படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் உரை
சென்னை,மார்ச் 24- திராவிட இயக்க சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை, ஆற்றலாளர்களை, ஆய்வாளர்களை பெரியார் திடல் வரவேற்கிறது என்று பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரையாற்றினார்.
சென்னை மாநிலக்கல்லூரி மேனாள் பேராசிரியர், திராவிடர் வரலாற்று ஆய்வுமய்யத்தில் இணைந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைக்கிணங்க பல்வேறு ஆய்வுத் தரவுகளை அளித்து, திராவிட இயக்க சிந்தனையாளராக, எழுத்தாளராக தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன்.
உடல் கொடை அளித்தவர்
அவர் கடந்த 17.3.2023 அன்று இரவு 7 மணியளவில் திடீரென்று மாரடைப்பால் மறைவுற்றார். தகவலறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் மரியாதை செலுத்தினார். மேலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் உடல் கொடையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் அளிக்கப்பட்டது.
பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (23.3.2023) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர் களின் எழுத்தாற்றல், பழகுமுறைகளை எடுத்துச்சொல்லி, அவர் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் இருப்பதா என இடித்துரைத்ததையும் சுட்டிக்காட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழகப் பிரச்சாரச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர், பாரதிதாசனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர் களின் நெருங்கிய நண்பர் பேராசிரியர் மா.செல்வராசன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் சிறப்புரை
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து, அவரால் எழுதப் பட்ட 'திருக்குறளை திரிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்' புத்தகத்தை வெளியிட்டு நினைவேந்தல் உரை ஆற்றினார்.
தந்தை பெரியார் காலந்தொட்டே கல்வியாளர்கள், சிந் தனையாளர்கள் இயக்கத்துக்கு படைக்கலன்களைப்போன்று பலரும் இருந்து வந்துள்ளனர்.
பெரும்புலவர் ந.இராமநாதன், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன், அ.இறையன், கு.வெ.கி.ஆசான், மு.நீ.சிவராசன் உள்ளிட்ட பலர் திகழ்ந்தனர். அந்த வரிசையில் நம்மிடம் இருந்தவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன். அவருடைய பல்வேறு பனிகளுக்கு அடித்தளமாகத் திகழ்ந் தவர் அவர் வாழ்விணையர் மறைந்த ராசம் அம்மையார் ஆவார். அடித்தளமாக இருக்கின்ற அஸ்திவாரங்கள் வெளியே தெரிவதில்லை.
பகுத்தறிவாளர் ஒருவர் மறைவு என்பது சமுதாயத்துக்கே இழப்பு ஆகும் காரணம் பகுத்தறிவாளர் ஒவ்வொருவரும் சமூக விஞ்ஞானிகள் ஆவர்.
நம்மைப் பொறுத்தவரை மூளையைத் தாக்குவதையும், உடலைத் தாக்குவதையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது.
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் 185 நூல்கள், 40 ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் மறைவுக்கு முதலமைச்சர் நேரில் மரியாதை செலுத்தினார். அவருக்கு இயக்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் புத்தகங்களை அரசு நாட்டுடமையாக்க வேண்டும் என்று கோருவது பணத்துக்காக அல்ல, வரக்கூடிய தலைமுறையினருக்கு கருத்து பரவ வேண்டும். பேராசிரியர் ந.க.மங்களமுருகேசனின் எழுத்துகள் ஜீவனுள்ளவை. 'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்றார் புரட்சிக்கவிஞர்.
சென்னையில் பல போராட்டங்களில் பங்கேற்றவர். அந்த நிகழ்வுகள்குறித்து விரிவாக எழுதுவார்.
சுயமரியாதையுடன் வாழ்ந்தவர் பேராசிரியர் மங்கள முருகேசன்.
சுயமரியாதையால் என்றைக்கும் இறப்பு, இழப்பு இல்லை.
உடற்கொடை, விழிக்கொடை,
குருதிக் கொடையில் ஜாதி ஒழிகிறது
அவரது உடலை உடற்கொடை அளிக்கும்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இருந்தபோதிலும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு, உடனே உடலைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். தமிழ்நாடு அரசு, அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உடற்கொடைமூலம் பல மருத்துவர்களை உருவாக்கு வதில் பேராசிரியர் மங்களமுருகேசன் மறைந்தும் மறையாமல் வாழுகிறார்.
அனைவரும் பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகத்தில் இணைய வேண்டும்.
விழிக்கொடை, குருதிக்கொடையில் ஜாதி ஒழிகிறது.
பார்ப்பனர்கள் சங்கர மடத்துக்கு செல்கிறார்கள். சங்கர மடத்தின் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டார். கிரிமினல் குற்ற வழக்கு இருந்தாலும், பாவத்துக்கு ‘கங்கா ஜலம்’ தெளித்துக் கொண்டு, சங்கரமடத்தைக் காப்பதற்கு உயர் பதவியிலிருந்த பார்ப்பனர்கள் பலரும் செல்கிறார்கள்.
தங்கள் குடும்பத்தின் கடமைகளை முடித்துவிட்டோம் என்பவர்கள், ஓய்வுக்குப் பின்னர், அறிவு, ஆற்றல் மிக்கவர்கள், பொதுத்தொண்டுக்கு, திராவிட இயக்கத்துக்கு ஆர்வத்துடன் வரவேண்டும். பெரியார் திடலை நோக்கி வாருங்கள் என்று அழைக்கிறோம்" என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் நிறைவாக பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் மகள் மருத்துவர் தென்றல் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
கலந்துகொண்டவர்கள்
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மோகனா வீரமணி, பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் மகன் ராஜேஷ் கந்தன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், பேராசிரியர்கள், பேராசிரியர் ந.க.மங்கள முருகேசனாரின் மாணாக்கர்கள் உள்ளிட்ட பலரும் நெகிழ்ச் சியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அமுதநிலையம் வீரபாகு சுப்பிரமணியம், இராசாராம் அய்.ஏ.எஸ்., தட்சணாமூர்த்தி, அர்ச்சுனன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், பேராசிரியர் ப.அரங்கசாமி, பேராசிரியர் ப.தேவதாஸ்,வேண்மாள் நன்னன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், வெ.ஞானசேகரன், மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்திய தேவன், கழக அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், இறைவி, தங்க.தனலட்சுமி, தென்மாறன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அரும்பாக்கம் சா.தாமோதரன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment