சிந்திப்பது மனித தர்மம், அதுவே சுயமரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

சிந்திப்பது மனித தர்மம், அதுவே சுயமரியாதை

01.05.1948 - குடிஅரசிலிருந்து... 

நாங்கள் கூறுவனவற்றிற்கு எங்கு மறுப்பு கிடைக்குமென்று நீங்கள் தேட வேண்டும். யாராவது ஆட்சேபனை தெரிவிப்பார்களானால், கண்கொத்திப் பாம்பு போல் இருந்து கருத்துடன் கவனிக்க வேண்டும். பிறகு பொறுமையோடு ஒன்றையொன்று ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். உங்கள் அறிவையே உண்மையான நுட்பமான தராசாகக் கொண்டு தராதரங்களை நிறுத்துப் பார்க்க வேண்டும். மாசிருக்கும், பாசி இருக்கும், களிம்பிருக்கலாம். அறிவு கொண்டு உரைத்துப் பாருங்கள். 

உங்கள் அனுபவத்தால் அலசிப் பாருங்கள், சிந்தித்துப் பாருங்கள், சிந்திக்க வேண்டியதுதான் மனித தர்மம். யார் எது சொன்னாலும் உங்கள் சொந்த புத்தி கொண்டு சிந்தித்துப் பாருங்கள். சுதந்திரத்தோடு உங்கள் அறிவைச் சட்டத்திற்கோ, சாத்திரத்திற்கோ, சமய சந்தர்ப்பத்திற்கோ, சமுதாய சம்பிரதாயத்திற்கோ, பழக்க வழக்கங்களுக்கோ அடிமைப்படுத்தாமல் சிந்தித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள். நாம் இதைத்தான் சுயமரியாதை என்கிறோம். சுய அறிவு கொண்டு சிந்தித்துப் பார்ப்பதற்குத்தான் சுயமரியாதை என்று பெயர். ஒவ்வொருவரும் தம் சுய அறிவு கொண்டு சிந்திக்க உரிமை பெற்றிருப்பதற்குத்தான் பூர்ணசுயேச்சை என்று பெயர் எதையும் பூர்ண மரியாதை கொடுத்துக் கேட்டு பூர்ண சுயேச்சையோடு ஆராய்ந்து முடிவுக்கு வாருங்கள்.

No comments:

Post a Comment