பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத்தென்றல்
கரையாகித் தாகந்தீர் குளங்காத்தார்! உதவும்
கரமாகிப் பெரியாரின் நலங்காத்தார்! வாளின்
உறையாகித் துருவேறாக் கூர்காத்தார்! நீங்கா
உறவாகிப் பெரியாரின் உயிர்காத்தார்! உயர்ந்த
வரையாகி இயக்கத்தின் நலங்காத்தார்! கடமைத்
திறமாகிக் கழகத்தின் வளம்காத்தார்! தாங்கும்
துறையாகிக் கழகமெனுங் கலங்காத்தார்! பெரியார்
துணையாகி மணியம்மை தமிழினத்தைக் காத்தார்!
தொண்டற துறவிக்கும் மேலான துறவுருவம் அம்மா!
சூரியனைச் சுடரவைத்த சூத்திரந்தான் அம்மா!
தன்னலத்தைக் கொடையளித்த பொதுநலன்தான் அம்மா!
தந்தைநலம் பேணவந்த தாய்ச்செவிலி அம்மா!
மண்ணாகி மரங்காத்த வேர்தாங்கி அம்மா!
மரக்கனிகள் மக்களுண்ணத் தந்தவர்தான் அம்மா!
தண்ணளியின் தகைநிறைந்த மகத்துவந்தான் அம்மா!
தந்தைக்கும் தாயான தனித்துவந்தான் அம்மா!
நரியார்கள் நாணமுற நற்றலைமை ஏற்று
நனிசிறப்பாய்க் கழகத்தை வழிநடத்தி வென்றார்!
பெரியாரின் தடம்நடந்து பழித்தோரும் போற்றப்
பெருமையுறப் பணிசெய்தார் அன்னைபெரு மாட்டி!
நெருக்கடியாய்ப் பொய்யுரைத்து நீள்கரங்கள் நீட்டி
நெறித்தனரே மக்களாட்சிக் குரல்வளையை வாட்டி!
பொறுப்பாளர் பல்லோரைக் கொடுஞ்சிறையில் பூட்டிக்
கொடுமைபல புரிந்தனரே அடக்குமுறை கூட்டி!
பொறுக்காதே அன்னையரும் வீதிமன்றம் ஏகி
போராட வந்தாரே கருங்கொடியை ஏந்தி!
மறுப்பார்தான் எவருமுண்டோ அன்னையுற்ற சீரை
வலிமைக்கோர் சான்றான மணியம்மை யாரை!
அன்னைபெயர் பெரியாரின் பெயரோடு வாழும்!
அந்தமில்லாப் புகழ்வெளியைக் கடந்தேதான் நீளும்!
விண்ணிருந்த கதிர்மறைய ஒளிகொடுத்த திங்கள்!
வெளிநிறைக்க வீரமணி விளக்களித்த செம்மல்!
தண்ணளியாய்த் தமிழருக்குத் தகைகொடுத்த தமிழ்த்தாய்!
தமிழர்குல வரலாற்றில் சாதனையாய் நிலைப்பார்!
மண்ணிருக்கும் நாள்வரைக்கும் மறையாதவர் புகழே!
மணியம்மை தொண்டிருக்கும் மானுடநாள் வரையே!
No comments:
Post a Comment