பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

'துக்ளக்' துர்வாசரே பதில் சொல் பார்க்கலாம்!

மின்சாரம்


"சில தினங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் திராவிடர் கழகத்தின் தானைத் தலைவர் வீரமணி ‘சமூக நீதியும் திராவிட மாடலும்' என்ற தலைப்பில் வீர உரையாற்றினார். நாடே திராவிட மாடலின் வெற்றியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பேசினார்.

என்ன திராவிடம், என்ன மாடல்? இந்த 21ஆம் நூற்றாண்டிலும், ‘திராவிடம் திராவிடம்' என்று சொல்லி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீரமணி போன்றவர்கள் பஜனை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு, கேரளம், கருநாடகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் என்றுதான் இருக்கிறதே தவிர, திராவிடம் எங்கே இருக்கிறது? இல்லாத திராவிடத்தை சொல்லி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் திராவிட மாவது, வெங்காயமாவது?

திராவிடமே இல்லாதபோது, இதில் திராவிட மாடல் எங்கிருந்து வந்தது?

எல்லா மாநில முதலமைச்சர்களும் என்ன வேலை செய்கிறார்களோ, அதைத்தான் இந்த ஸ்டாலினும் செய்து கொண்டிருக்கிறார். ஏதோ இவர் மட்டும் வேறு எந்த மாநில முதல்வரும் செய்யாத வேலைகளைச் செய்து, சாதனை புரிந்துவிட்ட மாதிரி திராவிடம் என்கிறார், திராவிட மாடல் என்கிறார், என்ன பெரிய திராவிட மாடல்?"  (துக்ளக், 15.3.2023, பக். 23).

- இப்படி எல்லாம் பார்ப்பனர்களைத் தவிர - அதிலும் ‘துக்ளக்' சிண்டுகளைத் தவிர வேறு யார் தான் இப்படி எழுத முடியும்?

பார்ப்பனர்கள் இப்படி அலறுவதைப் பார்க்கும் போது திராவிடத்தின் உறுதிப்பாடு மேலோங்கி நிற்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்க ளின் பூணூல் துடிப்பின், ரத்தக் கொதிப்பின் காரணத் தைப் புரிந்து கொள்ள முடியும்.

"திராவிடம்" என்பது "திராவிடர்" என்பது திராவிடர் கழகம் கண்டுபிடித்த சொல்லா?

மனுதர்ம சாஸ்திரத்தில் திராவிடம் பற்றிச் சொல்லப் படவில்லையா?

"பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால் ஹீகம், கீநம், கிராதம், தரதம், கறும், இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டனர்?

(மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 44)

ஓ, மனுதர்மமே சொல்லிவிட்டதா? அப்படியானால் ஏற்றுக் கொள்கிறோம் என்று சரணடைவார்களா?

நாம் சொல்லுவது ஒரு புறம் இருக்கட்டும்; அவாளே எழுதி வைத்துள்ளார்களே!

"ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திரா விடர்கள், தஸ்யூக்கள் என்றும், ராட்சதர்கள் என்றும், தானவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிடர் நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால், இப்படி எழு தினார்கள்." 

- (C. S. சீனிவாசாச்சாரி M.A., M.S., ராமசாமி அய்யங்கார் M.A.,  ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, "இந்திய சரித்திரம், முதல் பாகம்" என்னும் புத்தகத்தில் "இந்து இந்தியா" என்னும் தலைப்பில் 16, 17-ஆவது பக்கங்கள்)

ராமசாமி அய்யங்கார் எழுதிய "இந்திய சரித்திரம் முதல் பாகம்", "இந்து இந்தியா" என்னும் தலைப்பில், பக். 16, 17இல் காணப்படுகிறதே - துக்ளக் துர்வாசரே என்ன பதில்?

சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று அய்ராவதம் மகாதேவன் சொன்னது எந்த அடிப் படையில்?

இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என்றும், அசாம் வாழ் மக்கள் திராவிடர்களே என்றும் உலக மேதை அண்ணல் அம்பேத்கர் கூறினாரே - அம்பேத்கரைவிட மெத்தப் படித்த ஆய்வு செய்தவர்களா இந்த ஆரியப் பார்ப்பனர்கள்!

எங்கள் ஆரிய நாடு, ஆரிய நாடு என்று எத்தனை எத்தனை இடங்களில் பாரதியார் எழுதினார். அதைப் பற்றி விமர்சனம் செய்யாதது ஏன்?

வெகுதூரம் போவானேன்? இந்தியாவின் தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ளதே - "திராவிடம்" அதற்கு என்ன பதில்?

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தரும், குப்பம் பல்கலைக்கழகத்தில் அதன்பின் துணைவேந்தராக இருந்தவரும், திருவனந்தபுரத்தில் திராவிட மொழி ஆய்வு நிறுவனம் நடத்தியவருமான பேராசிரியர் வி.அய்.சுப்பிரமணிய அய்யர் "திராவிடன் என்சைக்ளோபீடியா" தயாரிக்கவில்லையா?

அதனை அன்றைய பிஜேபி ஆட்சியின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷியிடம் கொடுத்தபோது அமைச்சர் ‘பெருமகன்' என்ன சொன்னார்?

"இந்தத் திராவிடத்தை எடுத்து விடலாமே!" என்று கேட்டபோது, செவிளில் அறைந்தது போல "தேசிய கீதத்தில் உள்ள திராவிடத்தை நீக்கி விடுங்கள், நானும் எடுத்து விடுகிறேன்" என்று சொன்னதுதான் தாமதம் - ஆசாமி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வில்லையா?

1891ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கு பிராமணர், மராட்டியர் குடியேறிய முசல்மான் தவிர சென்னை மாகாணத்து மக்கள் தொகையினர் முற்றிலும் திராவிடர்கள் என்றும், மனு உருவாக்கிய ஜாதி முறை திராவிட இனங்களுக்கு அன்னியமானது என்றுக் குறிப்பிட்டுள்ளதே! (சென்சஸ்  இண்டியா, 1891 Vol XIII Madras Report Page, 211)

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்த இஞ்சி தின்ற கூட்டம்?

"இந்து" என்றால் யார்? இந்துஸ்தானம் என்பது எது? திராவிடர் யார்? திராவிட நாடு என்பது எது? என்ற பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் எந்த வீரரும், வீராங்கனையும் வேறு எங்கும் போக வேண்டாம். நல்ல படிப்பகத்துக்குப் போகட்டும், அகராதியைப் பார்க்கட்டும், இலக்கியங்களைக் காணட் டும், உண்மை விளங்கும். நேரம் கிடைக்காது என்பர் - உண்மை! சுருக்கித் தொகுத்து நாமே தருகிறோம் படித்து உணரட்டும்.

ராமேஸ் சந்திரதத் எழுதிய "புராண இந்தியா"

ராமேஸ் சந்திர முசும்தார் எழுதிய "பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரீகமும்"

சுவாமி விவேகானந்தர், "இராமாயணம்" என்னும் தலைப்பில் பேசிய பேச்சு

1922 கேம்பிரிட்ஜ் பிரசுரித்த, "பழைய இந்தியாவின் சரித்திரம்"

ராதா குமுத முகர்ஜி எழுதிய "இந்து நாகரீகம், ரிக்கு வேதம்"

ஜேம்ஸ் மர்ரே எழுதிய "அகராதி"

பண்டர்கார் கட்டுரைகள்.

டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய "தென்னிந்தியாவும்; இந்தியக் கலையும்"

பி.டி.  சீனிவாசய்யங்கார் எழுதிய "இந்திய சரித்திரம்"

ஜெகதீச சந்தர்டட் எழுதிய "இந்தியா அன்றும் இன்றும்"

ஏ.சி.  தாஸ் எழுதிய "வேதகாலம்"

சி.எஸ்.  சீனிவாசாச்சாரியார் எழுதிய "இந்திய சரித்திரம்" "இந்து இந்தியா"

எச்.ஜி. வெல்ஸ் எழுதிய "உலக சரித்திரம்"

சகல கலா பொக்கிஷம் என்னும் "நியூ ஏஜ் என் சைக்ளோ பீடியா"

சி.ஜி.. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய "இந்திய சரித் திரப் பாகுபாடு"

ஹென்றி பெரிஜ் 1865-இல் எழுதிய "விரிவான இந்திய சரித்திரம்"

இ.பி. ஹாவெல் எழுதிய "இந்தியாவில் ஆரிய ஆட்சி"

ஜி.எச். ராலின்சன் எழுதிய "இந்தியா"

நாகேந்திரநாத் கோஷ் எழுதிய "ஆரியரின் இலக்கியமும் கலையும்" 

வின்சென்ட் ஏ. ஸ்மித் எழுதிய "ஆக்ஸ்ஃபோர்டு இந்திய சரித்திரம்."

இம்பீரியல் இந்தியன் கெஜட்.

சர். வில்லியம் வில்சன் ஹண்டர் எழுதிய "இந்திய மக்களின் சரித்திரம்"

ராகோசின் எழுதிய "வேதகால இந்தியா"

இவ்வளவு ஆராய்ச்சியாளர்களிடமும் ‘தப்பி’ பிறகு நம்மிடம் வரட்டும், வீர சவர்க்காரும், வீர வரதரும், வயது முதிர்ந்த (ஆனால் விவேக முதிர்ச்சிக்கு நாம் உறுதி கூற முடியாது) திவான்பகதூர் சாஸ்திரியாரும்!

இந்துஸ்தானம் என்ற பகுதி, குஜராத், இராஜஸ்தான் அய்க்கிய மாகாணம் ஆகிய பிரதேசம் கொண்ட இடம்.

சரித பாகங்களை ஒட்டியும் விளக்கவும் அவ்வப் போது வெளியிடப்படும் பூகோளப் படங்களில் இந்துஸ் தானம் என்ற பகுதி தெளிவாகக் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. எங்கே போய் அந்தப் படங்களைத் தேடிக் கொண்டிருப்பது? என்று இந்து மகாசபைக்காரர் கவலைப்படுவர். உண்மைதான். அவர்களுக்கு வேலை அதிகம். தேடித் திரிய வேண்டாம். நாமே குறிப்புத் தருகிறோம்.

கான்ஸ்டேபிள் கம்பெனியார் வெளியிட்ட பூகோளப் பாடப் புத்தகத்தில் (Atlas)  இந்தியா எனும் பூபாகத்தில் இனவாரி வட்டாரமும், மொழிவாரி வட்டாரமும் பிரித்து வேறு வேறு வர்ணம் தீட்டப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இரு விதமான படங்களிலும், திராவிடம் தனியாக இருக்கக் காணலாம்.

- அறிஞர் அண்ணாவின் "ஆரிய மாயை" (பக். 20, 21)

1885-1887 ஆண்டுகளில் வெளிவந்த பிரிட்டிஷ்-இந்திய அரசின் அறிக்கையானது  (Imperial Gazette of India)  என்ன சொல்லுகிறது?

தென்னிந்தியாவில் இருந்த மக்களை சூத்திரர் களாகவோ, பிராமணர்களாகவோ, பறையர்களாகவோ அதாவது தீண்டத்தகாதவர்களாகவோ பதிவு செய் திருந்தது.

1891ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி சென்னை மாகாணத்தில் உள்ள பிராமணர்கள், மராட்டியர்கள், முஸ்லிம்களைத் தவிர மற்ற மக்களைத் திராவிடர்கள் என்று பதிவு செய்ய வில்லையா?

1901ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்னை மாகாண மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது, சென்னை மாகாணத்து மக்கள் தொகையைப் பிராம ணர்கள் 3.4 சதவீதம், சூத்திரர்கள் 94.3 சதவீதமாகக் குறிப்பிட்டுள்ளதே!

எடுத்துச் சொன்னால் ஏடுகள் தாங்காது. - அறிவு நாணயம் இந்த ஆரியப் பார்ப்பனர்களுக்கு இருக்குமே யானால் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்!

No comments:

Post a Comment