வைக்கம் போராட்டத்திற்காக ஒருபோதும் சட்டப் போராட்டம் நடத்தவில்லை - மக்கள் போராட்டம்தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

வைக்கம் போராட்டத்திற்காக ஒருபோதும் சட்டப் போராட்டம் நடத்தவில்லை - மக்கள் போராட்டம்தான்!

மக்களிடத்தில்தான் இறுதி அதிகாரம் என்பது அன்றே நிரூபிக்கப்பட்டது

இரண்டாம் நாள் கூட்டத் தொடரில்  தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை 

சென்னை, ஏப்.24  ‘‘வைக்கம் போராட்டத்திற்காக ஒரு போதும் சட்டப் போராட்டம் நடத்தவில்லை - மக்கள் போராட்டம்தான்; இறுதி அதிகாரம் மக்களிடத்தில்தான் என்பது அன்றே நிரூபிக்கப்பட்டது''  என்றார்  இரண்டாம் நாள் கூட்டத் தொடரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா 

ஏன்? எதற்காக? இரண்டாம் நாள் கூட்டம்

கடந்த 11.4.2023 ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?'' என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நாகம்மையார் எழுதுகிறார்:

‘‘என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலை யானார். இன்று காலை 10 மணிக்கு (11.9.1924) மறுபடியும் இராஜத் துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப் பட்டிருக்கின்றார். இரண்டு வருஷத்திற்குக் குறை வில்லாத காலம் தண்டனையாகக் கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாய்ச் சொல்லி என்னிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

அவர் திரும்பத் திரும்பத் தேச ஊழியத்தின் பொருட்டுச் சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டு மென்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும் கடவுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த் திக்கின்றேன்.

அவர் பாக்கியில் வைத்துவிட்டுப் போவதாக நினைத்துக்கொண்டு இருக்கும் வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து அதைச் சரிவர அகிம்சா தருமத்துடன் நடத்த அனுகூலமான முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமாய் என் கணவரிடம் அபிமானமும், அன்பும் கொண்ட தலைவர்களையும், தொண்டர்களையும் பக்தியோடு பிரார்த்தித்துக் கொள் கின்றேன்’’ என்றார்.

இதுபோன்ற ஓர் அறிக்கையை எங்கேயாவது தேடி கண்டுபிடிக்க முடியுமா? இந்தியாவினுடைய வரலாற்றில்.

வைக்கம் போராட்டத்திற்குத் 

தலைமை தாங்கினார் 

அன்னை நாகம்மையார்!

இப்படி ஒரு குடும்பம்; அவருடைய தியாகம். எப்படி பக்குவப்படுத்தியிருக்கிறார் பாருங்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. அந்தக் கொள்கையில் பிடிப்பாக, வைக்கம் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்கள்.

ஆனால், சிலர் புரியாமல் சொல்கிறார்கள், பெரியார், வைக்கம் போராட்டத்தின் கடைசிவரை இல்லை என்று.

நான் சொல்லப்போகும் தகவல் பழ.அதியமான் எழுதிய புத்தகத்தில் இருக்கிறது. அவர் திருவனந்தபுரம் அரசு ஆவணக் காப்பகத்திலிருந்து திரட்டியிருக்கிறார். சி.அய்.டி. எழுதி வைத்திருக்கின்ற பழைய தகவலில் இருப்பதைச் சொல்கிறேன்.

திருவனந்தபுரம் அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள தகவல்!

‘‘திருவனந்தபுரத்தில் கே.ஜி. குஞ்சுகிருஷ்ணன் பிள்ளை தலைமையில் நடந்த கூட்டத்தில் மே 1, 1924 ஆம் ஆண்டு பெரியார் எம்பெருமாள் நாயுடு, மன்னத்து பத்மநாப பிள்ளை, அய்யாமுத்து கவுண்டர், சாத்துக்குட்டி நாயர் ஆகியோர் பேசினர்.

பெரியாரது பேச்சின் சாரமாக, அரசு ஆவணம் பதிந்து வைத்திருப்பதின் சுருக்கம் இது.

‘‘வைக்கம் சத்தியாக்கிரகம் என்ற போர், அரசாங்கத்திற்கு எதிரானதல்ல. மதச் சண்டையும் அல்ல, வகுப்புச் சண்டையும் அல்ல. இது பொது நலனுக்கான செயல். சமத்துவத்தை நிறுவும் நோக்கம் கொண்டது. இந்தப் பணியில் நாம் நல்ல நிலையில் இருக்கும் எவரையும் நம்பி இருக்கக் கூடாது. இந்து மதம் வேகமாக மறைந்து வருகிறது. மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில், 5, 10, 15 சதவிகிதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்து மக்கள் தொகை 6 சதவிகிதம் குறைந்துவிட்டது. கடந்த 10 ஆண்டு களில் இது இந்துக்கள் கல்யாணம் செய்துகொள்ள வில்லை, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வில்லை என்பதைக் காட்டுகிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை, அவர்களை மற்ற மதங்களில் சேரத் தூண்டுகிறது. இந்த நிலைமை நீடிக்குமானால், இந்துக்கள் இல் லாமல் போய்விடுவர்'' என்றந்தப் பேச்சு நீள்கிறது.

இந்து ஒருவரை தீண்டாதவர்  என கருதுகை யில், முகம்மதியர்களும், கிறித்துவர்களும் அவர் கள் மதத்தைச் சேர்ந்த ஒருவரும், அவர்கள் மதத்தில் பிறந்திருந்தாலும், மாறியவராக இருந் தாலும் சமமாகக் கருதுகின்றனர்.

ராஜ்ஜியமே கோவில் சொத்துதான்!

அரசாங்கம் சமாதானத்திற்காகவே அளித்த பல்வேறு யோசனைகளும் ஒப்புக்கொள்ளத் தக்கவை அல்ல, அதில் ஒன்று, சாலைகள் கோவில் சொத்து என்பது. மகாராஜாவுக்கு எதாவது சொத்து இருக்கிறதா? முழு ராஜ்ஜியமே சிறீபத்மநாபனுக்குச் சொந்தமானது என்பதால், ராஜ்ஜியமே கோவில் சொத்துதான். இது அவரது தாத்தாவின் சொத்தல்ல. முகம்மதியர்களையும், கிறித்துவர்களையும் அச் சாலைகளில் நுழையவிடாமல் தடுத்துவிட்டால், உங்களுக்குத் திருப்தியா என்று கேட்கிறது?

இது ஓர் அரசரின் கட்டளை போல  உள்ளது. அரசர் ஒருமு¬,ற பொருளை அளக்கும் ..................... என்று ஆணையிட்டார். கீழ்ப்பகுதி,  நேராக அளக் கும்போது பிடிக்கும் அளவைவிட, குறைவாகப் பிடிக்கிறது என்று மக்கள் புகார் சொன்னார்கள். நிலைமையைச் சமாதானம் செய்த அரசர், படி யைப் பக்கவாட்டில் அளக்கும்படி ஆணை யிட்டார். இதனால் கீழ்ப்பகுதியைக் கொண்டு அளக்கும்போது கிடைத்ததும் இழக்கப்பட்டது. வைக்கத்தில் அளிக்கப்படும் சமாதானத்தை இதற்கு ஒப்பிட முடியும்.''

பார்ப்பனர்களுடைய நரித்தனம்; சனாதனத்தினுடைய தந்திரங்கள்

நாங்கள் எங்களுக்கு உரிமை வேண்டும் என்று கேட்டால், அவனையும் தடுத்துவிட்டால் போதுமா? என்று இரண்டு பேரையும் முட்டவிடு கிறார்கள் பாருங்கள். இதுதான் பார்ப்பனர்களுடைய நரித்தனம்; சனாதனத்தினுடைய தந்திரங்கள்.

‘‘நாங்கள் பசியாக இருக்கிறோம் என்று சொன்னால், பசியாக இருக்கிறோம் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் என்றால், மற்றவர்கள் சாப்பிடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அரசாங்கம் சொல்கிறது, சாப்பிடும் மற்றவர் உணவைப் பறித்து விடுகிறோம் என்கிறது.

அரசாங்கத்தை நம்பினால் 

நமது நோக்கத்தை அடைவது சாத்தியமா?

“திருவாங்கூருக்கு வரும்போது பிரிட்டிஷ் அரசாங்கம் மோசமான அரசாங்கமாக இருக்கிறது என்ற எண்ணத்தில் இருந்தேன், ஏனெனில் அவர்கள் நோக்கத்தை அடைய பொய் சொல் லவும், தந்திரத்தைக் கையாளவும் தயங்க மாட் டார்கள். இந்த நாட்டு நடை முறைகளைப் பார்க்கும்போது பிரிட்டிஷ் அர சாங்கம் தேவலாம் என்று நினைக்கிறேன். பிரச்சினைக்குரிய சாலையின் ஓரத்தில் நின்றிருக்கும் மரங்களில் எழுதப்பட்டிருந்த PWD என்ற எழுத்துகளை இந்த அரசாங்கம் நீக்கியுள்ளது. இது மோசடி இல்லையா? இந்த அரசாங்கத்தை நம்பினால் நமது நோக்கத்தை அடைவது சாத்தியமா?

கோயிலுக்குச் செல்லும்போது நமது இடதுகையை விட்டுவிட்டுச் செல்கிறோமா?

“வருணங்களின் இருப்பை மதிக்கும் ஒருவர் என இவ்வரசர் பேசப்படுகிறார். அரசின் உயர் பதவிகளுக்கு தாழ்ந்த ஜாதியினர் என்று சொல்லப்படுபவரை நியமிக்கும் போது இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறாரா? ஒரு தீயர் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் - அவரது  ஏவலர்கள் பிராமணர்கள். இது வருணாசிரம தருமத்திற்கு எதிரானது இல் லையா? வருணாசிரம தர்மத்தை மதிப்பவர் என்று மகாராஜாவை எப்படி கருத முடியும்? சில இந்துக்கள் சில குறிப்பிட்ட வேலையைச் செய்வதால் தீண்டத் தகாதவராகி விடுவர் என்பது உண்மையா? வலது கை சாப்பிடுவது போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப் பிட்ட பணிகளுக்காக இடது கை இருக்கிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை தாய் உண்டா? இடதுகையைத் தொடும்போதெல்லாம் வலதுகை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளைத் தொழும்போது வலதுகையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும் போது நமது இடதுகையை விட்டுவிட்டுச் செல்கிறோமா? வலது பக்கம் இடது பக்கத்தை விட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லுகிறோமா? அல்லது வலது காலால் உதைபடும்போது சந்தோஷப்படுகிறோமா?

பிராமண டாக்டர்களிலும், 

நாயர் டாக்டர்களிலும் எவ்வளவு அதிகமான தீண்டத்தகாதவர் உள்ளனர்?

“வெவ்வேறு வேலைகளைச் செய்தாலும் சமத்துவமாக அல்லவா எல்லா விரல்களையும் கருதுகிறோம். அதுபோலவே ஒவ்வொரு இந்துவும் சமத்துவமாக நடத்தப்பட உரிமை உடையவர்கள். அவர் பிராமணனாக இருக்கட்டும், புலையராக இருக்கட்டும். இறந்த கால்நடைகளை அறுக்கும் பறையர் தீண்டத்தகாதவர் எனில், மனித உடலை அறுக்கும் பிராமண டாக்டர்களிலும், நாயர் டாக்டர்களிலும் எவ்வளவு அதிகமான தீண்டத்தகாதவர் உள்ளனர்?’’

உயர்வு என்பது ஒருவர் செய்யும் 

வேலையிலா இருக்கிறது?

“கள்ளை இறக்குவதால் தீயர் தாழ்ந்த ஜாதியினர் எனப்படுகிறார் எனில் அதைக் குடிப்பவர் எந்த அளவு மோசமானவர்? கள்ளை இறக்க மரங்களை வாடிக்கை விடுபவர் இவர்களை விட எந்த அளவு கூடுதல் மோசமானவர்? கள்ளிலிருந்து வருவாயை அதிகரிக்கும் அரசாங்கம் இவர்களை எல்லாம் விடக் கூடுதல் மோசமானது அல்லவா. உயர்வு என்பது ஒருவர் செய்யும் வேலையிலா இருக்கிறது? கையூட்டு பெறும் காவல் அதிகாரியும், தவறான சாட்சியம் சொல்லும்  வக்கீலும் பிறப்பினால் உயர்ந்தவர்கள் என்று எந்த சாஸ்திரம் சொல்லுகிறது?''

காவல் அதிகாரிகளின் சிரித்த முகங்களாலும், 

அன்பான வார்த்தைகளாலும் 

நாம் ஏமாந்துவிடக் கூடாது

“சத்தியாகிரகிகளின் வெற்றிக்குச் சில நல்ல குணங்கள் அவசியமாகின்றது. தம்மை உயர்ந் தோர் என்று கருதிக் கொள்பவரிடம் சமஅந்தஸ்து கோருவோர் முதலில் தம்மை விட ‘கீழ் உள்ளோர்’ என வகைப்படுத்தப்பட்டவருடன் சமம் என்று கருதவேண்டும். வைசியன், சூத்திரனுடன் தன்னைச் சமமாக கருதாத ஒரு க்ஷத்திரியன் பிராமணனுடன் சமத்துவம் கோர முடியாது. நாம் அஹிம்சைவாதியாக இருக்க வேண்டும். சிறிய வன்முறைகூட நம் முயற்சிகளை வீணாக்கி விடும். யாராவது ஒருவர் வன்முறையை உபயோகித்தால் மகாத்மா காந்தி சத்தியாகிரகத்தை நிறுத்திவிட தந்தி கொடுத்து விடுவார். 

நம்முடைய ஆயுதமாக தர்மத்தையும், பொறுமையையும் மட்டுமே கொள்ள வேண்டும்

காவல் அதிகாரிகளின் சிரித்த முகங்களாலும், அன்பான வார்த்தைகளாலும் நாம் ஏமாந்துவிடக் கூடாது. சிறிய அளவு வன்முறைகூட துப்பாக்கி களையும் மற்ற கருவிகளையும் கொண்டு வந்து விடும். திருவாங்கூர் அரசாங்கம் இந்த நிலைமையை வெற்றிகரமாகச் சமாளிக்கவில்லை யெனில், பிரிட்டிஷ் படை விமானங்களுடன், யந்திர துப்பாக்கிகளுடன் உதவிக்கு வந்துவிடும் அப்போது நாம் நிராதரவாக நிற்போம். சிறிய வன்முறைகூட நமது போராட்டத்துக்கு முழுத் தோல்வியைக் கொண்டு வந்து விடும். எனவே நம்முடைய ஆயுதமாக தர்மத்தையும், பொறுமை யையும் மட்டுமே கொள்ள வேண்டும்.’’

இதுபோன்று நிறைய செய்திகள் உள்ளன. எப்படி யெல்லாம் அவர்கள் எதிர்கொண்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

1907 ஆம் ஆண்டு நடைபெற்ற 

‘‘மிஸ்ர போஜனம்‘’

வைக்கம் போராட்டம், அதற்கு முன்பு தோள்சீலைப் போராட்டம், அதற்கிடையில், 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘‘மிஸ்ர போஜனம்''  அதனுடைய நூற் றாண்டை 2007 ஆம் ஆண்டு சகோதரர் அய்யப்பன் அந்த விழாவை நடத்தினார்.

ஜாதிகளுக்குள்ளேயே பிரிவை ஏற்படுத்தி வைத் திருந்தார்கள். நம்மூரில் சொல்வார்களே, நாங்கள் இவர் களுக்கு முடி வெட்டமாட்டோம்; நாங்கள் அவர்களை விட மேலானவர்கள் என்கிறார்கள். அதுதான் படிகட்டு ஜாதி முறை.

ஆகவே, அந்தத் தத்துவத்தை அவர்கள் எப்படி எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெளி வாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

வைக்கம் போராட்டத்திற்காக 

ஒருபோதும் சட்டப் போராட்டம் நடத்தவில்லை!

