”பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுத்ததுதான் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது!” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

”பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுத்ததுதான் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது!”

பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் இரண்டிலும் இயங்கிய, பெரியார் பெருந்தொண்டர் தோழர் சீனிவாசனுடன் ஒரு சந்திப்பு (பகுதி 2 தொடர்கிறது)


கேள்வி: நெருக்கடி காலத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா?

பதில்: எங்க வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஏட்டையா குடியிருந்தார். நெருக்கடி காலம் அப்படிங்கறதுனால ரொம்பக் கெடுபுடியா இருந்தது. அப்ப அந்த ஏட்டையா, ’நீங்க அரசு ஊழியரா இருக்கீங்க, யாராவது பாத்துட்டா ஏதாவது ஒன்னு சொல்லி, ஏதாவது ஆயிடப்போகுது. அதனால வீட்டில் மாட்டி வச்சிருக்கிற பெரியார் படத்தை எடுத்துடுங்க’ அப்படின்னாரு. பக்கத்துல இருந்து பார்த்தும், இதை ஏன் சொல்லவில்லை? என்று என்னையும் கேப்பாங்க’ என்றார். எது வந்தாலும் நான் சந்திக்கிறேன் அப்படின்னு அவரிடம் சொல்லிவிட்டேன். ஆனால், எந்த பிரச்சினையும் எனக்கு வரவில்லை. 1980 இல் கோபி செட்டிபாளையத்திற்கு மாறுதல் ஆகி வந்தேன். அப்போது அவிநாசியில் இருந்த பரமசிவமும் அங்கு மாறுதலாகி வந்தார். அப்போது நான், தாலுக்கா வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்தேன். அவரு றிகீஞி பொறியாளர். ரெண்டு பேரும் சேர்ந்து ’பகுத்தறிவாளர் கழகம்’ ஆரம்பிச்சு நிறைய வேலைகளை செய்தோம். நிறைய உறுப்பினர்களையும் சேர்த்தோம். கோபி செட்டிபாளையத்தில் நிறைய பொதுக்கூட்டங்களை நடத்தி, திராவிடர் கழகத்தையும் நாங்கதான் நடத்திக்கிட்டு இருந்தோம். அப்போது கோபிசெட்டிபாளையத்தில் யோகானந்தம், தமிழ் ஆசிரியர் புலவர் தா. நா. கருப்பண்ணன் அப்படின்னு சிலர்தான் இருந்தாங்க. ஆனால், இயக்கத்தில் ரொம்ப தீவிரமானவங்க. 

கேள்வி: படிப்பு முடிந்து அரசுப்பணியில் சேர்ந்ததைப் பற்றி சொல்லுங்க?

பதில்: 1958 இல் பவானி தாலுக்கா ஆபீசில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். அது காமராஜர் ஆட்சி காலம். இட ஒதுக்கீடு மூலமாக தான் எனக்கு இந்தப் பணி கிடைத்தது. நான் விஙிசி. முதல் இட ஒதுக்கீட்டில் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1966 இல் பணி உயர்வுடன் அவிநாசிக்கு மாறுதல் ஆனேன். முன்னதாக வருவாய்த் துறையில் ஆய்வாளராக (ரெவென்யூ இன்ஸ்பெக்டர்)  மேட்டுப்பாளையத்தில் இருந்தேன்.

கேள்வி: பெரியாரை நேரில் எப்போது, எங்கே சந்தித்தீர்கள்?

பதில்: 1962 தேர்தல் நேரம், அவிநாசியில் ஒரு பொதுக்கூட்டத்தில் தான் பெரியாரை நேரில் சந்தித்தேன். அய்யா, காமராஜருக்காக பேசினார். அதுக்கப்புறம் அண்ணாவும் அங்க வந்து பேசுனாரு. அண்ணா பெரியாரை தாக்கியோ அவதூறாகவோ எதுவும் பேசவில்லை. அய்யா வந்து ’கண்ணீர் துளிகள் கட்சி’ ஆட்சிக்கு வந்திடக் கூடாது. காமராஜர் ஆட்சி நீடிக்கணும் அப்படின்னு பேசினார். காமராஜர் இருந்தால்தான் கல்வி வளரும்! நாடு முன்னேறும்! நாமும் முன்னேறலாம் அப்படின்னு பேசினார். தி.மு.க.வை பற்றி அய்யா கொஞ்சம் கடுமையாகத்தான் பேசுவார். 

கேள்வி: ஆசிரியரை எப்போது, எங்கு சந்தித்தீர்கள்?

பதில்: ஆசிரியருக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தாங்க. அந்த நிகழ்ச்சியில் தான் முதல் முதலில் ஆசிரியரைப் பார்த்தேன். அறிமுகம் பண்ணி வச்சாங்க. அப்புறம் ஆசிரியர் கூட்டம் எங்க நடந்தாலும் போவோம். 1994 இல் ஓய்வு பெற்ற உடனேயே ஆசிரியர் என்னை திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவராக நியமித்தார். 1998 இல் நான் தலைவரானேன். வயதின் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்புதான் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டேன். செயலாளராக இருந்த சிவலிங்கம் இப்போது தலைவராக இருக்கிறார்.

கேள்வி: ஒரு பகுத்தறிவாளராக பணிக்காலத்தில் கொள்கை தொடர்பான, இடையூறுகள் ஏதாவது வந்திருக்கின்றதா?

பதில்: தாராபுரத்தில் நான் தாசில்தாராக இருந்தேன். அது எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம். நான் போகும் போது அலுவலகத்தில் கடவுள் படம் வச்சிருந்தாங்க. அதையெல்லாம் எடுக்கணும்னு சொல்லிட்டேன். அவங்க முணுமுணுத்தாங்க. ஆனாலும், நான் இருக்கிற வரைக்கும் இருக்க கூடாது. நான் போன பிறகு நீங்க உங்களுக்கு விருப்பமானதை பண்ணிக்கோங்க, அதேபோல ஆயுத பூஜையும் இங்கு செய்யக்கூடாது அவங்கவங்க வீட்டிலேயே பண்ணிக்கங்க அப்படின்னு சொல்லிட்டேன். இது மாதிரி விஷயங்கள் எல்லாம் தாலுகாவில் ரொம்ப சிறப்பா பண்ணிட்டு இருப்பாங்க. (பலமாக சிரிக்கிறார்) வீட்டில் இருந்து ஏதாவது சுண்டல் கொடுத்தா, தாராளமாக வாங்கி சாப்பிட்டுக்குவேன்.

கேள்வி: உங்கள் திருமணத்தைப் பற்றி சொல்லுங்கள்

பதில்: 1965 இல் சம்பிரதாயத் திருமணமாகத்தான் நடைபெற்றது. எனக்கு அப்போது கொள்கையில் தெளிவு இல்லை. மனைவி பெயர் பத்மாவதி. பிறகு நானும் கொள்கையில் தெளிவடைந்தேன். அவரும் நமது சிந்தனைக்கு வந்து விட்டார். மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் பெரும்பாலும் எனது இல்லத்தில் தான் நடைபெறும். அம்மா அதற்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பார். எனக்கு இப்போது 85 முடிந்து 86 ஆம் வயது நடக்கிறது. அம்மாவுக்கு 76. இருவரும் நன்றாகவே இருக்கிறோம். 

கேள்வி: உங்கள் பணிக் காலத்தில் பார்ப்பனர்களால் ஏதாவது தொல்லை இருந்ததா? 

பதில்: தொல்லை இல்லை. ஏனென்றால், அப்போது, 10-கி1 பிரிவு மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகத்தான் பணிக்கு ஆள் போடுவாங்க. அதே நேரம் சர்வீஸ் கமிஷன்ல ஆள் எடுத்தாங்கன்னா, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக எடுத்தவங்கள வெளியே அனுப்பிவிடுவார்கள். 1958 இல் பணிக்கு நான் வந்த போது, பவானி தாலுக்கா அலுவலகத்தில் மட்டும் 11 பார்ப்பனர்கள் இருந்தனர். அந்த பதினொரு பேருக்குமே ஜிழிறிஷிசி ஆள் போட்டாங்க, நான் உட்பட. அதனால, பார்ப்பனர்கள் 11 பேரும் வெளியே போக வேண்டிய சூழல் வந்தது. அதுக்கப்புறம் எல்லாமே பார்ப்பனரல்லாதார்தான். 10-கி1 பிரிவு என்பது தற்காலிகம்தான் என்று அவர்களுக்கும் தெரியும்.

டெபுட்டி தாசில்தார் போடும்போது ஒரு பட்டியல் போடுவாங்க. அது கம்யூனல் ரொட்டேஷன் என்று சொல்லுவாங்க. அதுல ஙிசி, விஙிசி, ஷிசி, ஷிஜி என்று வரும். நான் விஙிசி. அப்போது பதவி உயர்வுகளில் எனக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். உதவி வட்டாட்சியராக இருந்து, துணை வட்டாட்சியராக  பதவி உயர்வு பெற்றேன். பணியில் சேர்வதற்கும் இட ஒதுக்கீடுதான் பயன்பட்டது. சேர்ந்த பிறகு இரண்டு முறை வந்த பதவி உயர்விலும் இட ஒதுக்கீடுதான் உதவியது. அதனாலதான்  பெரியாருக்கு என்றைக்குமே நான், நன்றிக்கடன் பட்டவனாக இருக்கின்றேன். 1993 வரையில் பகுத்தறிவாளர் கழகத்தில் இருந்தேன். 1994 இல் பணிஓய்வு பெற்றேன்.

கேள்வி:  பகுத்தறிவாளர் கழகத்தில் உங்கள் செயல்பாடுகள் எப்படி இருந்தது?

பதில்: ழிநிளி சங்கத்தில் இருந்த சு. அறிவுக்கரசு (கழக செயலவைத் தலைவர்) போன்றவர்களை அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறோம். கோபியில் குன்றக்குடி அடிகளாரை அழைத்து கூட்டம் நடத்தி இருக்கின்றோம். இதன்மூலம் நிறையப் பேரை இயக்கத்துக்கு புதிதாகக் கொண்டு வந்தோம்.

கேள்வி: உங்கள் பணிக் காலத்தில் உங்களுக்கு நினைவில் இருக்கும் ஏதேனும் ஒரு முக்கிய சம்பவம் பற்றிச் சொல்லுங்கள். 

பதில்: ம். ஏதாவது வேலையில சுணக்கம் என்று சொல்லியோ, வேலையை செய்யலன்னு சொல்லியோ ஏதாவது சார்ஜ் போடுவாங்க. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில், அரசு மேற்பார்வையில் தனியார் சாராயக் கடைகளை நடத்தி வந்தனர். சாராயக் கடை தொடர்பாக ஒரு பிரச்சினையை நான் சந்தித்து இருக்கிறேன். சிலர் கடையை நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்குவதாக கருதி, விட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். அந்த நட்டத்தை அவர்களிடம் வசூல் செய்ய வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட தொகை கொடுத்து கடையை எடுத்து இருப்பார்கள். பாதியில் விட்டால் அரசுக்கு நஷ்டம் தானே? அதில் வசூல் செய்யவில்லை என்று ஒரு முறை என் மீது சார்ஜ் போட்டார்கள். ஆறு மாதம் இன்கிரிமென்ட்டை நிறுத்திவிட்டார்கள். இதனால் எனது பதவி உயர்வுக்கு பிரச்சினையாக கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், வருவாய்த்துறை அமைச்சராக இருந்த எஸ்.டி சோமசுந்தரம், காலத்தில்தான் வருவாய்த்துறை நன்றாக வளர்ச்சி அடைந்தது. நிறைய பணி இடங்கள் மேம்படுத்தப்பட்டன. புதுப்புது பணி இடங்கள் உருவாக்கப்பட்டன. அவரால்தான் எனக்கு பதவி உயர்வு வந்தது. இல்லை என்றால் வட்டாட்சியரோடு நின்று இருப்பேன். அவர் என்ன செஞ்சாருன்னா? இந்த மாதிரி மூணு மாசம் இன்கிரிமென்ட் கட்டு. ஆறு மாசம் இன்கிரிமென்ட் கட்டு, இதையெல்லாம் கணக்குல எடுத்துக்க வேண்டாம், பிரமோஷன் கொடுக்கும்போது அதையெல்லாம் ஓவர்லுக் பண்ணிட்டு குடுங்க அப்படின்னு சொல்லிட்டாரு. அவரால்தான் நான் உதவி ஆட்சியராக ஓய்வு பெற்றேன். 1991 இல் உதவி ஆட்சியராக வேலூரில் இருந்தேன். வேலூரில் ஒரு புது பணி! என்னவென்றால்? முதலமைச்சர் செல்லுன்னு ஒன்னு வச்சிருந்தாங்க. அதில் என்னை பணியமர்த்தினார்கள். அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டம். அப்ப ராமசுந்தரம் என்றொரு மாவட்ட ஆட்சியர் இருந்தாரு. 

கேள்வி: மாவட்ட உதவி ஆட்சியராக, தங்கள் பணியை பற்றி...

பதில்: என்னுடைய பணிக்கு பெயர், ”ஸ்பெஷல் டெபுட்டி கலெக்டர் கிரிவென்சஸ்” ஆட்சியருக்கு என்மேல நல்ல நம்பிக்கை. லஞ்ச, லாவண்யம் இல்லாம வேலை செய்வாரு! இவர் செஞ்சா வேலை சரியா இருக்கும்! அப்படின்னு என்னைப் பற்றிய அவரது கணிப்பு! அதனால முக்கியமான, சிக்கலான பணிகள் ஏதாவது இருந்தால், நம்பி என்கிட்ட கொடுத்துடுவாரு. உதாரணமாக, 1981இல், பஞ்சமி நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஒரு பிரச்சினையை என்கிட்ட கொடுத்து, போய் பாருங்கன்னு சொன்னாரு. நான் போய் பார்த்தேன். விசாரிச்சதுல, அங்கே பஞ்சமி நிலத்திற்கு உரியவர், விவரம் தெரியாமல் பணத்தை வாங்கிட்டு நிலத்தை விற்பனை செய்திருக்கிறார். புத்தி வந்தபிறகு, நிலத்தை எனக்கு திருப்பி கொடுக்கச் சொல்லுங்கன்னு போராட்டம் செஞ்கிட்டு இருந்தார். ’ஏதோ ஒன்னும் தெரியாம ஏமாந்து கொடுத்துட்டாருங்க. அப்பாவி அவரு, அதனால, அவருக்கு நிலத்தை திருப்பிக் கொடுத்துவிடலாம்’ என்று நான் ஆட்சியரிடம் பரிந்துரை செய்தேன். ஆட்சியரும் நடவடிக்கை எடுத்து நிலத்துக்குரியவர்கிட்டயே அந்த இடத்தை கொடுக்கச் செய்தார். அது எனக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது.

இன்னொன்று, அப்போது பொறம்போக்கு நிலம் நிறைய இருந்துச்சு, அது செல்வி ஜெயலலிதா ஆட்சிக்காலம். பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா கொடுக்கணும்னு முதலமைச்சர் ஆர்வமாக இருந்தாங்க. அந்தப் பொறுப்பையும் என்கிட்ட கொடுத்தாரு மாவட்ட ஆட்சியர். நான், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, குடியாத்தம், வேலூர் வரை எல்லா தாலுக்காவுக்கும் போய் கணக்கெடுத்தேன். எல்லா நிலத்துக்குமே பட்டா கொடுக்காம இருந்தாங்க. அப்ப அதை, ’பிமெமோ’ன்னு சொல்லுவாங்க. இது வந்து பொறம்போக்கு நிலத்தை அனுபவிப்பதற்கான கட்டணம் செலுத்தியதற்கான சான்று. கட்டணம் கட்டிட்டு இருப்பாங்க. ஆனால், பட்டா இருக்காது. அது அப்படியே க்ஷிகிளி, ஸிமி கிட்ட போகும். இரண்டு பேரும் ஏதேதோ சொல்லி, அவங்கிட்ட காசு வாங்கிட்டு அப்படியே வச்சிருப்பாங்க. இந்த நிலங்களுக்குதான் அந்தம்மா பட்டா குடுக்கணும்னு சொல்லிட்டாங்க. நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பட்டா கொடுத்தோம். அதுவும் எனக்கு நிறைவான பணியாய் இருந்தது. மாவட்ட ஆட்சியர் என்னை நம்பியபடியே நான் இறுதி வரையிலும், லஞ்சம் வாங்காத ஒருவனாகவே இருந்தேன். நான் ஓய்வு பெற்ற பிறகு எனது ஓய்வு பணிக்கொடை போதாமல், வீடு கட்டுவதற்காக, சொசைட்டியில் கடன் வாங்கித்தான் வீட்டை கட்டி முடித்தேன். வீட்டை கு.வெ.கி ஆசான் அய்யா  தான் திறந்து வைத்தார். 

கேள்வி: பெரியார், மணியம்மையார், ஆசிரியர் மூன்று தலைவர்களின் தலைமையில் நீங்கள் இயங்கியிருக்கிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

பதில்: பெரியாரும், மணியம்மையாரும் எனக்கு அவ்வளவா அறிமுகம் இல்லை. ஆசிரியர் தான் அதிகம் அறிமுகம்! எந்தளவுக்கு என்றால்?, ஆசிரியர் எங்க குடும்ப நண்பராகவே இருந்து கொண்டிருக்கிறார். கட்சிக்காரருக்கு அப்பாற்பட்டு உறவினர் மாதிரிதான் எங்ககூட பழகுவாரு. இன்றைக்கு வரைக்கும் அது தொடர்கிறது. அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாரு. எங்க  மருமகன் வீட்டுக்கும் வருவாரு. இந்த உணர்வு நான் உயிருடன் இருக்கும் வரையிலும் அப்படியேதான் இருக்கும். ஆசிரியர், அரசுப் பணியாளனாக இருப்பதைப் பற்றி கவலைப்படாமல் இயக்கம் அறிவித்த எல்லா போராட்டங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கின்றேன். தார் சட்டி எடுத்துக்கொண்டு சென்றிருக்கின்றேன். மனுநீதி எரிப்பு போராட்டத்திற்கு சென்று இருக்கின்றேன். 

கேள்வி: ஓய்வு பெற்ற இயக்கப்பணிகளில் உங்களுக்கு மனநிறைவு தந்த பணியாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

பதில்: 2007 இல் தொடங்கி, கோபி பெரியார் திடலில், ஆளுயர வெண்கல ’பெரியார் சிலை’ ஒன்றை அமைத்தோம். அதுதான் என் நினைவில் நிற்கும் இயக்கப்பணி! நான்தான் அந்த சிலை அமைப்புக் குழுவின் தலைவர். தி.மு.க.வின் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.பி.வெங்கிடு செயலாளரகவும், ராஜமாணிக்கம் பொருளாளராகவும், ஜி.பி.வெங்கிடுவின் மகன் மணிமாறன் துணைத் தலைவராகவும், எனது மருமகன் கந்தசாமி துணைச் செயலாளராகவும் இருந்து, 9 லட்சம் ரூபாய் செலவில், ஆசிரியர் அய்யா தலைமையில், 2008 இல் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மாண்புமிகு ஆ.ராசா திறந்துவைத்தார். 

எதிர்நீச்சலடித்துத்தான் சிலையை வைக்க முடிந்தது. அதாவது, நகராட்சியின் தீர்மானம், தாசில்தார், காவல்துறையினரின் பரிந்துரைகள் தேவை. நகராட்சியில் பெரியார் சிலை வைப்பதற்குத் 20ஜ்20 இடம் கொடுப்பதென்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டாலும், ஏனோ நம்மிடம் கொடுக்காமலேயே வைத்திருந்தார்கள். அத்தோடு வருவாய்த் துறை, காவல்துறை இரண்டிலும் பரிந்துரைக்கும் எண்ணமேயில்லாமல் இருந்தார்கள். அப்போது நகர திட்ட (டவுன் பிளான்) அதிகாரியாக இருந்தவர் நமது பற்றாளர். நகராட்சித் தலைவர் இல்லாத போது, அவர் பொறுப்பு நகராட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தார். அந்த வாய்பைப் பயன்படுத்தி, அவரிடம் சொல்லி தீர்மானத்தின் நகலை வாங்கிக்கொண்டோம். அதை எடுத்துக்கொண்டு அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் மிகிஷி அவர்களைச் சந்தித்தோம். அவர், “என்னய்யா இது, பெரியார் மாவட்டத்தில் பெரியார் சிலை வைப்பதற்கு எதிர்ப்பா?” என்று கேட்டுவிட்டு, தாசில்தாருடன் தொடர்பு கொண்டு, பரிந்துரை செய்யச் சொன்னார். ஆனால், ஏனோ? காவல்துறையின் பரிந்துரையை கோராமலேயே, தாசில்தாரர் பரிந்துரை, நகராட்சியின் தீர்மான நகல் ஆகியவற்றை இணைத்து, அவரே ‘காவல்துறையின் ஆட்சேபனையில் உண்மையில்லை’ என்று, பெரியார் சிலையை வைக்க அனுமதிக்கலாம்’ என்று தனது பரிந்துரையுடன் அரசுக்கு அனுப்பிவிட்டார். இப்போது வழக்குரைஞராக இருக்கிற சென்னியப்பன் காவல் துறை அதிகாரி ஜாங்கிட் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவர், கோபி காவல் அதிகாரியிடம் பேசி பரிந்துரைக்க கேட்டுக்கொண்டார். பிற்பாடு அவர்களும் அனுப்பி வைத்தார்கள். பிறகுதான் சிலை வைக்கப்பட்டது. இதில் முக்கியமாக மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் அவர்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும்.

கேள்வி: எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் எதைத் திட்டமிட்டுள்ளீர்கள்?  

பதில்: தற்போது, “தந்தை பெரியார் மாணவர் நேய அறக்கட்டளை” எனும் அறக்கட்டளையை என்னுடைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறேன். இதன் மூலம் மாணவர்களுக்கு தந்தை பெரியார் பற்றி பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி, உரியவர்களுக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். இதில் எனது இணையர் தலைவர், நான் பொருளாளர், மருமகன் செயலாளர்  இன்னொரு மகள் துணைச் செயலாளர். எங்கள் குடும்பமே பெரியார் சிந்தனை வயப்பட்ட குடும்பம் தான். பேரக்குழந்தைகள் வரையிலும்.  தமிழ் கனல், தமிழ்ச்செல்வி, தமிழ் தனு, தமிழ் அமுதன், தமிழ் பிரபாகரன் என்று எல்லோருக்குமே தமிழ் பெயர்கள் தான். எனக்கு இப்போது 86 வயது நடக்கிறது! ஏறக்குறைய 42 ஆண்டுகால இயக்கப்பணியில் எனக்கு முழுமையாக ஒத்துழைப்புக்கொடுத்த எனது இணையர் பத்மாவதி நன்றிக்குரியவராவர். பிறகென்ன, இந்த அறக்கட்டளைப் பணிகளில்தான் எனது இறுதிக்காலம் கழியும். இதில் போதுமான மனநிறைவு நிச்சயமாகக் கிடைக்கும். இந்தத் தெளிவை இந்த இயக்கம்தான் எனக்குக் கொடுத்தது. அந்த நன்றியை எப்படி திருப்பிச் செலுத்துவது? இப்படித்தான்.” என்று கருப்புச்சட்டையை காண்பிக்கிறார்.

”அறிவைத் தேடுவதற்கு போட்டி போடுங்கள்!”, “பிறருக்குத் தொண்டு செய்வதில்தான் மனநிறைவு கிடைக்கும்!” என்ற பெரியாரின் பொன்மொழிகளை நாமும் அசைபோட்டபடியே, அவருக்கேற்பட்ட அதே மனநிறைவுடன் விடைபெற்றுக் கொண்டோம்.

சந்திப்பு: உடுமலை வடிவேல்
உதவி: வழக்குரைஞர் சென்னியப்பன்

படங்கள்: கமலேஷ்

No comments:

Post a Comment