கோவை,ஏப்.29- கோவையில் நிறுவப்பட்டுள்ள வ.உ.சி.யின் 7 அடி உயர முழு உருவச்சிலையை விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செக்கு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
அவரது தியாகத்தை நினைவு கூரும் வகையில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்கு, கோவையில் முழு உருவச் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் அவிநாசி சாலையை ஒட்டிய இடத்தில் 50 அடி அகலம், 45 அடி நீளமுள்ள இடம் சிலை அமைக்க ஒதுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிலை அமைக்கும் பணி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘ரூ.40 லட்சம் மதிப்பில் பொதுப்பணித் துறையின் சார்பில், வ.உ.சி-க்கு முழு உருவ உலோகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 4 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது 7 அடி உயரத்தில் பீடம் அமைத்து, 7 அடி உயரத்துக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ராமாவரம் பகுதியில் உள்ள சிலை தயாரிக்கும் மய்யத்தில் இருந்து உலோகத்தால் இச்சிலை செய்யப்பட்டு, கோவைக்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. மேடை பகுதியில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ திறந்துவைப்பார்’’ என்றனர்.
அமித்ஷா, சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் போன்றோர் கலவரத்தை தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடுகின்றனர் : காங்கிரஸ் புகார்
புதுடில்லி, ஏப்.29 காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் குழு நேற்று (28.4.2023) தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்தித்தது. அவர்களி டம் ஒரு கோரிக்கை மனு அளித்தது. அபிஷேக் சிங்வி, பவன்குமார் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் அக்குழுவில் இடம்பெற்று இருந்தனர்.
மனுவில், கருநாடக தேர்தலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரம் செய்தபோது, தேர்தல் ஆதாயம் பெறுவதற்காக சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாகவும், அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர், அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள் ளிட்ட பா.ஜனதா தலைவர்கள், ஆட்சேபகரமான, பாரபட்சமான, மதவாத கருத்துகளை பேசி உள்ளனர். அதுபற்றி புகார் செய்துள்ளோம். அவர்கள் சிறுபான்மை யினருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, அவர்கள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்குமாறு கேட்டுள்ளோம். சோனியாகாந்தியை 'விஷக்கன்னி' என்று பா.ஜனதா பிரமுகர் ஒருவர் கூறியது தொடர்பாக, அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
வெறுப்புப் பேச்சு குறித்து உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
புதுடில்லி ஏப்.29 வெறுப் புணர்வைத் தூண்டும் வகை யில் பேசியது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜோசப், நாக ரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது.வெறுப்புப் பேச்சு தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை, நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, "வெறுப்புப் பேச்சு ஒரு கடுமையான குற்றம். இது தொடர்பாக புகார் இல்லாவிட்டாலும் மாநில அரசுகள் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். வழக்குகளை பதிவு செய்வதில் தாமதம் செய்வது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்.
வெறுப்புப் பேச்சு பேசுபவரின் மதத்தைக் கருத்தில் கொள்ளாமல், அவருக்கு எதிராக வழக்கு பதிய வேண்டும். அரசியல் சாசனத்தின் முகப்பு உரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். வெறுப்புப் பேச்சு நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை பாதிக்கும். குறிப்பாக சிறுபான்மையினரிடையே, இது கவலை யையும், அச்சத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இதைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அதிகாரியை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும்" என தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 12 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment