வைக்கம் போராட்டம்
- தந்தை பெரியாரின் நினைவலைகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது தந்தை பெரியார் அவர்கள் மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கம்:-
இந்த மாதவன் (வக்கீல்) சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாய தலைவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தனர். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.பி. கேசவமேனன் இவர்களோடு இன்னும் சிலரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். முறை ஜெபத்தன்று ஆரம்பிப்பது என்ற முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். நான் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கிறேன். எந்த ஊரில் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கலா மென்பதற்கு வைக்கத்தையே தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால் அந்த ஊரில்தான் ஊர்நடுவில் கோயிலும் அதன் 4 வாசலுக்கு எதிரிலும் 4 நேர் வீதிகளும் கோயில் மதில்கள் சுற்றிலும் தெருக்கள் பிரகாரம் எல்லாமும் இருக்கும்.
தீண்டாமைக் கொடுமை
அந்த வீதிகளில் கீழ்ஜாதிக்காரர்களான அவர்ணஸ்தர்கள் எல்லோரும் ஆயித்தக்காரர்கள் எனப்படும் தீண்டாதாரும் நான்கு புறத்திலும் கோயில் வாசல்களுக்கு முன்னால் நடக்கக்கூடாது; மூன்று ஃபர்லாங் தூரத்திலேயும் 4 ஃபர்லாங்கு தூரத்திலேயும் இருக்கிற ரோட்டில் கூட நடக்காமல் ஒரு மைல் தூரம் வேறு ரோட்டில் சுற்றிக் கொண்டுதான் எதிர்ரோட்டுக்குப் போகவேண்டும். ஆயித்தக்காரர் தீண்டப்படாதவர்களைப் போலவேத்தான் ஈழவர்கள், ஆசாரிகள், வாணியர்கள், நெசவாளிகள் முதலியோரும் அந்த ரோட்டில் நடந்து போகக்கூடாது.
இதே மாதிரிதான் சுசீந்திரத்திலும் உள்ள கோயில் மற்றும் அந்த ராஜ்யத்தில் உள்ள மற்ற கோயில்கள் பக்கமும் அமைந்துள்ள தெருக்களிலும் நடக்க இவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.
வைக்கத்தில் கோவிலுக்குப் பக்கமாக வாசலுக்கு எதிராக அமைந்த தெருக்களில்தான் எல்லா முக்கிய ஆஃபீசுகளும், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் முதலியனவும் இருந்தன. ஏதாவது போலீஸ்காரர்களையோ இன்ஸ்பெக்டர்களையோ குமாஸ்தாக்களையோ மாற்றுவதனாலுங்கூட கீழ்ஜாதியார்களை அங்கு மாற்றமாட்டார்கள். ஏனென்றால் அந்த போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுகள் இருக்கும் இடத்திற்குப் போக கீழ்ஜாதியார்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் முக்கியமான கடைகளும் அந்த வீதிகளில்தான். ஆனதால் கீழ்ஜாதிக் கூலிகள் அங்கு செல்ல முடியாது.
போராட்டமும் கைதும்
சத்தியாக்கிரகம் ஆரம்பமானவுடன் வக்கீல் மாதவன், பாரிஸ்டர் கேசவமேனன், டி.கே. மாதவன், ஜார்ஜ் ஜோஸஃப் முதலியவர்களைப் போல் சுமார் 19 பேரை ராஜா அரஸ்ட் செய்யும்படி உத்தரவிட்டு அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
தினசரி ஒருவர் வீதம் கைது செய்து அவர்களை மாத்திரம் தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் கைதிகளாக நடத்த உத்தரவிட்டார்கள். அப்போது இராஜாவிடம் மிஸ்டர் பிட் என்ற ஒரு வெள்ளைக்காரர் போலீஸ் அய்.ஜி.யாக இருந்தார். அவர் இந்த சத்தியாக்கிரகத்தை வெகு சாமர்த்தியமாகவும் ரொம்பவும் ஜாக்கிரதையாகவும் சமாளித்தார். இந்த பத்தொன்பது பேரைப்பிடித்து உள்ளே போட்டுவிட்டவுடன் அடுத்து சத்தியாகிரகத்தில் ஈடுபட யாரும் ஆள் கிடைக்கவில்லை. அதோடு அதுவும் நின்றுவிடும் போலத் தோன்றியது. உடனே எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசஃபும், கேசவமேனனும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள். நீங்கள் வந்துதான் இதற்கு உயிர் கொடுக்கணும்; இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவதைத் தவிர வேறுவழியில்லை. அப்படி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவதனால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை என்றாலும் பெரிய காரியம் கெட்டுப் போகுமே என்றுதான் கவலைப்படுகிறோம். உடனே நீங்கள் வந்து பொறுப்பு ஏற்கவேண்டும் என்று எழுதி அனுப்பினார்கள். எனக்கு ஏன் எழுதினார்கள் என்றால் தீண்டாமையைப் பற்றி பேசுவதில் நான் கெட்டிக்காரன், கிளர்ச்சியிலும் நான் கெட்டிக்காரன் என்று எனக்குப் பேர். நான் அப்போது சுற்றுப்பிரயாணத்தில் இருந்தேன்.
ஈரோட்டிற்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம் ரீ டைரக்ட் செய்யப்பட்டு மதுரை ஜில்லாவில் உள்ள பண்ணபுரம் என்ற ஒரு மலைப்பக்க கிராமத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவன் என்ற முறையில் நான் பேசிக் கொண்டிருந்தபோது என் கைக்குக் கிடைத்தது.
திடீர் பயணம் போருக்கு!
உடனே மீதி சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை எல்லாம் ஒத்திப்போட்டுவிட்டு நேரே ஈரோட்டுக்குப் போனேன். வீட்டுக்கு வந்தவுடன் வைக்கத்திற்குப் போய் சத்தியாக்கிரகத்தை நடத்துவதென்று மிக்க மகிழ்ச்சியோடு மூட்டைக் கட்டிவிட்டேன். திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்கும் நான் வரும் வரைத் தலைமைப் பதவி ஏற்றுக்கொள்ளும் படி ஒரு லெட்டர் எழுதிவிட்டு இந்த சந்தர்ப்பம் ஒரு நல்லவாய்ப்பு - இதைவிட்டால் இந்த மாதிரி அருமையான வேலை செய்ய வேறு வாய்ப்புக் கிடைக்காது என்று எழுதி விட்டு 2 பேரைக் கூட்டிக்கொண்டு வைக்கத்திற்கு வந்தேன்.
எதிர்பாராத வரவேற்பு
வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்துகொண்டு, போலீஸ் கமிஷ்னர் பிட்., இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் போலீஷ்காரர் சுப்ரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்), ஒரு தாசில்தார் எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும்போதே வரவேற்றார்கள். மகாராஜா அவர்கள் எங்களை அவர்கள் சார்பில் வரவேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித்தரச் சொன்னார் என்று சொல்லி எங்களை வரவேற்றார்கள். இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும் ஏன் மகாராஜா அப்படி செய்தார் என்றால், அதற்கு 3-மாதத்திற்கு முன்பு இந்த இராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து ஒருநாள் ஈரோட்டிலே தங்கிவிட்டு அடுத்த நாள் டெல்லிக்கு இரயில் ஏறிப் போவது வழக்கம். அப்படி ஈரோட்டிலே தங்கும்போது அதற்கு வேண்டிய வசதிகளையும், மகாராஜாவின் சிப்பந்திகள் தங்கும் இடம் எங்கள் சத்திரத்திலும், மகாராஜா எங்கள் பங்காளவிலும்தான் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி 3 மாதத்திற்கு முன்வந்தபோது அவருடன் இந்த போலீஸ் அதிகாரி இன்னும் இராஜாவுக்கு உதவிக்குத் தேவையான எல்லா அதிகாரிகளும் வந்து போனதில் இவர்கள் ஈரோட்டில் என்னை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறவர் களாகவும் நானும் அவர்களை எங்கள் வீட்டிற்கு வந்தபோது சந்தித்துப் பேசியவர்களாகவும் இருந்திருக்கிறோம். இதனால் மகாராஜா சற்று மரியாதை காட்டினார்.
எனது தீவிரப் பிரச்சாரம்
சத்தியாக்கிரகத்தை தொடர்ந்து நடத்தவந்த என்னை மகாராஜா சார்பில் இந்த பெரிய அதிகாரிகளே வரவேற்கிறார்கள் என்று கண்டதும் அப்பக்கத்திய பாமரமக்களுக்கு ஒரே குஷாலாக ஆகிவிட்டது. என்னை விருந்தினராக மகாராஜா கருதினாலுங்கூட நான் பல இடங்களிலும் சென்று பொதுக் கூட்டம் போட்டு சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசினேன்; காரசாரமாகப் பேசினேன்! கீழ்ஜாதி மக்களான நாம் உள்ளே தெருவில் போவதால் தீட்டுப்பட்டுவிடும், செத்துப்போகும் என்று சொல்லும் வைக்கத்தப்பனை போட்டு வேட்டி துவைக்கணும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினேன். சுற்று வட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் வைக்கம் வந்து கூடி விட்டார்கள். அது இராஜாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 5-6 நாள் வரை சும்மாதான் இருந்தார். பலரும் போய் அவரிடத்தில் நான் பேசுவது குறித்து முறையிட்டார்கள். பிறகு இராஜாவினால் சும்மா இருக்கமுடியவில்லை.
தடைச் சட்டத்தை மீறினோம்
இப்படி சுமார் 10 நாள் ஆனவுடனேயே ஒரு போலீசு (சூப்பிரண்ட்) அதிகாரி அவர் அய்யங்கார். அவர் முயற்சியால் பி.சி.26-இன்படி தடையுத்தரவு போட்டார். அந்த நாட்டிலே 26 என்பது இப்போது இங்கே 144 தடையுத்தரவு போன்றது, நானும் சட்டம் மீறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்தேன். உடனே நான் சட்டத்தை மீறிப் பேசினேன். என்னுடன் (தற்போது காங்கிரஸ்காரராக இருக்கும்) திரு. அய்யா முத்து அவர்களும் மற்றும் இருவரும் சட்டம் மீறினோம், எங்களைக் கைது செய்தார்கள். எல்லோருக்கும் ஒரு மாதம் வெறுங்காவல் போட்டார்கள்! என்னை அருவிக்குத்தி என்ற ஊரில் உள்ள ஜெயிலிலே வைத்தார்கள்! அதற்குப் பிறகு எனது முதல் மனைவியார் திரு. நாகம்மையாரும் பிறகு நான் வெளியே வந்தவுடன் எனது தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளும் மற்றும் சிலரும் வந்து நாடெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தார்கள். நான் விடுதலை ஆகிவந்து அதேமாதிரி மறுபடியும் திட்டம் போட்டேன்.
கிளர்ச்சிக்குப் பெருத்த ஆதரவு
நான் வெளியே வருவதற்குள் இந்தக் கிளர்ச்சிக்கு ஏராளமான அளவில் ஆதரவு பெருகிவிட்டது; மளமளவென்று ஆட்களும் வந்துசேர ஆரம்பித்தனர். ஏராளமான பேர்கள் பல பகுதியிலும் சென்று சுற்றுப்பயணம் செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். எதிரிகளும் அடிதடி காலித்தனம், கலவரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு இதை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டுமென்று பலவித முயற்சிகளும் செய்து பார்த்தார்கள்.
