக்கள் நலப் பணியாளர்களுக்குப் புதுவாழ்வு தர முன்வருவது, கலைஞர் நூற்றாண்டு வரும் பருவத்தில், அவரது நூற்றாண்டுப் பரிசாக, வெகுமதி வழங்கியதாக ஆகவேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11.4.2023
No comments:
Post a Comment