புதுடில்லி மார்ச் 18 நாட்டின் எந்த உயர் நீதிமன்றத்திலும் பெண் தலைமை நீதிபதி இல்லை என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ராகேஷ் சின்கா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரஜிஜு நேற்று (17.3.2023) பதில் அளித்தார். அப்போது, அவர் கூறும்போது, “தற்போதைய நிலவரப்படி உயர் நீதிமன்றங்களில் 775 நீதிபதிகள் பணிபுரிகின்றனர், அவர்களில் 106 பேர் பெண்கள். நாட்டின் எந்த உயர் நீதிமன்றத்திலும் பெண் தலைமை நீதிபதி இல்லை.
நாட்டில் உள்ள 15 லட்சம் வழக்குரைஞர்களில், சுமார் 2 லட்சம் பேர் பெண்கள். நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குரைஞர்களில் இது 15.31% ஆகும். உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 11 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், கீழமை நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் 30 சதவீதம் உள்ளனர்” என்றார். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழா ஒன்றில் அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசும்போது, “கடந்த 70 ஆண்டுகளில் நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது, ஆனால் உயர் நீதிமன்றங்களில் பன்முகத் தன்மையை வழங்குவதற்கான தேவைகளை நிவர்த்தி செய்ய அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது” என்றார்.உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். தலைமை நீதிபதி உட்பட 27 நீதிபதிகளுடன் உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.
கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, உச்ச நீதிமன்றம் இதுவரை 488 வழக்குரைஞர்களுக்கு மூத்தவர் தகுதி வழங்கியுள்ளது, அவர்களில் 19 பேர் மட்டுமே பெண்கள். 1950-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டதில் இருந்து 2013-ம் ஆண்டு வரை 4 பெண் வழக்குரைஞர்கள் மட்டுமே மூத்தவர் தகுதி பெற்றனர். என்றாலும் கடந்த 9 ஆண்டுகளில் 15 பெண் வழக்குரைஞர்களுக்கு மூத்தவர் தகுதி வழங்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, அதிக எண்ணிக்கையிலான பெண்நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் (13), அதைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்திலும் (8) உள்ளனர்.
மணிப்பூர், மேகாலயா, பிகார், திரிபுரா, உத்தராகண்ட் ஆகியமாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் இல்லை என்று ஒன்றிய நீதித்துறையின் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. குவாஹாட்டி, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக்,ஜார்க்கண்ட், ஒடிசா, சிக்கிம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்களில் தலா ஒரு பெண் நீதிபதி மட்டுமே உள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டதில் இருந்து 2013 வரை 4 பெண் வழக்குரைஞர்கள் மட்டுமே மூத்தவர் தகுதி பெற்றனர்.
No comments:
Post a Comment