சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் எனது நினைப்பும்! - (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் எனது நினைப்பும்! - (1)

 சில எண்ண ஓட்டங்கள்: 

45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் எனது நினைப்பும்! - (1)

நமது வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் போது நமது எண்ண ஓட்டங்களும், நிலையும் - நினைப்பும் எப்படியெல்லாம் நம்மை வாட்டின; பாடாய்படுத்தின என்பது ஒரு 45 ஆண்டுகள் ஓடி விட்ட பிறகாவது பொதுவில் பகிர்ந்து கொண்டால் மனம் லேசாகும் - நமது பாரம் குறைவதோடு, மனமும் லேசாகி மேலும் பல கடும் சுமைகளைச் சுமக்க இடம் கிடைக்கு மல்லவா? அதனால் நமது - பல தரப்பட்ட - வாழ் வியல் வாசக நேயர்களிடம் பகிர்ந்து கொள்வதை ஒரு வாய்ப்பாகவே கருதி எழுதுகிறேன்.

காரணம் - நம் இயக்கமும், அதன் செயல் பாடுகளும் இரட்டை நிலைப்பாடு உடையவை அல்ல. திறந்த புத்தகம், தெளிவுள்ள பாதை - அவதூறு பாறைகளால் அடிக்கல் நாட்டப்பட்ட தனிப்பாதை!

அன்னையார்  - மறைந்தார் என்ற செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் எளிதில் மீள முடியவில்லை - முன்பாவது, அதாவது அய்யா என்ற இமயம் சாய்ந்த பிறகு "எல்லாவற்றையும் கவனித்து நம்மை வழி நடத்த நம் அன்னையாக இவர் இருக்கிறார்; அவர் அய்யா அவர்களால் பக்குவப்பட்டு பதமானவர்; அவரது தலைமையின் ஆளுமையை 1957இல் அரசமைப்புச்  சட்ட எரிப்புப் போரில் அய்யாவும் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும் பெருந் தண்டனை பெற்று, வெஞ்சிறையில் வாடிவதங்கி சிலர் பலியான நிலையிலும் அவர் அந்த சூழ்நிலைகளை எப்படி எதிர் கொண்டார்; இயக்கத்தை எப்படி நடத்தினார்" என்பதை நான் அருகில் இருந்து புரிந்ததினால் - தெம்போடும் அம்மாவுக்குத் துணை நின்ற பணியே எம் பணியாக இருந்தது!

அத்தலைமை இடுகின்ற கட்டளையைச் செய்வது தான் நமது பணி; அது நமக்குப் பழக்கப்பட்ட பணிதான்; அன்னையாருக்கு நாம் ஓர் ஏவுகணையாக - இயக்கச் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்பவர்களைத் தக்க வகையில் அடையாளம் கண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் - தளர்ந்த உடல் நிலையுடன் உள்ள அவருடன் அவர் பெறாத பிள்ளையாகவே - அவர் ஆணை களை செயல்படுத்தும் முதல் தொண்டனாகவே நாம் இருந்தோம்.

இந்த இரண்டாம் நிலையில் (Secondary Role) நமக்குப் பொறுப்பு அதிகம் இல்லை; சொன்னதை செய்வதும், செய்வதை நாணயத்தோடும், நேர்மையோடும் - நம்மீது அய்யா  1957இல் நம்பிக்கையை  வைத்து கைதாகிச் சென்றபோது, அருகில் இருந்த என்னை நோக்கி - "நீங்கள் எப்போதும் அம்மாவுடன் அருகில் இருந்து பணி யாற்றுங்கள்"  - என்று கூறியதை கட்டளையாகக் கருதி, சட்டக் கல்லூரிக்குக்கூட இரண்டாம் தர  முக்கியத்துவத்தைத் தந்து - தேர்வில்கூட நான் தோற்றுப் போன முதல் கசப்பான அனுபவத்தைப் பெற்றதைவிட - அம்மாவின் ஆளுமைத் திறமை யையும், அன்பின், அனுபவத்தின் பரிமாணத்தை யும் உணர்ந்து அவர்களிடம் உற்ற பிள்ளையாக, ஒரு தொண்டனாகவே மாறி விட்டதால் - அய்யா மறைவிலிருந்து கழகப் பணியாற்ற பெரிதும் தயக்கமில்லாத மன நிலை தானே வந்து - "பெரியார் பணி முடிப்போம்" என்ற அவரது அழைப்பையே நம் கழகத்தவருக்கு ஆணை யாக்கி அணி வகுத்து பணி முடிக்கத் தூண்டியது.

ஆனால் அம்மா மறைந்துவிட்ட பிறகு அதிலும் ஆளுமை அனுபவம் அற்ற - சொன்னதைச் செய்வதே கட்டுப்பாடு என்று கருதி, தலைமைத்துவ பொறுப்பு முடிவுகளை எதிர்பார்த்து செயல்பட்ட நிலைமை மாறி  - இனி எப்படி பிரச்சினைகளையும், எதிரிகளையும், துரோக சிந்தையாளர்களின் தொல்லையையும் சமாளிக்கப் போகிறோம் என்ற மலைப்பைத் தந்த நிலை.  நம்மை அன்னை அவர்கள் நம்பியதற்குரிய நியாயத்தை உலகுக் காட்டியாக வேண்டிய தனிப் பொறுப்பல்லவா நம் தலைமீது -

இந்தச் சிறு குருவி அந்தப் பெரும் பனங்காயைச் சுமந்து இலக்கை அடைய முடியுமா என்று நினைத்த போதெல்லாம் - தனித்துப் போக, இருளுக்குள் என்னை சிறைப்படுத்திக் கொண்டு - யாருக்கும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மனதில் அழுதேன் - நானே தேற்றிக் கொண்டேன்.

மற்ற சிலர் நினைத்ததைப்போல நான் அதனை எதிர்பார்க்கவும் இல்லை - இயக்க வரலாற்றில் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளோ, ஒப்படைத்த பொறுப்புகளோ விரும்பி, வருந்தி, திட்டமிட்டு பெற்றவைகளே அல்ல - 

எதிர்பாராது கிடைத்து வியப்படையச் செய்து, வினையாற்றிடும் பக்குவத்தை எனக்கு பயிற்சிக் களமாகத் தந்தவைதான்! சிக்கல்கள் நிறைந்த பொறுப்பின் சுமையின் பாரம் அழுத்தியது.

இழிந்த குற்றச்சாற்று சேற்றை வாரி இயக்கத்தின் துரோகப் படலத் தொல்லையாளர்கள் தூற்றுதல் பாணத்தை வீசியபோதெல்லாம் - நான் அய்யா எனக்குச் சொன்ன ஓர் ஆறுதல் அறிவுரையை நினைத்து நினைத்து ஆறுதலும் அமைதியும் கொண்டு, அடாதவர்களை அலட்சியப்படுத்தி, அய்யா வழியில் அம்மாவின் நம்பிக்கை என்ற உற்சாகத்தினால் எனது கடும் பயணத்தைத் துவக் கினேன் - அப்படி என்ன அய்யா சொல்லியிருப்பார் இவரிடம் என்பது தானே உங்கள் கேள்வி - அதனை நாளை பார்ப்போம்!

(வளரும்)



No comments:

Post a Comment