அரியானா மாநிலத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில் "ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் இந்தியாவில் 70% பேர் படிப்பறிவு மிக்கவர்களாக இருந்தனர். அப்போது இங்கு வேலை வாய்ப்பின்மை என்பதே இல்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் அவர்களது கல்வி முறையை நம் நாட்டிலும் நம் நாட்டின் கல்வி முறையை அவர்கள் நாட்டிலும் நடைமுறைப்படுத்தத் தொடங்கினார்கள். அதனால்தான் படிப்பறிவு நம் நாட்டில் 17 சதவீதமாகவும் அவர்கள் நாட்டில் 70% ஆகவும் மாறியது” என்று தெரிவித்துள்ளார்.
"இந்தியாவில் பாஜகவுக்கு எதிராக சனாதன தர்மத்தையும், மனுஸ்மிருதியையும் பல எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. அதாவது சனாதன தர்மத்தில்தான் ஜாதி படிநிலைகள் வகுக்கப்பட்டதாக கூறும் எதிர்க்கட்சிகள், அதை கடுமையாக எதிர்த்தும் வருகின்றன. அதேபோல, மனுஸ்மிருதியில் உயர் ஜாதியினர் எப்படி இருக்க வேண்டும்.. சூத்திரர்களை எப்படி நடத்த வேண்டும் என எழுதப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தினர்தான் கல்வி பெற்றதாகவும், சூத்திரர்களுக்கும், இன்ன பிற சமூகத்தினருக்கும் கல்வி மறுக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இதை மறுக்கும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும் சனாதான தர்மத்தையும், மனுஸ்மிருதியையும் தூக்கிப்பிடித்து வருகின்றன. அரியானா மாநிலம் கர்னல் பகுதியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவில் பண்டைய காலத்தில் கல்வி முறை மிகச்சிறப்பாக இருந்தது. வெறும் வேலைவாய்ப்புக்காக மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்க்கும் விதமாகவும் அன்றைய கல்வி இருந்தது. மேலும், கல்வி பெறுவதற்கான கட்டணம் மிக மிகக் குறைவாக இருந்திருக்கிறது. இதனால் அனைத்துத் தரப்பினரும் கல்வி கற்றார்கள். இந்தியாவில் இருந்து பல முனைவர்களும், அறிஞர் களும், கலைஞர்களும் வெளியே வந்தனர். அவர்களுக்கு உலகம் முழுவதும் அங்கீகாரம் கிடைத்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவில் 70 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். ஆனால், பிரிட்டிஷார் இந்தியாவுக்குள் நுழைந்ததும் இது தலைகீழாக மாறியது. ஆங்கிலேயர்கள் அவர்களின் கல்வி முறையை இந்தியாவில் திணித்தனர். நமது கல்வி முறையை இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றனர். இதனால் இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 17 சதவீதமாக குறைந்தது. அதே சமயத்தில், நமது கல்வி முறையை பின்பற்றியதால் இங்கிலாந்தில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 70 சதவீதமாக உயர்ந்தது. இன்றைக்கு நம் நாட்டில் கல்விக் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஏழைகள் கல்வி பெற முடியாமல் போகிறது. எனவே, கல்விக்கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார். பிரிட்டிஷார் வந்த பிறகே இந்தியாவில் கல்வி கற்போர் எண்ணிக்கை குறைந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மோகன் பாகவத் பொத்தாம் பொதுவில் பேசி இருக்கிறாரே தவிர, அவர் கூற்றுக்கு ஆதாரமாக தரவுகளோ, புள்ளி விவரங்களோ உண்டா?
வெள்ளைக்காரன்மீது குறைகள் கூறலாம். அதே நேரத்தில் இந்தியாவில் கல்வியும், மருத்துவமும் ஓங்குவதற்குக் கண் திறந்தவர்கள் அவர்கள் என்பதை மறுக்க முடியுமா?
வெள்ளைக்காரன் வந்த நிலையில், அவர்களை அண்டிப் பிழைத்து, ஒரு பக்கத்தில் மிலேச்ச பாஷை என்று ஊருக்கு உபதேசித்து விட்டு, இன்னொரு பக்கத்தில் ஆங்கிலத்தைக் கற்று உத்தியோகங்களை எல்லாம் அஜீரணம் அடையும் அளவுக்கு அனுபவித்தவர்கள் பார்ப்பனர்கள் தானே! மறுக்க முடியுமா?
1901 முதல் 1911 வரையிலான 10 ஆண்டுக் காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்புப் படித்து முடிந்த பார்ப்பனர்கள் 4074, பார்ப்பனர் அல்லாதாரோ வெறும் 1035 பேர் மட்டுமே; 1912இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே 453 பேர்.
இந்தியாவில் பவுத்தம் மற்றும் சமணம் அழிந்த பிறகான காலகட்டமான 10 ஆம் நூற்றாண்டு முதல் பார்ப்பனர்களுக்கு மட்டுமே குருகுலங்கள் உருவாகின.
அங்கு பார்ப்பனர்கள் அல்லாத பெரும் பணக்காரர்கள், மன்னர் களின் பிள்ளைகளுக்கு எழுத்தும் வாசிப்பும் மட்டுமே கற்றுக்கொடுக்கப் பட்டது. அங்கு அனைவருக்குமான அடிப்படைக் கல்வி என்பது இல்லாமல் போனது.
இந்த குரு குலங்கள் கூட மன்னர்களும் பெரும் செல்வந்தர்களும் கொடுக்கும் நிதியில் இருந்துதான் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பவுத்தமும் சமணமும் செழித்த போது பள்ளிகளும் விகாரைகளும் பொதுமக்களுக்கான பொது அறிவு மற்றும் எண் கணிதம் அறிவியல் சாஸ்திரம் போன்றவைகளைக் கற்றுக்கொடுக்கும் தளமாக இருந்தது.
சமணப்பள்ளிகளும் பவுத்த விகாரைகளும் தன்னிடம் வரும் மாணவர்களுக்கு மக்களிடம் தானமாக பெற்ற உணவு தானியங்களில் இருந்து உணவு சமைத்துகொடுக்கும் முறைகூட இருந்தது. இவை அனைத்துமே 9 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு முடிவிற்கு வந்தது.
குருகுலம் என்றாலே அவாள் சம்பந்தப்பட்ட சமஸ்கிருதக் கல்வி தானே? சேரன்மாதேவி குருகுலத்தின் கதை என்ன?
ஆங்கிலேயர்களின் கல்வி முறையை நம் நாட்டிலும் நம் நாட்டின் கல்வி முறையை அவர்கள் நாட்டிலும் நடைமுறைப்படுத்தியதால் தான் படிப்பறிவு நம் நாட்டில் 17 சதவீதமாகவும் அவர்கள் நாட்டில்
70 சதவிகிதமாகவும் மாறியதாம். விலா நோக சிரித்துத் தொலையுங்கள். நம்நாட்டின் வேதங்களையும், உபநிஷத்துகளையும், மனுஸ்மிருதி களையும் படித்துத் தான் அவர்கள் கல்வி வளர்ச்சி பெற்றனர் என்பதை விட அண்டப் புளுகு வேறு எதுவாக இருக்க முடியும்?
No comments:
Post a Comment