ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார் பொதுக் கூட்ட மேடையில் பைப் குண்டு வீச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 16, 2023

ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார் பொதுக் கூட்ட மேடையில் பைப் குண்டு வீச்சு

டோக்கியோ,ஏப். 16  பொதுக்கூட்ட மேடையில் பைப் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப் பட்டதில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா நல்வாய்ப்பாக  உயிர்தப்பினார். குண்டு வீசியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜப்பானின் வகயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி துறைமுகம் பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்றார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, மக்கள் மத்தியில் இருந்த   ஒருவர், பிரதமர் கிஷிடா அமர்ந்திருந்த மேடையை நோக்கி பைப் வெடிகுண்டை வீசினார். அந்த குண்டு, மேடைக்கு அருகே விழுந்து வெடித்தது. இதில் பெரிய அளவில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் பதற்றமடைந்த மக்கள் சிதறி ஓடினர்.

இதையடுத்து, பிரதமர் கிஷிடாவை பாதுகாப்பு படை வீரர்கள் சூழ்ந்துகொண்டு, அவரை பாது காப்பாக அழைத்துச் சென்றனர். நல்வாய்ப்பாக அவர் காயமின்றி உயிர் தப்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இதற்கிடையே, பைப் வெடிகுண்டு வீசிவிட்டு தப்ப முயன்ற நபரை காவலர்கள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக இத்தாக் குதலை நடத்தினார் என்ற தகவலை காவலர்கள் இதுவரை வெளியிடவில்லை.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி-7 அமைப் பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில் பிரதமர் கிஷிடா மீது தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. ஜப்பான் மேனாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2022 ஜூலையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், ஷின்சோ அபே உயிரிழந்தார். இந்நிலையில் பல அடுக்கு பாதுகாப்பை மீறி, ஜப்பான் பிரதமர் மீது பைப்குண்டு வீசப்பட்டிருப்பது பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment