கவிஞர் கலி.பூங்குன்றன்
கேரள மாநிலத்தின்
கதை கேளீர்! கேளீர்!
வைக்கம் வீதியிலே
வைக்கத்தப்பன் கோயிலாம்
கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளாம்
‘கீழ்மட்ட’ ஜாதியினரின்
கால்பட்ட இடமெல்லாம்
கடவுளுக்கு ஆகாதாம்! - இது
ஆரியப் பார்ப்பனர்களின்
அடாவடித்தனம்!
அனைவரும் ஆண்டவனின்
அரும் புதல்வர்கள் என்றால்
அதில் உயர்வு தாழ்வு எனும்
புற்று நோய் குதித்தது எப்படி?
வெடித்தது போராட்டம் என்றாலும்
வெற்றிக்கோ வெகுதூரம்!
நம்பூதிரிகளாம் நாகப்பாம்பு
நர்த்தனம் ஆடியது!
அதன் உயிரைக் குடிக்கத்
தேவைப்பட்டது ஒரு கைத்தடி!
தேடித் தேடி பார்த்தனர்
கடைசியில் கிடைத்தது ஈரோட்டில்!
களம் சூடு கண்டது
காற்றும் மழையுமாய் வீசியது
‘தீண்டாமைக் கழுத்தில்
வை கத்தி!’ என்ற குரல் கேட்டது
வைக்கத்து வீதியெல்லாம்!
‘யார் இந்த மனிதன்?’
வினாக் கணைகளை
வேகவேகமாக வீசுகின்றானே
வக்கணையாகப் பேசுகிறானே
இடைஇடையே
‘வெடிகுண்டை அல்லவா
போடுகின்றான்!
விதண்டாவாதி என்று
நினைத்தோம் -
ஆசாமி பேச்சில்
ஆவேசம் கொப்பளிக்கிறதே!
சிந்தனை நரம்பினை
மீட்டுகிறதே!
உணர்ச்சித் தீயை
அல்லவா ஊட்டுகிறது!
கேட்டோரின் கண்களில் எல்லாம்
கோபப் பழமாய் மாறுகிறது
இவனை விட்டுவைத்தால்
ஆபத்து! ஆபத்து!
சிறைக் கொட்டடியில்
சிங்கத்தை அடைத்த சிறுநரிகள்!
யார் இந்த இரு பெண்மணிகள்?
அந்த ஈ.வெ.ரா.வின்
மனைவியும், தங்கையுமாம்!
பொம்மனாட்டிகளா இவர்கள்?
புலியாக சீறுகிறார்களே!
நம்பூதிரிக் கூட்டத்தின்
நாடி நரம்பெல்லாம் சில்லிட்டன.
சத்துரு சம்ஹார யாகம் நடத்தி
ஆசாமியை சாகடிக்க
வேண்டியதுதான்
மடி சஞ்சிகள் முனைந்தன!
அந்தோ பரிதாபம்
மன்னன் அல்லவா
மண்டையைப் போட்டான்!
யாகம் திருப்பி அடித்து
விட்டதோ!
கலங்கியது காகப்பட்டர் கூட்டம்
கடைசியில் வழிக்கு வந்தார் ராணி!
வைக்கம் வீதிகளில் - புது
வைபவம்!
உரிமை மறுக்கப்பட்ட
‘கீழ் ஜாதி’ மக்களின்
கால்கள் எல்லாம்
பட்டாளத்து வீர நடை போட்டன!
வைக்கம் வீரர் வாழ்க!
வானமும் பூமியும் வாழ்த்தின!
நட்சத்திரங்கள் வெற்றி
மாலை சூட்டின
மல்லாந்து படுத்திருந்த
மண்ணெல்லாம்
ஒரு முறை
புரண்டு படுத்தது!
வரலாறு பொன் வணக்கத்தை
நன்றித் தேனில் குழைத்துக்
கொடுத்தது!
ஆம்! இந்திய வரலாற்றில்
முதல் மானுட சுதந்திரப் போர்!
அதன் வெற்றி நாயகர்
தந்தை பெரியார்! பெரியார்!
வைக்கத்தின் நூற்றாண்டு விழா
தொடங்கி விட்டது.
அயோத்தியில் ராமன் கோயில் திறப்பு
அய்யா பெரியாரின்
வைக்கம் நூற்றாண்டின் பிறப்பு!
ராமனா? ராமசாமியா?
பார்ப்போம் ஒரு கை!
வாழ்க வைக்கம் வீரர்
வீழ்க சனாதனம்!
No comments:
Post a Comment