ஜெகதாப்பட்டினம் - செய்திக்கட்டுரை பகுதி - 1 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 17, 2023

ஜெகதாப்பட்டினம் - செய்திக்கட்டுரை பகுதி - 1

  ஜெகதாப்பட்டினத்தில் கழகத்திற்கும், மீனவப் பெருமக்களுக்கும் 

புதிய வரலாற்றை துவக்கி வைத்திருக்கிறார், தமிழர் தலைவர்!

’யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!’ என்ற பழமொழியில், ’யானைக்கு’ பதில் ’ஜெகதாப்பட்டினம்’ என்பதைச் சேர்த்து, ‘ஜெகதாப்பட்டினம் வரும் பின்னே! கழகக் கொடிகள் வரும் முன்னே!’ என்று மாற்றிக் கொள்ளலாம் போலிருந்தது. ’தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு’ ஜெகதாப்பட்டினத்தில்தானே? பின்னே, கொடிகள் கோட்டைப்பட்டினத்தில் பறக்கிறதே? என்ற கேள்வி - காண்போருக்கு இயல்பாக எழுகிறது. அதுவும் எப்படிப்பட்ட கொடிகள்? கடற்காற்றில் படபடத்துப் பறக்கின்ற கொடிகள்! பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகள்! பொதுவுடைமைத் தத்துவத்தை உட் கருவாகக் கொண்ட கருப்பு, சிவப்பு இரு வண்ணக் கொடிகள்! வெறும் கொடிகள் மட்டுமல்ல, தனீஷ் தங்கும் விடுதி அருகில் இருந்து ஜெக தாப்பட்டினம் தொடங்குகிறது. அங்குதான் ஜெகதாப் பட்டினம் உங்களை வரவேற்கிறது என்ற பலகையும் இருக்கிறது. பலகை மட்டுமல்ல, திராவிடர் கழக இளைஞர ணியினர் கைவண்ணத்தில், 5 கொடிகளுக்கு ஒன்றாக ஆளுயர பதாகைகளில் ஆசிரியரே நம்மை வரவேற்கிறார். 

அதிராம்பட்டினம், கட்டுமாவடி, கிருஷ்ணாஜி பட்டினம், அம்மா பட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், சம்மைப் பட்டினம் என்கிற எஸ்.பி.பட்டினம், தொண்டி, தேவிப்பட்டினம் ஆகிய பத்து ஊர்களும், ‘எங்கள் குறைகளை தீர்க்க வருகை தரும் ஆசிரியரே, திராவிடர்களின் தலைவரே வாருங்கள்! வாருங்கள்!, என்று சுவரெழுத்துகளாலும், சுவரொட்டிகளாலும், பதாகை களாலும் தமிழர் தலைவரை வரவேற்கக் காத்திருக்க, ஆசிரியரோ, மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கிறார்! 

என்னவொரு ஆனந்தமான, உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்குகின்ற முரண் பாருங்கள்! அதுமட்டுமல்ல,  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் சார்பில், இரட்டைக் குழல் துப்பாக்கியாம் தி.மு.க. ஒரு பக்கம், ஆசிரியரையும், திராவிட மாடலின் அமைச்சர் பெருமக்களான சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா இரா. இராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரான சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரையும் வரவேற்று வைத்துள்ள பதாகைகளும் பளபளத்தன! 

திருவிழாக் கோலம் பூண்ட ஜெகதாப்பட்டினம்!

மொத்தத்தில் ஜெகதாப்பட்டினம் மாநாட்டுத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது! ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்கத்திற்கு நடைபெறும் தேர்தலை அன்றைக்கே வைத்து புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து, புதிய பொறுப்பாளர்களுடன் மாநாட்டுக்கு புத்துணர்வோடு கலந்துகொள்ள மீனவர் பிரதிநிதிகள் திட்டமிட்டிருந்ததால், ஆங்காங்கே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் மீனவர் சங்கத்தின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்த காட்சியும், மற்றவர்கள் ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன், அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காட்சியும், அந்த மாநாட்டுத் திருவிழாக் கோலத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டி ருந்தன. இந்த மாநாட்டுக்கு இன்னுமொரு சிறப்பு, கோட் டைப் பட்டினத்திலிருந்ன. ஜெகதாப்பட்டினம் மாநாட்டுத் திடல் வரை, அதாவது சிறீ ரேணுகாதேவி கோயில் வரை, சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு திராவிடர் கழகக் கொடிகள் பறப்பது போலவே, அதே சாலையில் எதிர்ப்புறம் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு தி.மு.க.வின் கொடி களும் பறந்து கொண்டிருந்தன.  ஆக, மாநாட்டுப்பந்தலிலி ருந்து இடமும், வலமுமாக சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு மாநாட்டுக் கோலம் இரட்டைக் குழல்களின் கொடிகள் கட்டப்பட்டு சுற்றுவட்டார மீனவர்களையும், மக்களையும் பெரிதும் ஈர்த்துக் கொண்டிருந்தன.

தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாடு நினைவுக் கல்வெட்டு!

இவ்வளவையும் தாண்டி இதில் இன்னுமொரு அரிய வரலாற்றுத் தகவல், ஆசிரியர் அதிராம்பட்டினம், கட்டு மாவடி, கிருஷ்ணாஜி பட்டினம், அம்மா பட்டினம், கோட் டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், சம்மைப் பட்டினம் என்கிற எஸ்.பி.பட்டினம், தொண்டி, தேவிபட் டினம் ஆகிய பத்து ஊர்களுக்கும் 80 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. 

இப்படிப்பட்ட சூழலில் தான், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார் அவர்களின் ’பெரியார் மளிகை’க் கடையில், கழகக் கொடியை ஏற்றுவதற்கும், ’தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாடு’ நினைவுக் கல்வெட்டைத் திறப்பதற்கும் ஆசிரியர் வரப்போகிறார் என்ற செய்தி அங்கே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சரியாக 4.30 மணிக்கு சரவெடிகளும், மேள, தாளங்களும் முழங்க, ஆசிரியர் வருகை தந்தார்.  மயிர்க்கூச்செறியும் ஒலி முழக்கங்களோடு ஆசிரியர் கழகக் கொடிகளை ஏற்றி வைத்தும், கல்வெட்டைத் திறந்து வைத்தும் ஜெகதாப் பட்டினத்தில் கழகத்தின், மீனவர் நலனில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தார். 

கடந்த செப்டம்பரில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலை மையில் ச.குமார் - சுவாதி திருமணம் இதே ஜெகதாப் பட்டினத்தில் நடைபெற்றது.  அந்தத் திருமணத்தில்தான் இந்த மாநாட்டை அறிவித்தார். இதற்காக கடந்த ஒரு மாதமாக திருவையாறு ஓவியர் புகழேந்தி, மாநில இளை ஞரணித் தலைவர் மகாராஜா துணையுடன் மேற்குறிப்பிட் டிருக்கும் பத்து ஊர்களில் சுவரெழுத்துகளை எழுதி யிருந்தனர்.  இதே பத்து ஊர்களிலும் ச.குமார், ஆ. யோவான் குமார், ம.செல்வமணி, ஆத்தூர் அ.சுரேஷ், பீ.அறிவுச்செல்வன், மன்னார்குடி பி.அலெக்சாண்டர், க.விமல்ராஜ், உ.கதிர்வேல், ர.ஆகாஷ், சு.ரித்திக்ரோசன், ஆ.வில்லியம் ஆகியோர் மாநாட்டுக்கான நிதி திரட்டும் பணிகளில்  ஈடுபட்டு மாநாடு குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

தமிழர் தலைவரை ஒருங்கிணைந்து வரவேற்ற மீனவப் பெருமக்கள்!

பகுத்தறிவு மளிகைக் கடையின் உரிமையாளரும், மாநில இளைஞரணியின் துணைச் செயலாளருமான ச. குமார் தலைமையில் அவரது இணையர் சுவாதி, குமாரின் தாய் செபாஸ்டியம்மாள், திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி ஆகியோர் முன்னி லையில் ஆசிரியர் வரவேற்கப்பட்டார், சுவாதி ஆசிரிய ருக்கு ஆடை அணிவித்து மரியாதை செய்தார்.  இருபால் சிறுவர்களும், பெரியவர்களும் ஆசிரியரைக் காண முட்டி, மோதி முயன்றனர். முடியவில்லை. சின்னஞ்சிறார்கள் ஆசிரியரைக் காண தவித்ததைக் கண்ட கழகத் தோழர்கள், அவர்களை மட்டும் அழைத்துச் சென்று ஆசிரியரை சந்திக்க வைத்ததோடல்லாமல், ஒரு குழு ஒளி படத்தையும் எடுக்க வைத்து மகிழ்வித்தனர். 

இன்னொரு பக்கம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்கத்தின் மேனாள் தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் மோகன், பொருளாளர் செல்லத்துரை மற்றும் கணக்கர்களான மோகன் நாட்டார், செல்வம் செட்டி, தேசிங்கு ஆகியோரும், இன்னாள் தலைவர் உத்திராபதி, துணைத்தலைவர் மருது, பொருளாளர் செல்வம் மற்றும் கணக்கர்கள் செந்தில், மணிகண்டன் ஆகியோரும் இணைந்து வந்து ஆசிரியருக்கு ஆடை அணிவித்து மகிழ்ந்து, மகிழ்வித்தனர். 

அதோடு மட்டுமல்ல, மீனவர்கள் சங்கத்தின் பிரநிதிகளின் உற்சாகம், ’ஆசிரியரை தங்கள் சங்கக் கட்டடத்திற்கு வந்து செல்ல வேண்டும்’ என்று அன்புடன் கோரிக்கை வைக்கும் அளவுக்கு சென்றுவிட்டது! இதுபோன்ற மக்கள் கோரிக்கையை தட்டக் கூடியவரா ஆசிரியர்? உடனடியாக ஏற்றுக் கொண்டு சென்றார். உள்ளே அனைவரும் ஆசிரிய ருடன் ஒரு குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். 

மீனவர்களின் பரிதவிப்பு!

அந்த மகிழ்ச்சியிலும் உள்ளுக்குள் இருந்த மனப் புழுக்கம் காரணமாக ஒருவர் ஆசிரியரை அணுகி, ”அய்யா, 7 மீனவர்களை சிறைப் புடிச்சாங்க, வருகிற திங்கட்கிழமை (17-04-2023) 6 பேரை விடுதலை பண்ணப்போறாங்க. வானகிரி கிராமத்தைச் சேர்ந்த தில்லைக்காளியின் மகன் விஸ்வ லிங்கத்துக்கு மட்டும் 14 மாசம் சிறைத்தண்டனை குடுத்துட்டாங்க. அந்த கிராமமே அல்லோலகல்லோ லப்படுதுங்கய்யா, நீங்க சொல்லிதான்” என்று பரிதவிப்புடன் குறிப்பிட்டார். அவர் மேலும் பேச முனைய, ஆசிரியர், “எல்லாத்தையும் எழுதிக்கொடுங்க” என்று சொல்லி, அதை கவனிக்கச் சொல்லி விட்டு அனைவரிடமும் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துவிட்டு புறப்பட்டார். 

அவர்களிடம் பேசியதில், இலங்கை அரசின் அட்டூழி யத்தால், 1000 க்கும் மேற்பட்ட படகுகள் தொழிலுக்கு போயிருந்த நிலை மாறி, இன்று சில நூறு படகுகளே போய் வருகின்றன என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் 16 படகு களுக்கு தலா 5 லட்சம் நிவாரணம் கொடுத்தார். அதில் 8 படகுகளுக்குத்தான் நிவாரணம் அளிக்கப்பட்டிருக்கின்றன. மீதி இன்னமும் தரவில்லை என்றும், செல்லனேந்தல், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 87 படகுகள் இலங்கை வசம் உள்ளன. அவற்றை மீட்கவும், நிவாரணம் பெறவும் வேண்டும் என்றும், செல்லனேந்தல், ஜெகதாப்பட்டினத்தில் மீன் பிடித்தல் மூலம் நடக்கும் கோடிக்கணக்கான வரவு, செலவுகள் கோட்டைப் பட்டினம் வங்கி மூலம் நடக்கிறது. ஆகவே செல்லனேந்தலுக்கு தனியே ஒரு வங்கி வேண்டும் என்றும், ஜெகதாப்பட்டினம் துறைமுகம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், சீர் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இப்போதிருக்கும் முதலமைச்சர் இதற்காக 19 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார். 

விரைவில் பணிகளைத் துவக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள 7 மீனவர் கைதும், விடுத லையும் என்பதாக ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

கோடையிலும் குளிர்வித்த மாநாட்டுத் திடல்!

மாநாட்டுத் திடல் அமைந்திருக்கும் இடமும் சிறப்புக் குரியது தான். துவாரபாலகர்கள் போல, இடப்பக்கம் சிறீ ரேணுகாதேவி கோயிலும், வலப்பக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தீயணைப்பு நிலையமும் இருந்தன. அந்த சிறீ ரேணுகாதேவி கோயிலினுள்தான் மீனவர் சங்கத்தின் தேர்தல் அன்றே (14-04-2023) நடைபெற்றது. குறுகிய பாதையினுள் நுழைந்தால் உள்ளே விரிகிறது மாநாட்டுத்திடல்!

நண்பகலில் கோடை கொளுத்தினாலும், மாலை நேரத்தில் மாநாட்டுத் திடலின் வலப்பக்கம் இருந்த குளத்தில் நிறைந்திருந்த நீரால், வெப்பம் முற்றிலும் தணிந்து நல்ல காற்றும் வீசி மக்களை கோடையின் வெப்பம் கடுகளவும் தாக்காமல் செய்து, மாநாட்டை கண்டும், கேட்டும் அனுப விப்பதற்கு ஏதுவாக இருந்தது. முதலில் ஆசிரியர் மாநாட்டுத் திடலுக்கு வருகை தந்தார். 

அதைத் தொடர்ந்து, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆசிரியருக்கு வலப்பக்கமும், மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா இரா. ராதாகிருஷ்ணன் ஆசிரியருக்கு இடப் பக்கமும் அமர, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரான சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோரும் மேடைக்கு வந்தமர்ந் தனர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார் அனைவரையும் வரவேற்று மாநாட்டைத் தொடங்கி வைத்தார். உள்ளூர் மீனவப் பெருமக்களின் அந்த ஆறு கோரிக்கைகளையும் ஆசிரியர் எப்படி எதிரொலிக்கப் போகிறார் என்று மீனவப் பெருமக்கள் ஆவலுடன் காத் திருந்தனர். ஆசிரியர் அதை எப்படி கையாண்டார் என்பது தெரியுமா தோழர்களே...

-உடுமலை வடிவேல்


No comments:

Post a Comment