மக்கள் கடல் பொங்கிய மகத்தான மாநாடு தமிழர் தலைவரின் 40 நாள் பரப்புரை நிறைவு விழா கடலூரில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

மக்கள் கடல் பொங்கிய மகத்தான மாநாடு தமிழர் தலைவரின் 40 நாள் பரப்புரை நிறைவு விழா கடலூரில்!

வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடுகிற நேரத்தில்,  இன்னும் இரட்டைக் குவளைகளா?

ஜாதி ஒழிப்புக்கு சாகத் தயார்! தமிழர் தலைவர் சங்கநாதம்!

கடலூர், ஏப்.1 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழாவில், தமிழர் தலைவர் ஜாதியை ஒழிக்க முன்வருமாறு அழைப்பு விடுத்து உரையாற்றினார். ஜாதியை ஒழிக்க சாகத் தயார் என்று சங்கநாதம் செய்தார். மாநாடு போல் நடந்த நிகழ்வில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

’வைக்கம்’ மனித உரிமைப் போர் 

பற்றிய காட்சிகள்!

தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கர் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதியில், பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் தொடங்கி, பெரியாரின் தொண்டருக்குத் தொண்டரான தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த கடலூரில், 2023 மார்ச் 31 இல் நிறைவு பெறும் வண்ணம் திட்டமிடப்பட்டிருந்த, சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரை பெரும் பயணம் திட்டமிட்டபடி மிகச்சரியாக தொடங்கியது. 30 நாட்களில் 57 ஆவது கூட்டமாக தமிழ்நாடு முழுவதுமாக 6,478 கி.மீ. தொலைவை சாலை மார்க்கமாகவே கடந்து வந்து, இந்த இறுதி நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதிலும் எழுச்சித்தமிழர் பேசி முடித்ததும், ஆசிரியர் விறுவிறுவென்று ஒலிவாங்கியிடம் வந்து, ”100 ஆண்டுகளுக்கு முன்னால் ஜாதி ஒழிப்புக்காக வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய மனித உரிமைப் போர் பற்றி பெரியார் திரைப்படக் காட்சியையும், பார்ப்பனரும், கர்நாடக சங்கீத கலைஞருமான டி.எம்.கிருஷ்ணா பெரியார் பற்றிப் பாடிய பாடலையும் கண்டு, கேட்டு மகிழுங்கள். அதன் பிறகு நிகழ்ச்சி தொடரும்” என்று கூறிவிட்டு அதே உற்சாகத்துடன் இருக்கைக்குத் திரும்பினார். அதைத் தொடர்ந்து இரண்டு காணொலிகளும் திரையிடப்பட்டன. கட்டுக்கடங்காமல் திரண்டிருந்த மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இரண்டு காணொலிகளையும் கவனித்தனர். முடிந்ததும் நிகழ்ச்சி தொடர்ந்து.

கடலூரில் தமிழர் தலைவர்!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடித் திடலில் 31-03-2023 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ம.எழிலேந்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் சா.தாமோதரன், மாநகர தலைவர் தென்.சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், பொதுக்குழு உறுப்பினர் கோ.புத்தன், மண்டல இளைஞரணி செயலாளர் நா.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் அதிகாரம் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் இராஜூ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொறுப்பாளர் தி.கண்ணன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன், தி.மு.க.தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி, சி.பி.அய். பொறுப்பாளர் குளோப், ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை.வைகோ, திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்,  தமிழ்நாடு அரசு வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரசு கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆகியோர் உரையாற்றிய பின்னர் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். 

முன்னதாக இந்த பயணக் குழுவில் பங்கேற்ற கொள்கை பயணத் தோழர்களுக்கு, பரப்புரை குழு ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் கழகப் பொதுச்செயலாளருமான வீ.அன்புராஜ் அவர்கள் சான்றிதழையும், நினைவுப் பரிசையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து, ”கடலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், இந்த 30 நாள் சுற்றுப்பயணத்தில் பயன்படுத்தப்பட்ட வண்டிகளுக்கான டீசல் செலவுக்கென்று ரூபாய் 1 லட்சம் ரூபாய் நிதியை, மாவட்ட கழக நிர்வாகிகள், மண்டல கழக நிர்வாகிகள் சேர்ந்து தமிழர் தலைவரிடம் வழங்குவார்கள்” என்று பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அறிவிக்க, அதேபோல் கடலூர் மாவட்ட, மண்டல கழகத் தோழர்கள் இரண்டு பக்கமும் அணிவகுத்து நின்று ஆசிரியரிடம் நிதியை ஒப்படைத்தார்கள்.

’மிஸ்டு’ கால் கட்சியா நம்மை அசைத்து விடும்?

ஆசிரியர், “என்னிடம் நிறைவு விழா என்றுதான் சொன்னார்கள். ஆனால், மாநாடு என்றே போட்டிருக்கிறார்கள். மக்கள் திரளைப் பார்க்கும் போது ஆம், இது மாநாடு தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது” என்று தொடக்கத்திலேயே மக்களிடம் ஆரவாரத்தை உண்டாக்கினார். அடுத்து, ”30 ஆம் நாள் 57 ஆம் கூட்டம். ஆனாலும் களைப்பு இல்லாமல் பேசக்கூடிய அரிய வாய்ப்பு” என்று அனைவரும் ’அவரது வயதைப் பற்றி வியந்து பேசிக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவது போல் உற்சாகத்துடன் பேசினார். தொடர்ந்து, “காரணம் இந்த மேடையிலே இருக்கின்ற தலைவர்கள் தருகின்ற ஆக்கம்!” என்றார். மேலும், ”மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று என்றார் வள்ளலார்” என்று அருட்பெரும் கருணையை துணைக்கழைத்து, “இது மெல்லிய பூங்காற்றல்ல, சூறாவளியாய் வருகின்ற எதிர்ப்புகளை எல்லாம் ஆற்றலோடு சந்திக்கின்ற தலைவர்கள் இந்த மேடையிலே அமர்ந்திருக்கிறார்கள். அதனால் நான் உற்சாகமாக இருக்கின்றேன்” என்று தொடர்ந்தார். அதே போல, "வாழ்நாள் முழுவதும் கொள்கைக்காக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கருஞ்சிறுத்தைகள்” என்றதும், எழுச்சித் தமிழரின் சிறுத்தைகள் ஆரவாரம் செய்தனர்.  ”காட்டிலொரு முயற்குட்டி துள்ளக்கூடும் கருஞ்சிறுத்தை கண் விழித்தால் தெரியும் சேதி!” என்று கருஞ்சிறுத்தைகளைப் பற்றி புரட்சிக்கவிஞர் பாடியதை நினைவுபடுத்தி சிறுத்தைகளை மேலும் உற்சாகப்படுத்தினார். எழுச்சித் தமிழர் பேசியதைக் குறிப்பிட்டு, “அவர் பேசியதை நான் வழிமொழியலாம் என்கிற அளவுக்கு நான் பேச நினைத்ததை பேசிவிட்டார். அதனால்தான் சிறுத்தைகள் மூன்றாவது குழல் துப்பாக்கி என்று சொல்கிறோம்” என்று ஆரவாரமும், கைதட்டல்களும் ஒருசேரப் பறக்கப் பாராட்டிவிட்டு, திராவிடர் கழகத்தின் அசையும், அசையா சொத்துகள் பற்றிப் பாடம் எடுத்தார். "இந்த கொள்கை என்பது ஆயிரம் காலத்துப் பயிர். இதை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது! எந்தக் கொம்பனாலேயே அசைத்துவிட முடியாது என்கிற போது, ’மிஸ்டு’ கால் கட்சியா அசைந்து விடுவதற்கு?" என்றதும் சட்டென்று புரிந்து கொண்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஆரவாரித்து, கரவொலி எழுப்பியும் அந்த இடத்தையே எழுச்சி பெற வைத்துவிட்டனர்.

ஜாதியின் வேரை வெட்டுகின்ற பணியில் உறுதுணையாக இருங்கள்!

மிகுந்த உற்சாகத்துடன் இருந்த ஆசிரியர், தலைவர்கள் பேசும் போது ஒன்றுபோல தன்னுடைய வயதைக் குறித்துப் பேசியதை சுட்டிக்காட்டி, “சும்மா, சும்மா 90 வயசுன்னு சொல்லாதீங்க! சொன்னா ஏமாறுவது நீங்கதான். நானல்ல” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, ”மனிதனுக்கு மூன்று விதமான வயது உண்டு. ஒன்று பயாலஜிக்கல் வயது! இது பிறந்த தேதியை அடிப்படையாகக் கொள்வது, இரண்டாவது பிசியாலஜிக்கல் வயது! இது உடலின் தன்மையைப் பொறுத்தது!” என்று இரண்டை மட்டும் குறிப்பிட்டுவிட்டு மூன்றாவதைச் சொல்லாமல், "மறுபடியும், நான் இவ்வளவு உற்சாகமாக இருப்பதற்கு என்னுடன் இருக்கின்ற கொள்கைத் தங்கங்கள்தான்” என்று சொன்னார். தொடர்ந்து, வைக்கம் போராட்டம் பற்றி பேசத் தொடங்கி, “100 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வைக்கம் போராட்டம் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?” என்றொரு கேள்வியைக் கேட்டுவிட்டு, “இன்னும் ஜாதி இருக்கின்றதே? இன்னும் இரட்டைக் குவளை முறை இருக்கின்றதே?” என்று கேள்விக்கு பதிலும் சொன்னார். மக்கள் திரளில் குறிப்பிடத்தக்க அளவில் சிறுத்தைகள் இருந்ததால், அவர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்தார். அதாவது, “எழுச்சித் தமிழரை உற்சாகப்படுத்தினால் போதாது, ஜாதியின் வேரை வெட்டுகின்ற பணியில் உயிரையும் தந்து பணியாற்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த ஜாதி. “எல்லா போதைகளைக் காட்டிலும் ஜாதி, மத பேத போதை தான் கொடுமையானது” என்று சொல்லி, அதற்கு ஆணவக் கொலைகளை எடுத்துக் காட்டி பேசினார். பேச்சின் போக்கில், இப்போது இருக்கிற திராவிட மாடல் அரசை நடத்துகின்ற சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியாரின் பிறந்த நாளை ’சமூக நீதி நாள்’ என்றும், அம்பேத்கர் பிறந்த நாளை ’சமத்துவ நாள்’ என்றும், வள்ளலார் பிறந்த நாளை ’கருணை நாள்’ என்றும் அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டத் தவறவில்லை ஆசிரியர்! ”இவ்வளவு பக்குவப்படுத்தியும் இன்னும் ஜாதிப்பிரச்சனை தீரவில்லை” என்ற தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இன்னும் எத்தனை காலத்துக்கு 

ஜாதியை அனுமதிப்பது?

கேரளாவில் தமிழ்நாட்டை விட மோசமாக இருந்த நிலைமைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். அங்குத் தீண்டாமை என்பதையும் தாண்டி பாராமை இருந்ததையும், நெருங்காமை இருந்ததையும் ஆதாரத்துடன் எடுத்தியம்பியபின், “இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஜாதிக்கொடுமையை அனுமதிக்கப் போகிறோம்?” என்று வேதனைப்பட்டார். "ஜாதிப் பெருமை பேசுகிறவர்களை மனித விரோதிகளாகக் கருதுங்கள்” என்று கருத்தினை எடுத்துவைத்தார். இன்னும் புரியும் படியாக சொல்ல வேண்டும் என்கிற வேட்கையில், “சுண்ணாம்புக்கும், வெண்ணெய்க்கும், பச்சைக் கொடிக்கும், பச்சைப் பாம்புக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறி, எப்படியாவது ஜாதி ஒழிப்பில் மய்யம் கொள்ளுங்கள் என்கிற தனது தவிப்பை மக்களிடம் எடுத்துரைத்தார்.” ஜாதியை ஒழிக்க சாகத் தயாராகுங்கள் - தயாராவோம்!" என்று சங்கநாதம் செய்தார். எல்லா இடங்களிலும் மக்கள் நல்ல ஆதரவைக் காட்டுகிறார்கள். ஆகவே ஜாதியை ஒழிக்க முன்வாருங்கள். அது ஒழியும் வரையிலும்,  சமூக நீதியைப் பாதுகாருங்கள்! ஜாதி ஒழியும் வரையில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்கட்டும்” என்று முழுக்க முழுக்க ஜாதி ஒழிப்புப் பற்றியே பேசிய ஆசிரியர், தொடக்கத்தில் பேசிய மூன்றுவிதமான வயதைப் பற்றி மறுபடியும் பேசினார். ஆசிரியரின் பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த எழுச்சித் தமிழர், “நான் கூட மூன்றாவது வயதைப் பற்றி நீங்கள் சொல்லவில்லையே” என்று எண்ணியிருந்தேன்” என்று ஆசிரியரிடம் குறிப்பிட்டார். ஆசிரியர் மிகுந்த உற்சாகத்துடன், “எனது மாணவர் மிகச்சரியாக கவனித்திருக்கிறார்” என்று குதூகலித்து விட்டு, “நான் மறக்கவில்லை. முடியும் போது சொன்னால்தான் மனதில் தங்கும் என்பதற்காக விட்டுவைத்தேன்” என்ற முன்னோட்டத்துடன், “பயாலாஜிக்கல், பிசியாலாஜிக்கல் இரண்டைச் சொன்னேன். மூன்றாவது சைக்காலாஜிக்கல் வயது! இது மனதை பொறுத்தது! நம்மால் முடியும். நாம் இளைஞர்தான்! ஆகவே வயதை எண்ணி ஒதுங்காதீர்கள். இளைஞர்கள் ரொம்பபேரு வயசானவங்களா இருக்காங்க. எனவே எல்லோரும் இளைஞர்களாக மாறுவோம்! எல்லோரும் இணைந்து ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், வி.சி.க. அமைப்பு செயலாளர் திருமார்பன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் சந்திரசேகர், சி.பி.அய். மாவட்ட செயலாளர் துரை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் இராமலிங்கம், வி.சி.க. மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், சுப்பிரமணியம், கார்த்திகேயன், ஜெயசுந்தரம், திராவிடர் கழக அமைப்பு செயலாளர்கள் மதுரை வே.செல்வம், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், கழக சொற்பொழிவாளர்கள் இரா.பெரியார் செல்வன், புவனகிரி யாழ்.திலீபன், புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி மண்டல தலைவர் வே.அன்பரசன் , புதுச்சேரி மண்டல இளைஞரணி தலைவர் தி.இராசா, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரைப் பயணத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment