குற்றவாளிகளுக்கு 'ஜே!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

குற்றவாளிகளுக்கு 'ஜே!'

கருநாடகாவில் 2019-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. தற்போது 34 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 341 பேரை விடுவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநில பிஜேபி அரசு. இதில்  காவல்துறை ஆட்சேபங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது வெறுப்புப் பேச்சு, வகுப்புவாதப் பிரச்சினைகள், போராட்டங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

34 வழக்குகள் - இதில்  16 வழக்குகளில் சங்பரிவாருடன் தொடர்புடைய இளைஞர் குழுக்களை சேர்ந்த 113 நிர்வாகிகள் உள்ளனர். ஹிந்து ஜாக்ரன் வேதிகே (HJV), விஷ்வ ஹிந்து பரிஷத்தின் துணை அமைப்பு, பஜ்ரங் தளம் மற்றும் சிறீராம் சேனா மீதான வழக்குகளை ரத்து செய்யப் பரிந்துரைக் கப்பட்டுள்ளது. அதோடு 18 விவசாயிகள் மற்றும் 228 தனி நபர்கள் மீதான வழக்குகளும் ரத்துச் செய்யப்பட உள்ளன.

இது தொடர்பாக அக்டோபர் 1, 2022 அன்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 34 வழக்குகளை திரும்பப் பெறுவதற்குத் தேவையான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியது.

ஆய்வின் படி, இன்றுவரை 8 வழக்குகளில் இருந்து 2022 அக்டோபர்  மாத உத்தரவின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

1) குற்ற எண் 61/2016, குடகு: முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாக வலதுசாரி ஆர்வலர் அஜித்குமார் மற்றும் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குடகுவில் உள்ள விராஜ்பேட்டை பாஜக எம்.எல்.ஏ. கே.ஜி. போபையாவின் பதவி விலகல் கோரிக்கை. (விடுவிப்பு: நவம்பர் 25, 2022)

2. குற்ற எண் 170/2017, ஹலகேரி (ஹவேரி): குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக வகுப்புவாதப் பதற்றத்தின் போது மறியல் நடத்த முயன்றதாக குருராஜ் வெர்னேகர் மற்றும் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை மாநில அரசின் மூத்த அதிகாரியிடம் இருந்து வந்தது. (விடுவிப்பு: ஜனவரி 5, 2023)

3. குற்ற எண் 200-2017, பாகல்கோட்: தொழுகையின் போது மசூதிக்குள் நுழைந்து அமைதியைக் குலைத்ததாக லட்சுமன் கயக்வாட் மற்றும் 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஹங்குண்ட் தொகுதி பிஜேபி எம்.எல்.ஏ. தொட்டனகவுடா ஜி பாட்டீல் திரும்பப் பெற கோரிக்கை விடுத்தார். (விடுவிப்பு: நவம்பர் 4, 2022)

4. குற்ற எண் 79/2013, சுல்லியா (தட்சிண கன்னடம்): ஹிந்து சமஜோத்சவ நிகழ்வின் போது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பேசியதாக ஹிந்து ஜாக்ரன் வேதிகே தலைவர் ஜெகதீஷ் கரந்த் மற்றும் 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

புகாரினை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும் உள்ள உள்ளூர் சுல்லியா எம்.எல்.ஏ. எஸ்.அங்காரா விடுத்தார். (விடுவிப்பு: டிசம்பர் 9, 2022)

இது தொடர்பாக கருநாடக உள்துறை அமைச்சர்   ஞானேந்திராவை தொடர்பு கொண்டபோது, ​​”வலதுசாரி ஆதரவாளர்கள் மட்டுமல்ல. விவசாயிகள், மொழிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதில் பல வழக்குகள் அப்பாவி மக்கள் மீதும் தேவையில்லாமல் போடப்பட்டுள்ளன” என்று கூறினார். சட்டத் துறை அமைச்சர் ஜே.சி. மது சுவாமியும் ஆகஸ்ட் 2022-ஆம் ஆண்டு இதையே கூறினார்.

“இது அரசின் கூட்டு முடிவு” என்று உள்துறை செயலாளர் அய்பிஎஸ் அதிகாரி எஸ். ரவி, கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்திலும் தேர்தல் நேரத்தில் நூற்றுக் கணக்கான ஹிந்துத்துவ அமைப்பினர் மீதும், சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் மீதும் இருந்த வழக்குகள் ரத்துசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பிஜேபி ஆட்சியில் இவ்வாறு செய்வது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு பட்டப் பகலில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மையினர்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்த கண் ணுக்குத் தெரிந்த குற்றவாளிகளே இந்தியாவின் உச்சக்கட்ட பதவிகளில் சிம்மாசனம் போட்டு உட்காரவில்லையா? - உட்கார்ந்திருக்கவில்லையா?

குஜராத்தில் சிறுபான்மையினர் படுகொலை செய் யப்பட்ட வழக்கில் ஆயிரக்கணக்கான வழக்குகள்  திரும்பப் பெறப்படவில்லையா! நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக மறு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லையா?

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பிஜேபி ஆட்சியின்  நிருவாகத்தில் குற்றவாளிகளுக்கு 'ஜே!'

No comments:

Post a Comment