ஆனால், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே இருந்தது! வெளிநாடுகளிலிருந்து மலையாளிகளும், ஜாதிக்கொடுமை என்பதைக் கண்டு மனம் துடித்து அதற்கு தங்கள் எதிர்ப்பையும் ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து செய்யப்படும் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவையும் காட்டும் வண்ணம் தினம் ரூ.50, 60, 100 என்று மணியார்டர் அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.
பெரியபந்தல் போட்டு தினசரி போராட்ட வீரர்கள் முகாம் செய்திருந்த வீட்டில் 200-300 பேர் சாப்பிடுவார்கள். தேங்காயும் மற்ற காய்கறிகளும் மலைமலையாகக் குவிந்து கிடக்கும். பெரிய கல்யாணவீடு மாதிரி காரியங்கள் நடைபெறும்!
பார்ப்பனர் நடுங்கிவிட்டனர்
திரு. இராஜகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். நீ ஏன் நம்நாட்டை விட்டு இன்னொரு நாட்டிலேயே போய் ரகளை செய்கிறாய்? அது சரியல்ல, அதைவிட்டுவிட்டு நீ இங்கு வந்து விட்டுவிட்டுச் சென்ற வேலைகளைக் கவனி என்று எழுதினார். அப்போது இருந்த எஸ்.சீனிவாசய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்தார்; வரச் சொன்னார். அதே மாதிரி பத்திரிகையிலேயும் எழுதினார்கள். ஆனால் இதற்குள் சத்தியாகிரக ஆசிரமத்தில் 1000 பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக்கிரக பஜனையும் தொண்டர்கள் ஊர்வலமும் நடந்தது; உணர்ச்சி வலுத்துவிட்டது.
பஞ்சாபியர் ஆதரவு
பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்தா என்பவர் ஒரு அப்பீல் போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20-30 ஆட்களையும் இரண்டாயிரம் ரூபாயும் கையிலெடுத்துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந்தார்கள். தாங்கள் சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொள்ளும் ஆதரவு தருவதற்காக. உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாம் சீக்கியர்கள் வந்து இந்து மதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்திக்கு எழுதினார்கள்.
காந்தியார் எதிர்த்தது
உடனே அதன் பேரில் காந்தியார் துலுக்கன், கிறிஸ்துவன், சீக்கியன் ஆகிய பிறமதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று எழுதிவிட்டார்கள்.
காந்தி எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாயபு, கிறிஸ்துவன் எல்லாம் போய் விட்டார்கள். அதுபோலவே தீவிரமாக இதில் ஈடுபட்டு முன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசஃப் ஜார்ஜூக்கும் இராஜகோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். “இந்து மதசார்புள்ள இந்தக் காரியத்தில் நீ சேர்ந்திருப்பது தப்பு” என்றார்.
போரை நீடிக்க எங்கள் உறுதி
அதை ஜோசஃப் ஜார்ஜ் அவர்கள் லட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார்; “நான் என் சுயமரியாதையை விட்டுவிட்டு இருக்கமாட்டேன். வேண்டுமானால் என்னை விலக்கிவிடுங்கள்” என்றார் தற்போதைய நாகர்கோவில் பயோனீர் டிரான்ஸ் போர்டைச் சேர்ந்த சேவு என்பவரும் அண்மையில் காலஞ்சென்ற டாக்டர் எம்.இ.நாயுடு (திரு எம்.எம்பெருமாள் நாயுடு அவர்கள் இந்தப் பேச்சுக்கு முதல்நாள் இரவு நாகர்கோவிலில் காலமானார். பிறகு தந்தை பெரியார் சென்று துக்கம் விசாரித்தார் என்பதை வாசகர்கட்கு நினைவூட்டுகிறோம்) அவர்களும் என்னுடனேயே இருந்து தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதை விட்டுப் போகமாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்கள் என்றாலும், காந்தி சத்தியாக்கிரகத்திற்கு விரோதமாக எழுதி பணத்தையும் ஆளையும் தடுத்து விடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.
காந்தியார் எதிர்த்தும் போர் தொடர்ந்தது
அந்தச் சமயம் சாமி சித்தானந்தா அவர்கள் வைக்கம் வந்துதான் பணத்திற்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தி கட்டளைக்கு விரோதமாகவே சத்தியாக்கிரகம் நடந்து வந்தது.
இதற்கிடையிலே நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. எங்கள் போராட்டத்திற்கு பெரிய மரியாதையையும் செல்வாக்கையும் தேடிக் கொடுத்துவிட்டது. இந்த காந்தி கட்டளை. இந்த சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6 மாதக் கடினக்காவல் விதித்து ஜெயிலில் போட்டுவிட்டார். பிறகு சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலிலே இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்களும் சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு சத்ருசங்காரயாகம் என்ற ஒன்றை வெகுதடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். ஒரு நாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டுச்சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன். என்ன சேதி இப்படி வெடிச் சத்தம் கேட்கிறது? இந்தப்பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான்; “மகாராஜாவுக்கு உடம்பு சவுக்கியமில்லாமல் இருந்து மகாராஜா நேற்று இராத்திரி திருநாடு எழுந்துவிட்டார்” என்றான்.
அதாவது இராஜா செத்துப்போனார் என்று சொன்னான். அவ்வளவுதான் மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு ஜெயிலுக்குள்ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திருப்பி மகாராஜாவைக் கொன்றுவிட்டது என்றும் அந்த யாகம் சத்தியாக்கிரகக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் ராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவர ஆரம்பித்தது.
இராணியின் ராஜிமுயற்சியும் பார்ப்பனர் சூதும்
இராணியும் கூப்பிட்டு எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன், அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் என்னிடத்தில் நேரே இராணி பேசக்கூடாது என்று கருதி, திரு. இராஜ கோபாலாச்சாரிக்கு கடிதம் எழுதினார். இராஜகோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் இராணி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும் புகழும் வந்துவிடுமே! அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, காந்தியாருக்கே அந்த வாய்ப்பு அளித்து காந்தியின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக் காட்டவேண்டுமென்று தந்திரம் செய்து காந்திக்குக் கடிதம் எழுதினார். எனக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை; எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்; நமக்கு பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக்கொண்டேன்.
சமரசப் பேச்சு
காந்தியும் புறப்பட்டு வந்தார். இராணியோடு காந்தி பேசினார் (இப்படி இந்த சத்தியாக்கிரகம் நல்லபடி வேரூன்றி வெற்றி நிலைக்கு வந்தவுடன் பார்ப்பனர்கள் காந்தியை இதில் புகுத்தினார்கள்.)
இராணி காந்தியோடு பேசியபோது இராணி தெரிவித்தார்கள்; ‘நாங்கள் ரோடுகளைத் திறந்து விட்டுவிடுகிறோம். ஆனால் அதைவிட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமைவேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம்’ என்றார்கள். உடனே காந்தி டீபியில் தங்கி இருந்த என்னிடத்தில் வந்து இராணி சொன்னதைச் சொல்லி “என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டுவிடுவது நல்லது” என்றார். நான் சொன்னேன்; Public ரோடு திறந்து விடுவது சரி; ஆனால் அதை வைத்துக்கொண்டு கோயிலைத் திறந்துவிடும்படி கேட்கமாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும், எனது இலட்சியம் அதுதானே (கோயில் நுழைவு)? அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் இராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள் ‘இப்போதைக்கு இம்மாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது. கொஞ்சநாள் அதுபற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால் தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப் படலாம்’ என்று சொல்லுங்கள்” என்று சொன்னேன்.
அதை காந்தி இராணியிடம் சொன்னவுடன் இராணியார் ரோட்டில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று சொல்லி பொது ரோடாக ஆக்கினார்கள்.
(8-1-1959 அன்று கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களிலும் சுற்றுப் பயணத்தின்போது பெரியார் ஈ.வெ.ரா ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை'8-1-1959)
No comments:
Post a Comment