இந்த நூற்றாண்டு தொடக்க விழாவில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென் றால், வைக்கம் போராட்டம் நடத்தும்பொழுது, ஒருபோதும் சட்டப் போராட்டம் நடத்தவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது.

சட்டமன்றத்தில் சில பேர் முயற்சி செய்தார்கள்; ஆனால், அது சரிவரவில்லை. பிறகு அந்தப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

600 நாள்கள் நடைபெறக்கூடிய போராட்டமாக அந்தப் போராட்டம் நடந்தது.

அவர்கள் அரசாங்கத்தைப் பார்த்து செய்து கொடுங்கள் என்று சொல்லவில்லை. அதை நிறைவேற்றவேண்டும் என்று போராட்டக் களத்தில்தான் நின்றார்கள்.

இந்தப் போராட்டத்தினுடைய தத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், முக்கியத்துவம் யாருக்கு என்றால், சட்டங்கள் அல்ல! சட்டம் அதற்குத் துணையாக இருக்க வேண்டியது அவ்வளவுதான். அதற்குமேல் ஒரு செய்தி சுட்டிக்காட்டப்பட வேண்டும் என்றால், அது மக்கள் மன்றம்தான்.

எந்தப் போராட்டமாக இருந்தாலும், மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்; மக்கள் பக்குவப் படுத்தப்பட வேண்டும்; மக்களுக்குத் தெளிவான வகுப்பெடுக்கவேண்டும்.

பெரியார்தான் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர்

அதனால்தான் அண்ணா சொன்னார், ‘‘பெரியார்தான் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர்; அவருடைய வகுப்பு எப்பொழுது தொடங்கும் என்றால்,  மாலை நேரத்தில் தான் தொடங்கும். மாலை நேரக் கல்லூரிகளாக இருக்கும். மக்களிடையே பாடம் நடத்துவார்'' என்பார்.

அரசியல் கல்வி என்பதே, தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டிலிருந்து மற்றவர்களுக்குக் கொடுத்த அருட்கொடை - நன்கொடை - புதிய வழிமுறை என்பதை நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.

அதனால்தான் இன்றைக்கும் மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், மக்களைத் தயார்படுத்துகின்றோம்; பெருந்திரள் கூட்டங்களை நடத்துகின்றோம்.

உடல்நிலையைப்பற்றிக் கூட கவலைப்படாமல் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்!

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரையை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். உடல்நிலையைப்பற்றிக் கூட கவலைப்படாமல், தொடர்ந்து செய்து முடித்தேன்.

தமிழ்நாடு ஆளுநர் சனாதனத்தை எப்படி பிரச்சாரம் செய்கிறார்? தேவையான விஷயங்களைத் தவிர்த்து விட்டு, தேவையற்ற விஷயங்களை நாள்தோறும் பேசி வருகின்ற ஆளுநர் குறித்து, தமிழ்நாட்டில் உள்ள சந்து பொந்துகளில் எல்லாம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, மக்களுக்குத் தெரியக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றோம்.

அதற்கு இந்த நாட்டு ஊடகங்களை நம்ப முடியுமா? நீதிமன்றங்களை நம்ப முடியுமா?

அதிலும் சில பேர் இந்த உணர்வாளர்கள் இருக் கிறார்கள்; பெரும்பாலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நீதிமன்றங்களில் சட்டம் எப்படி வியாக்கியானம் செய்யப்படும் என்பதற்கு உதாரணம், திருவாரூர் டி.முத்துசாமி அய்யருக்கு சிலை வைத்திருக்கிறார்கள்; எதற்காக என்றால்,  தேசியத்தில், இந்தியருக்குக் கொடுத்த முதல் நீதிபதி என்பதற்காக.

‘மெயில்’ பத்திரிகையில்...

ஆனால், அன்றைய ‘மெயில்' பத்திரிகையில், அந்த நியமனம் வருவதற்கு முன்பே, ‘ஃபேர் மைண்டட்'' என்று கடிதம் போட்டு, ‘‘இவர் முழுக்க முழுக்க வைதீக சிந்தனை உள்ளவர்; சனாதனவாதி; இவரை நீதிபதியாக நியமித்தால், நிச்சயமாக ஒரு சார்பாக இருப்பாரே தவிர, பொது நிலையில் இருந்து தீர்ப்புகளை எழுத மாட்டார்'' என்று எழுதியது.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்...

பெரியார் சொன்னாரே, ‘‘பார்ப்பனர் நீதிபதியாக இருந்தால், அது கடும் புலி வாழும் காடே ஆகும்'' என்று உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு சொன்னது பதிவாகியிருக்கிறது.

வைக்கம் போராட்டத்தின்போது நடைபெற்ற ஒரு அருமையான தகவலை பழ.அதியமான் அவருடைய நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

திருவண்ணாமலையில் இருக்கின்ற ஒரு பொற் கொல்லர், நான் பிள்ளையாருக்கு ஆராதனை செய் கிறேன் என்று சொல்லி, அப்படியே செய்துவிட்டார். தீட்டாகி விட்டது என்று சொல்லி, அவர்மேல் வழக்குத் தொடுத்தனர்.

வெள்ளைக்கார நீதிபதியின் கருத்து!

வெள்ளைக்கார நீதிபதியின்முன் அந்த வழக்கு வருகிறது - ‘‘இவர் என்ன குற்றம் செய்தார்?'' என்று.

பிள்ளையாருக்கு ஆராதனை - Defiling - செய்ததைச் சொல்கிறார்கள்.

‘‘அது எப்படி தவறாகும்?'' என்று கேட்கிறார் வெள்ளைக்கார நீதிபதி.

ஆங்கில அகராதியைக் கொண்டுவாருங்கள் என்று வக்கீலிடம் சொன்னார்.

Defiling என்றால், மாசுபடுத்துல், அலங்கோலமாக் குதல் என்பதுதான் அதற்கான அர்த்தம்.

‘‘அந்தப் பொற்கொல்லர், அந்த சிலையை மாசு படுத்தவில்லையே, அபிஷேகம் செய்திருக்கிறார், கும் பிட்டுத்தானே இருக்கிறார்'' என்றார் வெள்ளைக்கார நீதிபதி.

வெள்ளைக்காரர்களின் அகராதியில் உள்ள அர்த்தத்தை இதற்குப் பயன்படுத்தக் கூடாது. பார்ப் பனர்கள் அதை எப்படி கருதுகிறார்கள் என்றால், Defiling என்றால், மத அடிப்படையில்தான் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லி, அந்தப் பொற் கொல்லரை தண்டிக்கிறார்கள்.

1885 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலே இப்படிப்பட்ட நிகழ்வு நடந்ததை பழ.அதியமான் சுட்டிக்காட்டுகிறார்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நண்பர்களே, நீதிமன்றத்திற்குச் சென்றால், உடனே எல்லா பிரச்சினை களுக்கும் தீர்வு வந்துவிடும் என்று நினைக்கக் கூடாது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாடமாகப் போதித்தது வைக்கம் போராட்டம்!

மக்கள் மன்றத்திற்குச் சென்றால்தான், அது நடக்கும் என்பதற்கு, மண்டல் கமிசனே உதாரணமாகும்.  அதைத்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாடமாகப் போதித்தது வைக்கம் போராட்டம்.

நாங்கள் மக்களை நம்புவோம்! 

மக்களைத் திரட்டுவோம்!

கஷ்ட நஷ்டங்களை நாங்களே ஏற்றுக் கொள்வோம்; மற்றவர்களுக்குக் கொடுக்கமாட்டோம்.

ஓர் இலட்சியத்தை அடையவேண்டுமானால் அதற்குரிய விலையைக் கொடுக்கவேண்டும்!

ஆகவேதான், ஓர் இலட்சியத்தை முன்னிறுத்தி, அதை வெற்றிகரமாக ஆக்கவேண்டுமானால், அதற்கு நாம் உரிய விலை கொடுக்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னது, எவ்வளவு சரியான பாடம் என்பதற்கு வைக்கம் போராட்டமே சரியான சான்று!

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment