மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லையே தேவகவுடா வருத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லையே தேவகவுடா வருத்தம்

பெங்களூரு, மார்ச் 9- பன்னாட்டு மகளிர் நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மேனாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடா, ‘மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப் படாததுதான் வருத்தமளிக்கிறது’ என்றார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் 8.3.2023 அன்று வெளியிட்ட பதிவில், ‘பெண்களுக்கு அதிகாரமளிப்பதே நமது தேசத்தின் முன்னேற்றத் துக்கான அறிகுறி. 1995-இல் கருநாடக முதலமைச் சராகவும், 1996-இல் நாட்டின் பிரதமராகவும் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை அறிமுகம் செய்தேன். ஆனால், இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. புதிய தலைமுறையினர் அதனை முன்னெடுப்பார்கள் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

1996-இல் தேவகவுடா பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளி ருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழி வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தாக்கல் செய்யப்பட்டது. இது சட்டமாக்கப் பட்டால், நாடாளுமன்றம் மற்றும் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கப்படும். இதற்கு அரசமைப்பில் சட்டத்திருத்தம் தேவை. ஆனால், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் பல முறை தாக்கல் செய்யப்பட்டபோதும், கால் நூற்றாண்டுகளைக் கடந்தும் கிடப்பில் உள்ளது. கடந்த 2010-இல் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற் றப்பட்டபோதும், மக்களவையில் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது.


No comments:

Post a Comment