இதோ பெரியாரில் பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

இதோ பெரியாரில் பெரியார்!

பட்டுக்கோட்டைஅழகிரிசாமி

13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை

நேற்றைய (28.3.2023) தொடர்ச்சி...

நாசமாய் போகும் நம்பிக்கைக்கும் 

ஒரு எல்லை இல்லையா?

இதைவிட்டு நம் புராணங்களுக்கு வருவோமானால், கடவுள் எத்தனை என்றால், 33 கோடி தேவர்கள், 48,000 ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் என்று இன்னும் எத்தனை எத்தனை தெய்வங்கள் கூறப்படுகின்றன. இந்தத் தெய்வங்கள் ஒரு தேசம் போதாது போல் இருக்கிறது.

இப்படியிருந்தும் இவர்கள் தொழும் தெய்வங்களின் உருவ லட்சணங்களைப் பாருங்கள். "பல்லோ ஒரு காதம், பல்லிடுக்கோ முக்காதம்" - ஒரு பல்லின் அகலம் 10 மைல், ஒரு பல்லுக்கும் மற்றொரு பல்லுக்கும் இடையேயுள்ள வெளி 30 மைல். அப்படியானால் அவனுடைய வாயின் அகலம் மட்டும் 610 மைல். அதாவது 16 பல் இடம் 160 மைல் 15 இடைவெளியின் இடம் 450 மைல். ஆக 610 மைல் ஆகியது. அவன் வாய் மட்டும் இவ்வளவு அகலமானால் அவனுடைய கை எவ்வளவு? அவனுடைய கால் எவ்வளவு நீளம்? அவனுடைய உடல் எவ்வளவு பருமன் என்று சிந்தித்துப் பாருங்கள். அவனுடைய வாயில் மட்டும் எத்தனை நகரங்கள் தோன்றியிருக்கக்கூடும் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். இவ்வளவும் எழுதியிருந்தால்கூட நமக்குக் கவலை இருக்காது. ஏதோ கதையென்று தள்ளி விடலாம். ஆனால், அதை நம்பித்தான் ஆகவேண்டும். அதை நம்பாவிட்டால் நரகம் என்றல்லவோ கூறிவிடுகிறார்கள் இந்த ஆஸ்திக கோடிகள். இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா என்றால், கேட்டால் - இதற்கா நரகத்திற்குப் போக வேண்டும்?

சரி, இதுதான் போகட்டும் என்று தள்ளிவிட்டு மலை எப்படியப்பா உண்டாயிற்றென்றால், மலையெல்லாம் ஒரு காலத்தில் இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தனவாம். அவை தேவேந்திரனை ரொம்பவும் துன்புறுத்தவே, அவன் சிவபெருமானிடம் முறையிட்டுக் கொள்ள அவர் அந்த இறக்கைகளை அறுத்துவிட்டாராம். இறக்கை அறுந்துபடவே அவை பூமியின் மீது விழுந்து மலைகளாயிருக்கின்றனவாம்.

சரி சமுத்திரம் எப்படியப்பா ஏற்பட்டதென்றால், அவை எல்லாம் தோண்டப்பட்டனவாம். இவ்வளவு பெரிய சமுத்திரத்தைத் தோண்டியவர்கள் யாரோ. அவர்கள் எங்குதான் அந்த மண்ணை எல்லாம் போட்டார்களோ தெரியவில்லை. இப்படியெல்லாம் அண்டப் புளுகு, ஆகாயப் புளுகெல்லாம் எழுதிவைத்துவிட்டு, இப்படி சாஸ்திரம் கூறுகிறது; இதை நம்பித்தான் ஆக வேண்டு மென்று கூறினால், "நீ நாசமாகப் போக! இப்படிப்பட்ட சாஸ்திரங்களைக் கொளுத்தித் தொலை" என்றுதானே கூறத்தோன்றும். இப்படிக் கூறுவதா மதத்துவேஷம்? பகுத்தறிவுள்ள மனிதன் ஒப்புக் கொள்வானா இதை?

நான் ஓர் ஊரில் கடைத்தெருப்பக்கம் போயிருந்த போது கணபதி விலாஸ் சைக்கிள் ஷாப் என்ற போர்டைப் பார்த்தேன். அதன் கீழ் வேகமாகப் போகும் புது சைக்கிள் இங்கு வாடகைக்குத் தரப்படும் என்று எழுதியிருந்தது. பேர் வைப்பதில் கொஞ்சமாவது அறிவை உபயோகப்படுத்த வேண்டாமா இவர்? கணபதி விலாஸ் சைக்கிள் என்றால் அது எதற்கு? நகரவா? டயர் தேயவா? டியூப் வெடிக்கவா? அல்லது பார் நொறுங்கவா? கணபதி விலாஸ் சைக்கிள் எங்காவது வேகமாய்ப் போகுமா? உன் சைக்கிள் வேகமாகப் போகும் என்றால், அதற்குப் பறக்கும் சைக்கிள் வண்டி என்று பேர் கொடேன்! கொஞ்சமாவது பொருத்தம் வேண்டாமா பெயருக்கு? இந்த 1947ஆம் ஆண்டிலா இப்படி ஒரு பெயர் வைப்பது?

எருமை மாட்டு வாகனக் கவர்மெண்டுக்கு 

எப்படித் தம்பி பிடிக்கும்?

புராணத்தில் கூறப்படும் உலகங்கள் எத்தனை தெரி யுமா? ஈரேழு பதினாலு லோகங்கள், அதாவது மேலேழு, கீழேழு; அவற்றின் பெயர்களே அதல, விதல, சுதல, தராதல பாதாள, கேதாள என்று போகும். எல்லாம் தலதளா தான். இந்த 14 லோகங்களிலுமுள்ள ஈ. எறும்பு, பொட்டு, புழு ஆகிய சகல ஜீவராசிகளுக்கும் எஜமானன் எமன் ஒருவன் தான். ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருக்கும் அநேக கோடி ஜீவராசிகளின் உயிர்களைச் சித்திர புத்திரன் கணக்குப்படி காலா காலத்தில் கொண்டு செல்லக்கூடியவனும் அவன்தான். அவ்வுயிர்களை எப்படிக் கொண்டு செல்கிறான் என்றால், தன் சூலத்தால் குத்தித் தன் பாசக் கயிற்றால் சுருக்கிட்டு இழுத்துச் செல்கிறானாம் பாசக் கயிற்றால் இழுக்க உயிரென்ன மரக்கட்டை போன்ற ஒரு வஸ்தா? இத்தனை கோடி ஜீவன்களை அந்தந்த இடத்திற்கு வெகு வேகமாகச் சென்று இழுத்துவர உபயோகப்படுத்தும் வாகனமென்ன தெரியுமா? மார்கழி மாதக் குளிரில் குளத்தங்கரைச் சேற்றில் புரண்டு கொண்டிருக்கும் எருமைக் கிடாவாம். எங்காவது எருமைக்கிடா மீதேறிச் சென்று இவ்வளவு ஜீவன்களை இழுத்துக் கொண்டுவர முடியுமா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். 

இதையெல்லாம் கேட்பது மதத்திற்கு விரோதமென்றால், அப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத மதத்தைத் தயவுசெய்து நீயே வைத்துக் கொள்ளேன். வீணாக எங்கள் மீது சுமத்தி ஏன் எங்கள் உயிரையும் வாங்குகிறாய் என்றுதான் கேட்கி றோம். இப்படி எல்லாம் பேசுவது நமது அரசாங்கத்திற்கும் பிடிக்கவில்லையாம். பின் எப்படிப் பிடிக்கும் ஒரு எருமை மாட்டு வாகனக் கவர்மெண்டுக்கு இச்சீர்திருத்தக் கருத் துக்கள்?

