ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உள்பட்டவர் என உச்சநீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருக்கிறது. பஞ்சாப் மாநில சட்டமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. 3.3.2023 அன்று மாநில சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரை நடத்த பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்திருந்தது. நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரை நடத்துவதற்கான அறிவிக்கை வழங்குமாறு சட்டமன்றம் சார்பாக மாநில ஆளுநருக்குக் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு அனுமதி வழங்க மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்துவிட்டார். "நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்றதற்கு பிறகு அனுமதி வழங்கப்படும்" என ஆளுநர் சார்பாக தெரிவிக்கப்பட்டதாக பஞ்சாப் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆளுநரின் முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 174இன்படி சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கு அனுமதி மறுக்க மாநில ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், இது ஆளுநருடைய அப்பட்டமான விதிமுறை மீறல் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து 27.2.2023 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், "ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவு களுக்கு உள்பட்டவர்" என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஆளுநர் அமைச்சரவையின் முடிவுகளுக்கு உள்பட்டவர் என ஏற்கெனவே பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத்தொடரை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பஞ்சாப்பைத் தொடர்ந்து டில்லியிலும் ஆம் ஆத்மி அரசு மற்றும் மாநில ஆளுநர் இடையே பெரும் மோதல் போக்கு வெடித்துள்ளது. கேரளா, தமிழ்நாடு போன்ற பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களின் அதிகார அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், ஒரு மாநில நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரை கூட்ட மாநில ஆளுநர் அனுமதி மறுப்பது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேறு எந்தக் காலத்தையும் விட, ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் பிஜேபி அமர்ந்தது முதல், ஆளுநர்களை அவர்கள் பயன்படுத்தும் விதம் அநாகரீகமாக இருக்கிறது.
ஆளுநர் என்றால் ஒரு கவுரவ சின்னமாக, அவர்களுக் கென்றுள்ள வரையறுக்கப்பட்ட பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். அந்த நிலை பிஜேபி ஆட்சிக் கால கட்டத்தில் குப்புறத் தள்ளப்பட்டு விட்டது.
ஆளும் பிஜேபியின் அப்பட்டமான அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் "ஆமாம் சாமி - ஆணைக்கு அடி பணிய காத்திருக்கிறேன்!" என்று ஆயிரம் சலாம் போடும் தலையாட்டிப் பொம்மைகளாக ஆளுநர்கள் ஆக்கப்பட்டு விட்டனர் என்பது மாபெரும் அவலமாகும்.
ஆளுநர் ஒருவர் அரசியல் கட்சி பிளவுபட்டு இரு அணிகளாக சிதறிய நிலையில், அந்த இரு அணித் தலைவர்களின் கைகளைப் பிடித்து இணைப்பது அப்பட்டமான அரசியல் அல்லவா!
ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டிய "மாண்பமை" பொருத்தியவராக இருப்பதற்குப் பதிலாக, அப்பட்ட அரசியல்வாதியாக நடந்து கொள்ளலாமா?
நள்ளிரவில் சட்டமன்றத்தைக் கூட்டும் சிறுபிள்ளைத்தனம் ஓர் ஆளுநரால் மகாராட்டியத்தில் அரங்கேறவில்லையா?
தமிழ்நாட்டு ஆளுநர் எப்படி எல்லாம் நடந்து கொள் கிறார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அடங்கிய சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவது என்பது வெறும் சம்பிரதாயமே!
ஆனால் அதனைத் தனக்குத் தனித்த ஏகோபித்த அதிகாரம் கொண்டது - எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றால், சட்டமன்றம் எதற்கு? ஆளுநர் ஆட்சி மட்டும் இருந்தால் போதும் என்ற நினைப்பு இன்றைய பாசிச ஆட்சியின் சித்தாந்தமாக இருக்கிறது என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் சேர்த்து உச்சநீதிமன்றம் குருதிப் பீறிடும் அளவுக்கு ஆழமான குட்டை வைத்திருக்கிறது - இனி மேலாவது நற்புத்தி ஒன்றிய அரசுக்கும், ஆளுநர்களுக்கும் வருமா? எங்கே பார்ப்போம்!
No comments:
Post a Comment