அறிக்கை அனுப்புகிறார்களாம் பள்ளி ஆசிரியர்களுக்கு, புராணங்களிலுள்ள ஆபாசங்களைப் பிள்ளைகளுக்கு விளக்கிக் கூறாதே! மதத்தைப் பழிக்காதே என்று! அத்து மீறினால் தண்டிப்பார்களாம் இவர்கள், “அத்துமீறினால்" என்றால் என்னப்பா அர்த்தம்? அத்து என்பதற்கு அள வென்ன? அதற்கு அளவு ஏற்படுத்துவது நீயா! நானா? ஏனப்பா அரைகுறை சுயராஜ்யத்தை வைத்துக் கொண்டே ஆனமட்டும் பதைக்கிறாய்?

உஷாராய் இருங்கள்! இல்லாவிட்டால் என்ன செய் வோம் தெரியுமா? பத்திரம். ஆட்சி எங்களிடம் இருக்கிறது எச்சரிக்கிறார்களாம். ஏம்பா எங்களை இப்படிப் பயமுறுத்து கிறாய்? என்று நாங்களென்ன சின்னப் பொடிப்பசங்களா, உன் பயமுறுத்தலுக்கு அஞ்சி ஓட? இல்லையானால் எங்களை என்ன முட்டாள்கள் என்று கருதிக் கொண்டு பேசுகிறாயா? உங்கள் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இவ்வளவு ஆணவமாக உளறிவருகிறீர்கள்? ஏதோ பதவிபெற்றுவிட்டதால் கொஞ்சம் பணக்காரர்களாகி வருகிறீர்கள் என்றால், தாராளமாய், பணக்காரர்களாகுங்க ளேன்! நாங்களொன்றும் அப்படி உங்களிடம் பங்கு கேட்க வரவில்லையே! கொஞ்சம் ஜாக்கிரதையோடு அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பிழையுங்கள். கோவிலுக்கும் குளத்திற்கும் கொடுத்துக் குட்டிச் சுவராகாதீர்கள் என்று தானே உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். இதுவா பாபம்! உங்கள் சிந்தனைக்கு விண்ணப்பம் செய்து கொள்வதா பாபம்? நீங்களே சிந்தித்து விடைதாருங்கள்.

மதம், கடவுளை, 

பணமே படைத்தது 

மதம் என்றால் என்ன? அது மனிதத் தன்மைக்கு மாறு பட்டுத்தானா இருக்கவேண்டும்? மதத்தின் கொடுங்கோன் மையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது முகம், நமது உடலிலேயே மிகப் பிரதானமான ஓர் அங்கம். அதன் தோல் மிக மென்னையானது அதன்மீது வளரும் ரோமமோ அதைவிட மென்மையானது. அந்த ரோமத்தை அப்படியே வளரவிட்டால் நாம் ஏதோ கரடி மாதிரி அல்லது குரங்கு மாதிரிக் காட்சியளிப்போம். நம்மை அப்படி இருக்க விடாமல், ஒரு பளபளப்பான கண்ணாடி முன் உட்கார வைத்து, நமது தோலுக்கு யாதொரு தீங்கும் நேரிடாதபடி, மகா கூர்மையான கத்தி கொண்டு நமது ரோமத்தை வழித்து, தமது தலையை எண்ணெயிட்டு சீவி, நம் முகத்துக்கு ஸ்நோவும் பவுடரும் போட்டு, நம்மை அழகுற அலங்கரித்து ஒரு மாப்பிள்ளை மாதிரி அனுப்பு கின்றான் நமது தோழன். அவனோர் அம்பட்டப் பய.

நமது அழுக்குப் படிந்த, நாற்றமடைந்த துணிகளைத் துவைத்து அவற்றிற்கு நீலமும் கஞ்சியும் போட்டுச் சலவை செய்து, கண்ணாடி போல் பெட்டி போட்டு, நாமும் நம் மக்களும் உடுத்துக்கொண்டு, மெல்லிய தென்றல் காற்று வாங்க உல்லாசமாய்ச் செல்ல உதவும் தோழன், நமக்கோர் வண்ணாரப் பய.

பங்குனி வெயிலில் பாதம் எங்கு கொப்பளித்து விடுமோ, அல்லது கல்முள் குத்திக் காலைக் கெடுத்து விடுமோ என்று நாம் பயப்படாமல் இருக்க, நமது காலுக்கேற்ற செருப்பைத் தைத்துக் கொடுக்கும் தோழன், நமக்கோர் சக்கிலிப் பய.

நமது வீடு மலஜல மூத்திரத்தால் நாற்றமெடுக்காமல் இருக்கும் படி, நமது தெருக்கள் நாற்றமெடுக்காமல் இருக்கும்படி, நமது கக்கூசைக் கழுவி நமது சாக்கடையைச் சுத்தம் செய்து, நமது தெருக்களிலுள்ள குப்பைகளை அகற்றி நமக்கு அசுத்தத்தால் நோய்கள் முதலியன வராமல் இருக்க நமக்கு உதவுபவனும், நமது வீட்டில் ஒருவர் இறந்தால் அவரது பிணம் அழுகிப் புழுக்கள் ஏற்படாமல் இருக்க, அதைச் சுட்டெரிக்க நமக்கு உதவுபவனுமாகிய தோழன் நமக்கோர் தோட்டிப் பய.

உண்மை உழைப்பாளிகளுக்கு இழி பட்டம் அளிப்பது தான் மத தர்மம்.

அதேபோல் பணம் ஏற ஏற அதனுடைய பட்டமும் சற்று உயர்ந்து கொண்டே போகும்; ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமான சொத்துடையவன், மதக்குருக்களுக்கு ஒரு சாதாரண பணக்காரன். லட்சக்கணக்கான ரூபாய் பெறுமான சொத்துடையவன் அவனுக்குப் பிரபு. கோடிக்கணக்கு பெறுமான சொத்துடையவன் அவனுக்கு மதசம்பிரதாயப்படி, ஈஸ்வரன். ஆகவே பணம்தான் கடவுள். கடவுளையும் மதத்தையும் உற்பத்தி செய்ததே அந்தப் பணம்தான்!

ஏ மதமே! உனது ஈனத் தன்மை வெளியாகிவிட்டது. இனி உன்னால் இந்நாட்டில் வாழ இயலாது. உனக்கோர் எச்சரிக்கை விடுகிறோம். நாம் மேலே கூறியவற்றிற்கு நேர்மையான சமாதானங் கூற முடியுமானால் கூறுக! இன்றேல் "ஏ மதமே! மதவாதிகளே! நீங்கள் அழிந்துபடுங்கள்” என்று எக்காளமிட்டு வருபவரும் பெரியார்தான். திராவிடர் நாடு பிரிந்து திராவிடர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒழுக்கமான நாகரிக வாழ்வு வாழ நமக்கு வழிவகுத்துத் தந்து வருபவரும் பெரியார்தான்.

அப்படிப்பட்ட பேரும் புகழும் மிக்க பெரியாரின் படத்தை நான் உங்கள் முன் திறந்து வைக்குமுன் உங்களுக் கோர் விண்ணப்பம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். இப்படத்திலுள்ள ஓவியத்தின் நிறம் இன்று பளபளப்பாக இருக்கும். ஆனால் நாளையோ மறுநாளோ கொஞ்சம் மங்கித்தான் போகும். ஆகவே பெரியாரை உங்கள் நெஞ்சத்தில் ஓவியமாகத் தீட்டுங்கள்! நெஞ்சகச் சித்திரத்திற்கு என்றுமே தேய்விருக்காது. மேலும் நீங்கள் உயிருள்ள வரை, அவரது கருத்துகள், கருத்துகளினூடே பொதிந்து கிடக்கும் தனியான சிறப்புகள் ஆகியவைகள் உங்களை மேன்மைப் படுத்திக் கொண்டே வரும். ஆகவே உங்கள் இருதயத்தில் அவரைச் சித்தரித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டு, உங்கள் சார்பாக நான், இப்பெரியார் படத்தை மூடியிருக்கும் திரையை விலக்குகின்றேன். அதே போல் நீங்களும் உங்கள் மடமைத் திரையை விலக்கிப் பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள்.

(முற்றும்)


No comments:

Post a Comment